ராஜஸ்தான் மாநிலம், பச்பத்ரா கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஹரிஷ், மலையேறுவதைக் கணக்கிட்டால் மலைப்புத்தான் வருகிறது. 34 நாட்களாக மலையேறிக்கொண்டிருக்கிறார்.
அந்தச் சிறுவனுக்கு எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப்பிடிக்கும் கனவில்லை. மலையேறுவது அவரது உடற்பயிற்சியும் இல்லை. ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்டு பாடம் படிப்பதற்காகத்தான் தினமும் அவர் மலையேறிக்கொண்டிருக்கிறார்.
ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் படிக்கும் ஹரிஷ், ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிடக்கூடாது என்பதற்காக தினசரி 15 நிமிடங்கள் மலையில் ஏறுவதற்குச் செலவிடுகிறார். புத்தகங்கள், நாற்காலி, சிறு மேஜை மற்றும் ஸ்மார்ட் போன் ஆகியவற்றை சுமந்துகொண்டு செல்கிறார். தன் சகோதரனுடன் காலையில் 7.20 மணிக்குப் புறப்படும் மாணவன், நெட்வொர்க் கிடைக்கும் உயரத்தில் அமர்ந்துகொள்கிறான்.
மழையோ சுடுவெயிலோ ஹரிஷ் கவலைப்படுவதில்லை. எப்படியாவது ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதே நோக்கம். “எந்தப் பாடத்திற்கும் நான் ஆன்லைன் வகுப்புகளைத் தவறவிட விரும்பவில்லை. ஊரடங்கால் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. ஆனால் இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது என்னுடைய புதிய எதார்த்தமாக மாறிவிட்டது” என்கிறான் ஹரிஷ்.
இந்தச் சிறுவனின் விருப்பம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதாக இருக்கிறது. “நான் பெரிய மாற்றங்களைச் செய்வேனா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாட்டின் பின்தங்கிய கிராமப் பகுதிகளுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவேன். கொரானாவால் நாட்டில் ஏற்பட்ட அவலநிலையைப் பார்க்கும்போது, அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கொள்கைகள் மூலம் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்பதை உணர்கிறேன்” எனக் கூறுகிறார் மாணவன் ஹரிஷ்.
மலையேறி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் இந்த ராஜஸ்தானியச் சிறுவனைப் பற்றிய செய்தியும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பரவி வைரலாகிவருகின்றன. இதையறிந்த கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அவனது நேர்மையையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி டிவிட் செய்துள்ளார்.
விவசாயப் பண்ணையில் வேலைபார்க்கும் ஹரிஷின் தந்தை வீராம், “என் மகனுக்கு படிப்பதில் அதிக விருப்பம். நல்ல கிரேடு வாங்குகிறான். எங்கள் வீட்டில் மொபைல் நெட்வொர்க் சரிவர கிடைக்காது என்பதுதான் சோகம். பாடங்களைத் தவிர்க்காமல் அவன் மலையேறி படித்துவருவதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்” என்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM