தென்காசியில் விவசாயி உயிரிழந்த வழக்கில் வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகில் உள்ள வாகைக்குளம் கிராமத்தை சார்ந்த விவசாயி முத்து என்பவரை கடந்த ஜூலை 22 அன்று இரவு விசாரணை என்கிற பெயரால் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

image

மந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட வாகைக்குளம் கிராமத்தில் வீட்டுக்கு அருகே உள்ள தனது தோட்டத்தில் மின்சார முள்வேலி அமைத்து இருந்ததாகவும், அதற்காக விசாரணைக்கு அழைத்து சென்றதாக தற்போது பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகின்றனர். விசாரணையின் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்ததாக கூறி கொலை பாதக செயலை மூடி மறைக்க முயற்சிக்கின்றனர். அவரை அழைத்துச் செல்லும் போது அவரது உறவினர்களுக்கு தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இரவு சுமார் 11.30 மணி அளவில் சிவசைலத்தில் உள்ள கடையம் வனச்சரக அலுவலகத்தில் இருந்து விவசாயி முத்துவுக்கு உடல் நிலை சரியில்லை என உறவினர்களுக்கு தகவல் வந்துள்ளது. உறவினர்கள் சென்று பார்த்த போது முத்துவின் உயிர் பிரிந்திருந்தது. அப்போதும் வனத்துறையினர் மயக்க நிலையில் இருப்பதாக தெரிவித்து உள்ளனர். கடையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவரது மரணம் மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

image

எனவே, அவரது மரணத்திற்கு காரணமான வனத்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும், விவசாயி முத்து குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.