கடந்த ஆண்டு சீனாவில் மட்டும் இருந்த கொரோனா வைரஸ், இப்போது நம் ஊர் தெருக்களுக்கும் வந்துவிட்டது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அதில், சிலர் உயிரிழந்தும் வருகின்றனர். ஆனால், நம்மில் பலரும் இவையெல்லாம் எங்கேயோ, யாருக்கோ நடக்கிறது என கண்டும் காணாமல் சென்றுகொண்டிருக்கிறோம்.

நமது பக்கத்து வீட்டுக்காரர்கள், உடன் பணி செய்பவர்கள், உற்றார் உறவினர் என அனைவரிடமும் நல்ல உறவில் இருப்போம். அதுவே அவர்களுக்கு கொரோனா வந்துவிட்டால், கொடிய வார்த்தைகளால் திட்டி, சபித்து அவர்களை விட்டு விலகும் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

Also Read: 444 கொரோனா மரணங்கள்… உண்மை என்ன?

கொரோனா வராமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை கொடுக்க மருத்துவக் குழு இருக்கிறது. அதுவே ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துவிட்டால்..? அவர்களது ரத்த சொந்தங்கள்கூட நெருங்குவதற்குத் அனுமதி இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் உடல்களை, நல்லடக்கம் செய்யும் மகத்தான பணியை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள்.

உடல் அடக்கம் செய்யும் பணியில் த.மு.மு.க

கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும், மனிதம் மரித்துப் போய்விடக் கூடாது என்பதற்காக, அந்தப் பணியை செய்து வருகின்றனர்.

கோவையிலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை த.மு.மு.க-வினர் தொடர்ந்து அடக்கம் செய்து வருகின்றனர். அவர்களின் பணிகளை நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் களத்துக்கு சென்றோம். கோவையில் கொரோனா வைரஸால் உயிரிழந்த 55 வயது முதியவரை அடக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. முதலில் ஜே.சி.பி உதவியுடன் குழி தோண்டப்பட்டது. சிறிது நேரத்தில் அரசின் அமரர் ஊர்தி வந்தது.

உடல் அடக்கம் செய்யும் பணியில்…

த.மு.மு.க-வில் 6 பேர் மட்டும் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த பி.பி.இ கிட்களை அணிந்தனர். ஒரு காடா துணியை விரித்தனர். ஏற்கெனவே துணி சுற்றி, ஒரு பெரிய பையில் மூடப்பட்டிருந்த உடலை எடுத்து ஸ்ட்ரெச்சரோடு, காடா துணி மீது வைத்தனர். பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு உடலை தூக்கினார்கள்,

தோண்டப்பட்டிருந்த குழியில், ஒரு மரப்பலகை வைத்து அதில் உடலை மெதுவாக இறக்கினார்கள். பின்பு, ப்ளீச்சிங் பவுடரைப் போட்டு, மண்ணையும் போட்டு குழியை சமன் செய்தனர். அந்த இடத்தில் மீண்டும் ப்ளீச்சிங் பவுடர் போட்டு, ஒரு மரக்கிளையையும் நட்டனர். அருகில் தோண்டப்பட்டிருந்த மற்றொரு குழியில், பி.பி.இ கிட், கிளவுஸ், மாஸ்க் அனைத்தையும் போட்டு, அந்தக் குழியை மூடினார்கள்.

உடல் அடக்கம் செய்யும் பணியில்…

இதையடுத்து, அருகில் இருந்த ஒரு தண்ணீர் பைப்பில் குளித்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய அந்தப் பணி முடியும்போது, மதியம் 2 மணி ஆகிவிட்டது. “சார் சாப்பிட்டுவிட்டு, மதுக்கரையில் இன்னொரு உடலை அடக்கம் செய்ய வேண்டும்” என்று சொல்லி அங்கிருந்து கிளம்பினார்கள்.

த.மு.மு.க கோவை மாவட்ட துணை செயலாளர் ஆசிக் அகமது, “கொரோனா ஊரடங்கு தொடங்கியபோதே, உணவு கொடுப்பது, இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு பி.பி.இ கிட் மற்றும் அத்தியாவசிய பயன்பாட்டுக்கான பொருள்களை கொடுப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வந்தோம். பொதுவாகவே, சேவை செய்வது எங்களது அமைப்பில் மிக முக்கியமான பணி. கொரோனாவுக்கு முன்பே ஆதரவற்ற சடலங்களை நாங்கள் அடக்கம் செய்வோம். தொடர்ந்து பணிகளைச் செய்து வந்தோம்.

உடல் அடக்கம் செய்யும் பணியில்…

Also Read: கொரோனாவில் மலர்ந்த மனிதநேயம் -அரசு அதிகாரியின் சடலத்தை தகனம் செய்ய உதவிய த.மு.மு.க-வினர் #Lockdown

புதுச்சேரியில் கொரோனாவால் பலியானவரின் உடல் குழியில் வீசப்பட்ட சம்பவம் மற்றும் சென்னையில் மருத்துவர் ஒருவரின் உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களைப் பார்த்து மிகவும் வேதனையடைந்தோம். கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்யலாம் என முடிவெடுத்தோம்.

மருத்துவமனைகளில் பேசினோம். `கொரோனாவால் உயிரிழந்த உடல்களில் இருந்து நோய் பரவாது. உடல் முழுவதும் மூடப்பட்டு பாதுகாப்பாகத்தான் கொடுப்போம். நீங்கள் அந்த உடலை அப்படியே குழியில் இறக்கினால் போதும்’ என்று நம்பிக்கை கொடுத்தனர். உடனடியாகப் பணிகளைத் தொடங்கினோம். கோவையில், இப்போதுவரை 12 உடல்களை அடக்கம் செய்துள்ளோம். தமிழகத்தில் 340-க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துவிட்டோம்.

உடல் அடக்கம் செய்யும் பணியில்…

எந்த பாரபட்சமும் பார்க்காமல் அனைத்து மத சகோதர, சகோதரிகளின் உடல்களை அடக்கம் செய்து வருகிறோம். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. வேலை இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டுதான் இந்தப் பணியைச் செய்கிறோம். `இது வேண்டவே, வேண்டாம்’ என்று எங்களது குடும்பத்தினர் கெஞ்சுகிறார்கள்.

ஆனால், நாமும் இல்லாவிட்டால், கஷ்டம் என்பதால் பல்வேறு சவால்களை கடந்து இந்தப் பணிகளைச் செய்து வருகிறோம். இதற்கான அனைத்துச் செலவுகளையும் எங்களது அமைப்புடையதுதான். சில இடங்களில் மட்டும் அரசு தரப்பில் செய்கின்றனர். எங்களது அமைப்பில் உள்ளவர்கள் குழுவினராகப் பிரிந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

உடல் அடக்கம் செய்யும் பணியில்…

ஒருநாள் இந்தப் பணியில் இருப்பவர்கள், அடுத்த 5 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். நோய் எதிர்ப்பு சக்திக்காக, ஹோமியோபதி மாத்திரைகளை சாப்பிடுகிறோம். நல்ல ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுகிறோம். மத்தவங்க செய்யத்தயங்குற வேலை… அதனாலதான் செய்யுறோம்.

நான் பார்த்த வரையில் இதைவிட ஒரு கொடுமையான நோய் வேறு இல்லை. ஒரு உடலுக்கு, உடன் ஒரே ஒரு நபர் மட்டுமே வந்திருந்தார். ரத்த சொந்தங்களே வருவதற்கும், உடலைத் தொட்டு அழுவதற்கும்கூட முடிவதில்லை. எதிரிக்குக்கூட இந்த நோய் வரக்கூடாது. விரைவில், கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து, இதில் இருந்து நாம் மீண்டு வர வேண்டும். அதுவரை, மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்று நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

உடல் அடக்கம் செய்யும் பணியில்…

விரைவில் இந்த நோயில் இருந்து மீண்டும் உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்ப வேண்டுமென்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.

இக்கட்டான நேரத்தில் உயிரை பணையம் வைத்து களப்பணியாற்றி மனிதத்தின் மாண்புக்கு சாட்சியாக இருக்கும் சகோதரர்களுக்கு வாழ்த்துகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.