தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் பாரதிராஜாவுக்கு தனி இடம் உண்டு. அதற்குக் காரணம் அவரது படைப்புகள் கிராமம், நகரம் எனப் பயணித்ததோடு அந்த மண் சார்ந்த மக்களின் கதையைப் பேசியது தான். இன்று அவருக்கு பிறந்த நாள்.
அவர் குறித்து எல்லோரும் அறிந்தும் அறியாத முத்துச்சரங்கள் சில…
*தேனியில் 1942இல் பிறந்தவர் பாரதிராஜா. அவரது அப்பா பெரிய மாயத்தேவர். அம்மா கருத்தம்மாள். அவரது இயற்பெயர் சின்னச்சாமி. சினிமா மீது ஏற்பட்ட பேர் ஆர்வத்தினால் சென்னைக்கு தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து புறப்பட்டார்.
*முதலில் நடிகராக வேண்டுமென விரும்பினார். பின்னர் கன்னட சினிமாவின் கடவுள் என போற்றப்படும் இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் உதவி இயக்குநராக இணைந்து தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ச்சியாக பல இயக்குநர்களிடம் பணியாற்றிவிட்டு முதல் வாய்ப்புக்காகக் காத்திருந்தார்.
*இன்றைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த மற்றும் கமலஹாசனை வைத்து தனது முதல் படமான ‘16 வயதினிலே’ படத்தை இயக்கினார்.
*அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா பின்பற்றி வந்த ஆதி கால பார்முலாக்களை உடைத்தெறிந்து ஸ்டூடியோவிலிருந்து அவுட்டோருக்கு தமிழ் சினிமாவை கைப்பிடித்து அழைத்து வந்ததும் அவர் தான். கிராமத்து வயல் வெளிகளிலும், வீதிகளிலும், அந்த மக்களின் வாழ்வியலையும் படம் பிடித்து திரையில் காட்டினார்.
*அதோடு உரைநடையாக இருந்த தமிழ் சினிமா வசனங்களை வட்டார வழக்குக்கு மாற்றியதிலும் பாரதிராஜாவின் பங்கு அளப்பரியது. அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் திரையரங்கு பக்கமாக ஈர்த்தார்.
*அதற்கடுத்து அவரது இயக்கத்தில் வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படமும் ஹிட். அந்த சமயத்தில் ‘அவருக்கு கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளை மட்டும் தான் இயக்க தெரியும்’ என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தின் மூலம் பதிலடி கொடுத்தார்.
*தொடர்ச்சியாக டிக் டிக் டிக், மண் வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, அலைகள் ஓய்வதில்லை, வேதம் புதிது என பல படங்களை இயக்கினார்.
*1985இல் நடிகர் சிவாஜி கணேசனை புதிய பரிணாமத்தில் நடிக்க வைத்து அவர் இயக்கிய ‘முதல் மரியாதை’ ரொமான்ஸ் கிளாசிக் பட ஜானர்களில் ஒன்று. இவர் படங்கள் காதலுக்கு மரியாதை கொடுத்தன.
*இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பாரதிராஜாவின் சினிமா பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்கள். இதில் நாயகிகளின் பங்கு அதிகம்.
*இசைஞானி இளையராஜாவின் மெட்டுகளும் பாரதிராஜாவின் படங்களுக்கு உயிர் கொடுத்தன.
*அண்மைய காலமாக நடிகராகவும் நடித்து வரும் பாரதிராஜா கருத்தம்மா படத்தில் ‘காடு பொட்ட காடு’ என்ற பாடலையும் பாடியுள்ளார்.
*மணிவண்ணன், மனோ பலா, பாக்கியராஜ் என 80களின் பிற்பாதியில் அசத்திய இயக்குநர்கள் பலர் பாரதிராஜாவின் வார்ப்புகள் தான்.
*ஆறுமுறை தன் படைப்புகளுக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.
*தமிழக மக்களின் நலனுக்காகவும் தயங்காமல் அவர் குரல் கொடுத்துள்ளார். காவேரி பிரச்சனையே அதற்கு ஒரு சான்று.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM