தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் இரண்டு லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில், மருத்துவர்கள் ஓய்வின்றி தொடர்ச்சியாக பணியாற்றும் நிலை உள்ளது.

தங்கள் வீடுகளுக்கும் செல்ல முடியாமல், வெளியிலும் செல்ல முடியாமல் தொடர்ந்து கொரோனா வார்டில் பணியாற்றுவதால் கடுமையான மன அழுத்தத்தையும், பணிச் சுமையையும் எதிர்கொண்டு வருகின்றனர். மறுபுறம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வேளையில்,  அவர்களுக்கு நோய்த் தொற்றுக்குள்ளாகும் நிகழ்வுகளும் நடந்தேறி வருகிறது.

கொரோனாவுக்கு எதிரான போரில் வீரர்களுக்கான உடைகள் அணியாத போர் வீரர்களாக உள்ள மருத்துவ பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அழுத்தங்கள் என்ன? கொரோனா வார்டில் பணியாற்றி வரும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அனு ரத்னாவிடம் பேசினோம்

‘’மார்ச் 23 அன்று கணவர் மற்றும் குழந்தைகளை கண்டேன். அதன்பின் இந்நாள் வரையில் ஒரே ஒரு நாள் சிலமணி நேரம் மட்டுமே அவர்களை கண்டேன். இனி என்று காண்பேனோ தெரியவில்லை. காரணம் இந்த கொரோனா பணிகளில் நான் இரவு பகலாக பணி புரியும் போது நாம் பாதிக்கப்பட்டாலும் நம் குடும்பம் பாதிப்பு அடைய கூடாதென்ற உணர்வு  தான்.

imageபரபரப்பான நாளின் இறுதியில் இரவில் சற்று கண்களை மூடி இருக்கும் வேளையில் என் குழந்தைகளின் பிம்பங்கள் என் கண்முன் வந்து நிற்கும். அவர்களை பிரிந்து இருப்பது பெரிய வேதனையை தருகிறது. இரவு பகல் பார்க்காமல் கொரோனா பணி புரிவதால் எந்நேரமும் நோய் தொற்றுக்கு நான் ஆளாக நேரிடும் என அறிவேன். ஆனால் அதை எல்லாம் பெரிதாக  பொருட்படுத்தவில்லை.

வாழ்நாளில் இப்படியான பிரபஞ்ச நோய் தொற்றலை எல்லாரும் காண முடியாது. ஆனால் நம் வாழ்நாளில் நாம் காண்கிறோம். இத்தகைய சூழலில் குடும்பம் உறவுகள் குறித்த கவலையை விட நோய் தொற்றை தடுக்க வேண்டும், நோய் தாக்கியவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே எண்ணமாக உள்ளது.

காரணம் மருத்துவப்பணி என்பது ஒரு அறப்பணி. குடும்பத்தினர் அனைவரும் என் உடல்நிலை குறித்து  பேரச்சத்தில் தான் உள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே என்  பணியை செய்கிறேன். பணிச்சுமை கூடியிருப்பதும், பணியில் தொழில் ரீதியான நோய் தொற்று உருவாக வாய்ப்பு இருக்கு என்பதும் நான் அறிந்ததே. ஆனால் இந்த கொடுந்தொற்று நேரத்தில்  சமூகத்திற்கு என்னால் இயன்ற பங்களிப்பை நான் செய்யாமல் போனால் என் பெயருக்கு பின் இருக்கும் என் கல்விக்கு எந்த அங்கீகாரமும் அர்த்தமும் இருக்காது. நம்பிக்கையோடு என்னை முழுமையாக ஈடுபடுத்தி இந்நேரத்தில்  பணி புரிகிறேன்.

கொடுந்தொற்றிலிருந்து இந்த சமூகம் விடுபடும் நாள் கூடிய விரைவில் வரும். கொள்ளை நோயிடம் இருந்து போராடி பெற போகும் இந்த சமூக விடுதலையில் ஒரு சிறு புள்ளியாக நான் அங்கம் வகிப்பது எண்ணி பெருமை தான்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.