உலகமே கொரோனா வைரஸிடம் சிக்கித் தவித்து வருகிறது. கொரோனாவால் உலகில் இதுவரை பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,62,00,326 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 99,13,072 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 6,48,440 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிப்படைந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த திணறி வருகின்றன. சில நாடுகளில் ஆட்சியாளர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவும் ஒருவர்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ

பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோவுக்கு கடந்த ஜூலை 7-ம் தேதி வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு அலுவலக பணிகளை மேற்கொண்டு வந்தார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்காகப் பயன்படுத்தி வந்தார். இதனால், பக்க விளைவுகள் ஏற்படும் என சில மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியதால் இதுதொடர்பாகவும் கவனமாக இருந்து வந்தார்.

தனிமையில் இருந்தபடி அலுவலக வேலைகளை கவனிக்க முடியவில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் பொல்சனாரோ கூறியதோடு தொடர்ந்து கொரோனா பரிசோதனையும் செய்து வந்தார். ஆனால், சோதனையின் முடிவுகள் பாசிட்டிவ் என வந்ததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இதுவரை சுமார் மூன்று முறை அவருக்கு பரிசோதனை முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது.

Also Read: பிரேசில்:`கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தைக் கொல்கிறது!’ – அதிபர் பொல்சனாரோ

இந்தநிலையில், சில வாரங்களுக்குப் பிறகு, செய்த பரிசோதனையில் அவருக்கு நெகட்டிவ் என முடிவு வந்திருப்பதாக கடந்த சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சார்ஸ் கோவிட் 2 தொடர்பான பரிசோதனை முடிவில் நெகட்டிவ். அனைவருக்கும் காலை வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுடன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாக்கெட் ஒன்றை கையில் வைத்து சிரித்தபடி புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த மருந்து கொரோனா வைரஸ் தொற்றை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை என்றபோதும், அவர் தொடர்ந்து இந்த மருந்தை வைரஸ் பாதிப்புக்கு வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் வைரஸ் பரிசோதனை செய்துகொண்டது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரஸ் பரவத் தொடங்கிய நாள் முதலே அதிபர் பொல்சனாரோ இந்த வைரஸை சிறிய காய்ச்சல் என்றும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவித்தால் வைரஸ் பாதிப்பைவிட பொருளாதார பாதிப்பு அதிகமாகும் என்றும் தொடர்ந்து கூறி வந்தார். முகக்கவசம் அணியாமல், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பொது இடங்களில் பொல்சனாரோ இயங்கி வந்தார். வைரஸ் தொற்று பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், திடீரென அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. பிரேசிலில் இதுவரை 2.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கையும் 84,000-த்தைக் கடந்துள்ளது. தொடர்ந்து பாதிப்புகளும் அதிகமாகி வருகிறது.

Also Read: கொரோனா : `கடவுள் நினைத்தால் எல்லாம் மாறும்!’ – 3 வது முறையாக பிரேசில் அதிபருக்கு பாசிட்டிவ்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.