இந்தியா உட்பட உலகளவில் உள்ள பல நாடுகளிலும் குழந்தைகள் கடத்தல் என்பது மிகப் பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குழந்தைகள் கடத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் அந்தக் குழந்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்காத செய்திகளையும் கடந்துகொண்டுதான் இருக்கிறோம். இதற்கு எதிராக பல நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்த பிறகும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை.

மிகப்பெரிய நெட்வொர்க் இதன் பின்னனிகளில் செயல்பட்டு வருவதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிப்பதால், அரசுகளும் இந்தப் பிரச்னையை அணுகுவதில் திணறி வருகின்றன. இந்தநிலையில் சீனாவில் தற்போது நடந்துள்ள குழந்தை கடத்தல் சம்பவம் ஒன்று பலரையும் பதற வைத்துள்ளது.

குழந்தை கடத்தல்

சீனாவில், யுன்னான்ஸ் வெய்சி எனும் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிறந்து 46 மணிநேரம் மட்டுமே ஆன குழந்தை ஒன்று கடந்த ஜூலை 5-ம் தேதி மர்ம நபர் ஒருவரால் கடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை வார்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை நேரத்தில் குழந்தை கடத்தப்பட்டதாகப் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

“என் குழந்தை பிறந்து 46 மணிநேரம் மட்டுமே ஆகிறது. அதிகாலையில் 2 மணிக்கு தாய்ப்பால் கொடுத்து தூங்க வைத்தேன். 3 மணியளவில் எழுந்து பார்க்கும்போது குழந்தையைக் காணவில்லை” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்து குழந்தையைத் தேடி வந்துள்ளனர்.

Also Read: இஸ்ரேல்: ஊரடங்கில் சிக்கிய 3 வயதுக் குழந்தை!’ – 6 மாத பிரிவால் கண்ணீர்மல்க வரவேற்ற தாய்

மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். காலை 2.25 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குழந்தையை அவசரமாக தூக்கிச் செல்லும் காட்சி அதில் பதிவாகியுள்ளது. மருத்துவமனை வெளியில் சந்தேகப்படும் வகையில் ஜீப் ஒன்றும் நின்றுள்ளது. இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற சுமார் 2,000 வாகனங்களை அதிகாரிகள் பரிசோதனையிட்டுள்ளனர். அரசிடமிருந்த தரவுகளின் அடிப்படையில் ஜீப்புக்கு சொந்தமான நபர் லீ என்பதைக் கண்டறிந்தனர்.

ஜீப் சென்ற இடத்தை தேடிக் கண்டுபிடித்து சென்றதில் லீ அருகில் உள்ள லிஜியாங் என்ற நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருப்பது தெரிய வந்தது. ஜூலை 7-ம் தேதி காலையில் லீயைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். விசாரணையில் 800 மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதியில் குழந்தையை விற்றுவிட்டதாக லீ தெரிவித்துள்ளார்.

குழந்தையுடன் பெற்றோர்

லூவோ என்ற நபருக்கு லீ குழந்தையை விற்றுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் லூவோவைத் தேடி சென்றுள்ளனர். பின்னர், சிச்சுவான் பகுதியில் லூவோவின் மனைவியிடமிருந்து அதிகாரிகள் குழந்தையை மீட்டுள்ளனர். லூவோ மற்றும் அவரது மனைவிக்கு குழந்தை இல்லாததால் லீயிடமிருந்து குழந்தையை சுமார் 50,000 யுவானுக்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

குழந்தையை அதிகாரிகள் மீட்டு ஜூலை 11-ம் தேதி பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பிறந்து 46 மணிநேரத்தில் காணாமல்போன குழந்தையை ஆறு நாள்கள் கழித்து சந்தித்த பெற்றோர் கண்ணீர்விட்டு அழுது மகனைக் கட்டியணைத்து முத்தமிட்டுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மனதைக் கலங்க வைக்கின்றன.

“காவல்துறை அதிகாரிகள் மட்டும் எங்களுக்கு உதவி செய்யாவிட்டால், வாழ்நாள் முழுவதும் எங்களது மகனை நாங்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்” என்றுகூறி தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் சீனாவில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லீ மற்றும் லூவோ ஆகியோர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Credits : Mailonline

Also Read: கர்நாடக ஸ்வீட் குடோன் முதல் ஹைவேஸ் லாரி வரை… கடத்தப்பட்டு மீண்டு வந்தவரின் அனுபவங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.