ராஜஸ்தான் அரசியல் சூழலில் தேவைப்பட்டால் பிரதமரின் இல்லம் முன்பு சென்று போராடுவேன் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அம்மாநில அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது. ராஜஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது முதல்வர் பதவியை பிடிப்பதில் அசோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இருவருக்கு இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர் கட்சி மேலிடம் தலையிட்டு அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும், சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கியது.

image

எனினும் இருவருக்கு இடையிலான உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்தது. அண்மையில் இது மிகப் பெரிய அளவில் பிரச்னையாக மாறியது. இதைத்தொடர்ந்து சச்சின் பைலட் வகித்து வந்த துணை முதல்வர் பதவி மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். அத்துடன் கட்சியின் கொறடா உத்தரவை மீறி சட்டமன்றக்குழு கூட்டத்தில் பங்கேற்காததால், அவருக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருக்கும் சபாநாயகர் சி.பி. ஜோஷி தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு நீதிபதிகள் தடை விதித்தனர். அங்கு தற்போது இருக்கும் நிலையே பின்பற்றப்பட வேண்டும் எனவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

image

மேலும் இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக சேர்க்கக்கோரிய சச்சின் பைலட்டின் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் கட்சித்தாவல் தடை சட்டத்தின் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் வரை தீர்ப்பை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மந்திரி அசோக் கெலாட் “ ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பாஜகவின் சதியை ஒருபோதும் வெற்றி பெற விட மாட்டோம். தேவைப்பட்டால் குடியரசுத் தலைவர் மாளிகை செல்லவும் நான் தயாராக உள்ளேன். தேவைப்பட்டால் பிரதமரின் இல்லம் முன்பு சென்று போராடவும் தயங்க மாட்டேன்” என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.