கொரோனா ஊரடங்கில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள்ளே மக்கள் முடங்கியிருந்தாலும் சைபர் க்ரைம் குற்றங்கள் புதுசு புதுசாக நடந்துகொண்டிருக்கிறது. சென்னை அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் புதிய சைபர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸாரிடம் புகார்களை ஆன்லைனில் கொடுத்துள்ளனர்

Rerpresentational Image

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்கள், தங்களின் விவரங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர்.

“நான் தூங்கிக்கொண்டிருந்தபோது மணி 12 இருக்கும். போன் அடிக்கும் சத்தம் கேட்டு இந்த நேரத்தில் யார் என்ற கேள்வியோடு எடுத்தேன். பெயர் வரவில்லை. நம்பர் மட்டும் இருந்தது. அவசர தேவையாக இருக்கும் எனக் கருதி போனை எடுத்தேன். ஹலோ என்று கூறியதும் எதிர்முனையில் ஒரு ஆண் குரலில் ஹலோ என்று பதில் வந்தது. உடனே நீங்கள் யாரு என்று நான் கேட்டதற்கு எதிர்முனையில் பதில் இல்லை. அமைதியாக இருந்ததும் ஹலோ நீங்கள் யாரு என்று சற்று குரலை உயர்த்தி கேட்டேன். அதற்கு எதிர்முனையில் பேசிய ஆண் குரல், உங்கள் புரோஃபைலை ஃபேஸ்புக்கில் பார்த்தேன். பார்த்ததும் பிடித்துவிட்டது. எவ்வளவு அமவுன்ட் என்று கூறினால் அடுத்து மேற்கொண்டு பேசலாம் என்று கூறினார்.

உடனே, நீங்கள் யாரு மிஸ்டர். இந்த நேரத்தில் இப்படி பேசுற என்று கேட்டவுடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பிறகு நானும் தூங்கிவிட்டேன். அதன்பிறகும் நிறைய போன் அழைப்புகள் வந்தன. அதில் பேசியவர்கள் இரட்டை அர்த்தத்திலேயே பேசினர். அதனால் நான் ஃபேஸ்புக்கைப் பார்த்தபோது, அதில் என்னுடைய போட்டோவை மார்பிங் செய்து செல்போன் நம்பரையும் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதற்கு கீழ் ஒரு மணி நேரத்துக்கு குறிப்பிட்ட தொகை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதுகுறித்து யாரிடமும் ஷேர் செய்ய முடியாமல் இருந்தேன்.

Facebook | பேஸ்புக்

என்னுடைய வாட்ஸ் அப்பிற்கும் தவறான மெசேஜ்கள் வந்தன. தினந்தோறும் தேவையில்லாத போன் அழைப்புகள், மெசேஜ்களால் சொல்ல முடியாத வேதனைகளை அடைந்தேன். இந்தச் சமயத்தில்தான் தைரியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகாரளித்தேன். அப்போதுதான் அம்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் குடியிருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற தொல்லைகள் இருப்பது தெரியவந்தது. எங்களுக்கே தெரியாமல் எங்களுடைய செல்போன் நம்பர்கள், புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்தது தெரியவந்தது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் 2 குழந்தைகளின் தாய்.

Also Read: சென்னை: மூதாட்டிக்கு அதிகாலையில் பாலியல் வன்கொடுமை! மர்ம நபரைத் தேடும் போலீஸ்

தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கும் இளம்பெண் ஒருவர், “என்னுடைய செல்போன் நம்பருக்கு அடிக்கடி கால்கள் வரும். எடுத்து பேசினால் அசிங்கமாகப் பேசுவார்கள். அதனால் இணைப்பை துண்டித்துவிடுவேன். அப்போதுதான் ஒருத்தன், ஃபேஸ்புக்கில் மெசேஜ் போட்டுவிட்டு, போன் அடித்தால் ஏன் கட் பண்ணுகிறாய் என்று கேட்டான். அதற்கு நான் அப்படிப்பட்டபெண் இல்லை என்று கூறினேன். அதோடு என்னுடைய செல்போன் நம்பரை உங்களுக்கு யார் கொடுத்து என்று கேட்டதற்கு ஃபேஸ்புக்கிலிருந்து கிடைத்ததாகக் கூறினார். எனக்கே தெரியாமல் என்னுடைய ஃபேஸ்புக்கை ஹேக்செய்து போட்டோவை மார்பிங் செய்து செல்போன் நம்பரையும் பதிவு செய்தது தெரிந்தது. உடனே நானும் ஆன் லைன் மூலம் புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.

வாட்ஸ்அப்

அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் குடியிருக்கும் பெண்களின் செல்போன்கள், மார்பிங் போட்டோக்கள் சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அதைப் பதிவு செய்தவர்கள் யாரென்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக ஆன்லைன் மற்றும் தபாலில் புகாரளிக்கலாம் எனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தேவையில்லாத போன் அழைப்புகளை பெண்கள் எடுக்க வேண்டாம் என்றும் போலீஸார் அறிவுரைக் கூறியுள்ளனர். மேலும், சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தப்பிக்க முடியாது என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.