கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமிதாப் பச்சனின் மருமகள் ஐஸ்வர்யா பச்சன் மற்றும் பேத்தி ஆராத்யா இருவரும் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சைக்குப் பிறகான பரிசோதனையில் இருவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததால் 11 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அமிதாப், “என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களாக மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொரோனாவில் ஏற்பட்டுள்ள தனிப்பட்ட அனுபவங்களை சமூகவலைதளத்தில் எழுதிவருகிறார். ஏற்கெனவே, தனிமை வார்டில் இருந்தால், ஒரு நோயாளியின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்.
மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை மருத்துவப் பாதுகாப்பு உடைகளை அணிந்திருப்பதால், ஒரு வாரம் யாரையும் பார்க்காமல் இருப்பது நோயாளியின் மனதைப் பாதிக்கும் என்றும், இந்த வாய்ப்பை நான் இரவில் பாடுவதற்குப் பயன்படுத்திக்கொண்டதாகவும் எழுதினார்.
தற்போது மருமகளும் பேத்தியும் மருத்துவமனை வாசத்திற்குப் பிறகு வீடு திரும்பிய மகிழ்ச்சியை ஆனந்தக் கண்ணீருடன் எழுதியுள்ள அமிதாப், “இறைவா… உன் ஆசீர்வாதங்கள் எல்லையற்றவை” என்று தெரிவித்துள்ளார்.