புதுச்சேரி அகில இந்திய வானொலியில் முதுநிலை அறிவிப்பாளராக கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் உமா மோகன். இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர் கூறும்போது “கொரோனா தொற்று குறித்து நம்மிடையே அச்சமும் அலட்சியமும்  இரண்டுமே அதனதன் உச்சத்தில்தான் இருக்கின்றன. விழிப்புணர்வுக் குறிப்புகளைத் தொடர்ந்து அறிந்துக் கொண்டு அவற்றை மக்களோடு பகிர்ந்து கொள்ளும் ஊடகப் பணியில் உள்ள என்னையும் தொற்று பற்றும் என நினைக்கவேயில்லை. இப்படித்தான் ஒவ்வொருவருமே நினைக்கக்கூடும்.

image

என்னைப் பொறுத்தவரை எச்சரிக்கை நடவமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றி வந்தேன். மிகத்தேவையான பொருட்களை வாங்க மட்டுமே கடைக்குச் செல்வது. அதுவும் நகருக்குச் செல்லாமல் வீட்டருகே வீதியோரச் சிறு கடைகளில் வாங்கிக் கொள்வது, அலுவலகம் விட்டால் வீடு, என்றே வகுத்துக் கொண்டிருந்தேன். எல்லா பழக்கங்களையும் எச்சரிக்கையையும் தாண்டி வந்துவிட்டது.

லேசாக சளி பிடிக்கப் போவது போன்ற சங்கடம் உணர்ந்தவுடன் விடுப்பு எடுத்துக் கொண்டேன். அரை நாளில் மளமளவென காய்ச்சல் வந்துவிட்டது. சென்னையில் உயர் சிறப்பு மருத்துவம் பயிலும் மருமகளிடம் ஆலோசித்து மாத்திரை எடுத்தேன். எப்போதையும் விட, இந்தக் கொரோனா காலத்தில், இஞ்சி, மிளகு, மஞ்சள், பூண்டு, சீரகம், காய்கறி, கனிகள் பட்ஜெட் அதிகந்தான். தொற்று சமயம் எடுக்கப்பட்ட சோதனைகளில் நான் பாஸ் மார்க் வாங்க இவை முக்கிய காரணம்.

கசாயம், உப்பு நீர் கொப்பளிப்பு போன்ற சம்பிரதாயங்களைச் செய்தும் காய்ச்சல் போவதும் வருவதுமாக இரண்டு நாள் இருக்கவும். மூன்றாவது நாள் பரிசோதனைக்குப் போய்விட்டேன். நான்காம் நாள் அதிகாலை காய்ச்சல் விடைபெற்றுவிட்டது. மதியம் பாசிட்டிவ் என உறுதியாக மருத்துவமனை போக வேண்டியதாயிற்று. இங்கு இன்னும், தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வழங்கவில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதியில்லை.

நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த சிகிச்சையில் இருப்பதால் மருத்துவ கவனிப்பில் எவ்வளவு சீக்கிரம் போகிறோமோ அவ்வளவு நல்லது என முடிவெடுத்திருந்தோம். கொரோனா சிகிச்சை முறையில் ஒரே மாதிரியான விஷயம் பாரசிடமால் மட்டும்தான். சில இடங்களில் மாற்று மருத்துவப் பரிந்துரைகள் சிலவற்றைப் பின்பற்றுவதும் சில இடங்களில் ஏற்காத நிலையும் இருக்கிறது. நான் சேர்ந்தது மத்திய அரசு மருத்துவக் கல்லூரியான ஜிப்மர்.

அங்கு கபசுரக் குடிநீர் போன்றவை கிடையாது. வெந்நீர், பால், தினம் ஒருமுறையாவது முட்டை, பழம், சுண்டல் இவற்றோடு மூன்று வேளை தரமான உணவு வழங்கினார்கள். தனிமைப்படுத்தல்தான் பிரதான நோக்கம். என்னைப்போன்ற தொடர் மருத்துவ சிக்கல் உள்ளவர்களைக் கண்காணித்து தேவைப்பட்ட சிகிச்சை தந்தார்கள். எனக்கு தொற்றின் விளைவாக சர்க்கரை அளவும், ரத்த அழுத்தமும் எகிறிக் கொண்டிருந்தது. உரிய மருந்துகளால் கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.

மற்றபடி, நமது பாரம்பரிய முறைகளின்படி இஞ்சி, மஞ்சள், மிளகு, தேன், வெற்றிலை கசாயங்கள் வீட்டிலிருந்து வரவழைத்து தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொண்டேன். அவற்றுக்குத் தடையேதுமில்லை. உறக்கம் அதிகமாக வரும். உறங்க முடியாது. நல்ல உணவு வரும். சாப்பிடப் பிடிக்காது. சிலருக்கு ருசியும், வாசனையும் தெரியாமல் போகலாம். உடல்வலி, களைப்பு இருக்கும். எந்த காய்ச்சல் வந்தாலும் உண்டுதானே!

பத்து நாள் மருத்துவமனை வாசம். ஏழுநாள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு. நம் வீட்டைத் தனிமைப்படுத்துவதால், வீட்டில் வேறு யாரும் வெளியில் செல்ல முடியாது. மற்றவர்கள், வேறு சிகிச்சையோ கஷ்டமோ இருந்தால் உதவி செய்ய உடனிருக்க முடியும். இந்த காலக்கட்டத்தில் நம்மோடு யாரும் இருக்க அனுமதியில்லை.

ஆனால், மனதால் உடனிருக்கலாம். தேவையான பொருட்களை, உணவை வெளியில் இருந்தவாறே வாங்கி வந்து தரலாம். அப்படியான உறவும் நட்பும் எங்களுக்கு வேண்டியதைச் செய்தார்கள். சிகிச்சை தொடங்கும் காலத்தில் நமக்கு நோயின் தாக்கமும் இருக்கும். (எனக்கு தொண்டையில் சளி, கோழை வந்துகொண்டே இருக்கும். நாப்கின்களில் துப்பித்துப்பி எறிந்து கொண்டிருந்தேன். ஒரு துண்டு வெற்றிலையும் ஒரு மிளகுமாக வாயில் அடக்கிக் கொள்ள கோழை நின்றது.)

அரசுத் துறைகளின் அழைப்பு, விசாரணை நீண்டு கொண்டே போகலாம். தொற்றின் மூலம் தெரியவில்லையென்றால் நம்முடைய தொலைபேசி அழைப்புகளை ஆராய்ந்து அவர்களிடம் விசாரிப்பது வரை இது நீள்கிறது. புரிந்துக் கொள்ளாத சிலர் காவல்துறை அழைப்பு என்றதும் அஞ்சி உங்கள் மேல் வெறுப்போ கோபமோ கொள்ளலாம். முதலில் நமக்கு நோய் பற்றிய புரிதல் வேண்டும். பொறுமையாக மற்றவர்களுக்குப் புரிய வைக்கவோ, விளக்கவோ வேண்டிய நிலை வரலாம்.

எனது வீட்டு உதவியாளர் மட்டுமே வந்து போய்க் கொண்டிருந்தார் என்பதால் அவர் குடும்பத்தோடு தனிமைப்படுத்தப்பட்டார். ஏழு நாட்களுக்குப்பிறகு அவருக்கு மட்டும் சோதனை செய்து நெகடிவ் வந்து நிம்மதியானார். அவரைப் பொறுத்தவரை என்னைவிட அதிகமாக செய்திகளைத் தொடருவார். எனவே புரிதல் இருந்தது. அப்படியும் அவரது உறவினர், அண்டை வீட்டாரின் அறியாமையை அவர் சமாளிக்க வேண்டிய நிலை.

கொரோனா வந்தால் உடனே இறந்து விடுவார்கள் என்பதில்லை. அதிக பாதிப்பு வருமுன் கவனித்துக் கொண்டால் ஆண்டுக்கொரு முறையாவது நாம் image

கடக்கும் வைரஸ் காய்ச்சல்களைப் போலத் தாண்டிவிடலாம். (பெரும்பாலானவருக்கு அதைவிட பாதிப்பு குறைவு). நாம் உருவாக்கி வைத்திருக்கும் தவறான கருத்தாக்கங்கள் இருந்து வெளிவருவதை விட எளிதாக கொரோனாவிலிருந்து வெளி வந்து விடலாம்.

மீண்டு வந்தபிறகும் மற்றவர்கள் நம்மோடு பழக, அணுக, நாமிருக்கும் இடங்களில் புழங்க தேவையற்ற தயக்கங்களைக் காட்டுவார்கள். மனந்தளர வேண்டாம். அவர்களது அச்சத்தை முடிந்தால் போக்கவும். அறியாமையாக இருந்தால் தெளிய வைக்கலாம். அர்த்தமின்றி இருந்தால் குழம்பாமல் கடந்து செல்லுங்கள். நமக்கு நிறைய வேலையிருக்கிறது.”

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.