உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. தொடர் ஊரடங்கால், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், கொரோனாவால் வேலைவாய்ப்பை இழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வீட்டிலேயே முடங்காமல் மாற்றி யோசித்து கோவிட்-19 என்ற பெயரில் ஆண்களுக்கான ரெடிமேட் கடையைத் தொடங்கியுள்ளனர்.

கோவிட்-19 மென்ஸ் வியர்

கடையின் உரிமையாளர்களான முகமது ரஷித் மற்றும் அஸ்லாம் கான் ஆகியோர் கடைக்கு கோவிட்-19 என்ற பெயர் வைத்ததோடு அல்லாமல், கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

முகமது ரஷித்திடம் பேசினோம், “புதுக்கோட்டைதான் எங்களுக்கு சொந்த ஊர். நான் சென்னையில் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். அஸ்லாம் கான், என்னோட சொந்தக்கார பையன்தான். அவரு ஓசூர்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தார்.

ரெண்டு பேருக்குமே கொரானாவால வேலை இல்லை. ஊருக்கு வந்திட்டோம். பரபரப்பா வேலை பார்த்துட்டு இப்போ சும்மா இருக்கிறது சுத்தமாகவே பிடிக்கலை. அப்பதான், ரெண்டு பேரும் கலந்து பேசி ஏதாவது ஒரு தொழில் தொடங்கலாம்னு முடிவு பண்ணோம். பெரிய முதலீடு எல்லாம் இல்லை. இந்த நேரத்துல தொழில் தொடங்கினால் தொழில் என்னவாகுமோ என்கிற பயமும் இருந்துச்சு. பயத்தை எல்லாம் தூக்கிப்போட்டுட்டு ரெடிமேட் கடை வைக்கலாம்னு ரெண்டு பேருமே சேர்ந்து முடிவு பண்ணிட்டோம். என்ன கடை வைக்கலாம்னு ஒரு நாள்லயே முடிவு பண்ணிட்டோம்.

கோவிட்-19 மென்ஸ் வியர்

ஆனா, கடைக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு முடிவு பண்றதுக்கு ரெண்டு, மூணு நாள்கள் ஆகிருச்சு. ஐ.டி-யில் இருந்ததால டிஜிட்டல் மார்க்கெட்டிங் பத்தி ஓரளவுக்குத் தெரியும். கொரோனா தானே எங்களோட வேலைவாய்ப்பை பறிச்சுது, அதனால அந்த கொரோனாவ வச்சுத்தான் நாம முன்னேறணும்னு முடிவு பண்ணி கோவிட்-19 கடைக்கு பெயர் வச்சோம். கடையைப் பார்த்துப் பார்த்து உருவாக்கியிருக்கோம். இப்போ கடைக்கு வர்றவங்க சிலர் பெயரைப் பார்த்துவிட்டுத்தான் கடைக்கு வந்தோம்னு சொல்லி வாங்கிட்டு போறாங்க. பெயர் மார்க்கெட்டிங் ஒர்க் அவுட் ஆகிருச்சு.

Also Read: `கொரோனாவால் வேலை இழந்தவர்கள் எங்களிடம் வரலாம்!’ – அமேசான் நிறுவனர் அழைப்பு

எதனால, எங்க வேலையை இழந்தோமோ அத வச்சே இன்னைக்கு முதலாளி ஆகியிருக்கோம். பெயர் வச்சா மட்டும் போதாது, வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் தரமான ஆடைகளைக் கொடுக்கணும். ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்யும் முயற்சியிலும் இறங்கியிருக்கோம். கடை ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியும், இப்பவும் பொதுமக்கள்கிட்ட கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். அதனாலயே, பொதுமக்கள் மத்தியில எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுருக்கு.

கோவிட்-19 மென்ஸ் வியர்

நாம சாப்பிடுகிற கீரைக்குக்கூட இன்னைக்கு தேவை இருக்கு. கொஞ்ச நேரம் உட்கார்ந்து யோச்சிச்சா போதும். பெரிய முதலீடு எல்லாம் இல்லாம கீரையைக்கூட பெரிய அளவில் மார்க்கெட்டிங் பண்ணலாம். அதனால, வேலையில்லைன்னு சொல்லி இளைஞர்கள் புலம்பாமல், கொஞ்ச நேரம் உட்காந்து யோசித்தால், கண்டிப்பா ஏதாவது ஒரு துறையில் சாதிக்கலாம்” என்றனர் தன்னம்பிக்கையுடன்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.