கிரிக்கெட் என்பது எப்போதும் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு என்பார்கள். இதனை புரிந்து கொண்டு விளையாடிய வீரர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அப்படி கிரிக்கெட்டை ஜென்டில்மேன் விளையாட்டாக கையாண்ட வீரர்களின் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அணியில் சக வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம், எதிரணி வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம், நடுவர்கள், ரசிகர்கள் என ஒவ்வொரு தருணத்திலும் ஒரு வீரர் எப்படி தன்னுடைய அணுகுமுறையை, நடத்தை பண்பை வெளிப்படுத்துகிறார் என்பதை பொறுத்தே அந்த வீரர் எந்த அளவு ஜெண்டில்மேனாக உள்ளார் என்பது தெரியும். கிரிக்கெட்டை பொறுத்தவரை தனிப்பட்ட வீரர்களை விட ஒரு கேப்டனுக்கே இந்த அணுகுமுறை மிகவும் தேவையான ஒன்று.

தோனியை இன்றளவுக்கும் நாடு கடந்து கோடிக்கணக்கானவர்களுக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் அவரது ஜென்டில்மேன் அணுகுமுறை தான். யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தோனியின் பக்குவமான அணுகுமுறை களத்தில் இருக்கும். வெற்றியிலும், தோல்வியிலும் மிகைப்படுத்தாத உணர்வுகளை வெளிப்படுத்தியவர் தோனி. கேப்டன் கூல் என்ற பட்டம் அவ்வளவு எளிதில் தோனிக்கு கிடைக்கவில்லை. 10 ஆண்டுகாலம் இந்திய அணிக்கு தலைமை தாங்கியவர் தோனி. இந்த காலத்தில் அவர் வெற்றியின் உச்சத்திற்கும் சென்று இருக்கிறார். இதுவரை எந்த கேப்டனும் செய்ய முடியாத சாதனைகளையும் படைத்து இருக்கிறார். அதே நேரத்தில் பல்வேறு சறுக்கல்களையும் சந்தித்து இருக்கிறார்.

image

வெற்றியின் போதும், தோல்விகளின் போதும் அலட்டிக் கொள்ளாத அவரது பண்புதான் அவர் மீது ஒரு ஈர்ப்பை எல்லோருக்கும் வரவழைத்தது என்று சொல்லலாம். ஒரு கிரிக்கெட் வீரராக தோனியின் திறமை குறித்து பேச ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. இன்றளவும் தோனியை விஞ்சிய சிறந்த பினிஷர் உலக அளவில் யாருமில்லை. இதனை பல முன்னணி வீரர்கள் பல முறை சொல்லியிருக்கிறார்கள். அதேபோல், விக்கெட் கீப்பிங்கை பொறுத்தவரை சர்வதேச தரம் கொண்ட ஒருவராக தோனி இறுதிவரை இருந்து வருகிறார். முத்து படத்தில் ஒரு வசனம் வரும் ‘அவர் வண்டி ஓட்டுர ஸ்டைலை பார்த்து இந்த ஊரே ஆடிப் போயிருக்கு’ என்பதுதான் அந்த வசனம். அதேபோலத்தான், தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கை பார்த்து கிறங்கிப் போனவர்கள் பலர். அதுவும் ஸ்டம்பை பார்க்காமலே அவர் ரன் அவுட் செய்த சாகசங்களை எல்லாம் எப்படி மறக்க முடியும்.

image

இன்றுவரை தோனியின் பிட்னஸ்-க்கு இளம் வீரர்கள் கூட ஈடு கொடுக்க முடியவில்லை. அதேபோல், ஒரு கேப்டனாக ஐசிசி நடத்திய மூன்று சர்வதேச கோப்பைகளையும் வென்றது என வெற்றிமேல் வெற்றிகளை குவித்திருக்கிறார். ஆனால், இந்த திறமைகளும், வெற்றிகளும் மட்டுமே தோனியை எல்லோருக்கும் பிடிக்க காரணம் அல்ல. மேற்படி சொன்ன அந்த ஜென்டில்மேன் அணுகுமுறை தான். அதற்கு தோனி களத்தில் செய்த பல செயல்கள் இருக்கின்றன. தன்னை வளர்த்துவிட்ட கங்குலியை அவரது இறுதிப் போட்டியில் கேப்டனாக மாற்றி அழகு பார்த்ததை இன்று யாராலும் மறக்க முடியாது.

தென்னாப்ரிக்கா உடனான ஒரு போட்டியில், முனாப் படேல் வீசியை பந்தினை சிக்ஸருக்கு விளாசிய டு பிளசிஸ் நிலை தடுமாறி கீ்ழே விழுந்தார். உடனே ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த தோனி, சற்றும் யோசிக்காமல் டு பிளசிஸின் இருகால்களையும் பிடித்து முதலுதவி செய்தார் தோனி. அந்த போட்டியில் தென்னாப்ரிக்க அணி வெற்றி பெற்றிருந்தாலும் எல்லோரது மனங்களையும் கொள்ளையடித்தவர் தோனியே.

image

எல்லாவற்றிற்கும் மேலாக தோனியின் ஜென்டில்மேன் அணுகுமுறைக்கு மிக முக்கியமான எடுத்துக்காட்டாக அமைந்தது 2011ம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியன்று நடந்த சம்பவம் தான். இங்கிலாந்து அணியின் இயான் பெல் மற்றும் மோர்கன் களத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். இயான் பெல் சதத்தை கடந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அடித்த பந்து பவுண்டரிக்கு செல்ல, பிரவின் குமார் அதனை ஓடிச் சென்று தடுத்தார். அந்த பந்து பவுண்டரி எல்லைக் கோட்டை தொட்டுவிட்டது போலவே எல்லோருக்கும் தெரிந்தது. பந்தினை மிகவும் ஆசுவாசமாக வந்து தூக்கி ஸ்டம்ப் அருகே வீசினார் பிரவின் குமார்.

image

பவுண்டரி சென்றுவிட்டது என நினைத்து இயான் பெல்லும் கிரீஸை விட்டு வெளியே மெதுவாக நடந்து சென்றார். ஆனால், பந்தை வாங்கி இந்திய வீரர் ரன் அவுட் செய்தார். மூன்றாவது நடுவர் முறையீட்டில் அது அவுட் கொடுக்கப்பட்டது. இயான் பெல்லும் பெவிலியன் திரும்பிவிட்டார். தேநீர் இடைவெளிக்கு முந்தையை கடைசி ஓவர் அது. தேநீர் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விளையாட வந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இயான் பெல்லும் விளையாட வந்தார். ஆமாம், தோனி ரன் அவுட் விக்கெட் கேட்டதற்கான முறையீட்டை வாபஸ் பெற்றார். அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தாலும் அடுத்தநாள் அனைத்து செய்திகளிலும் தோனியின் ஜென்டில்மேன் அணுகுமுறையே பெரிதாக பேசப்பட்டது. ஆம், இந்த அணுகுமுறை தான் தோனியை இன்றளவும் உச்சத்தில் வைத்துள்ளது.

“தலைவர், அண்ணனுக்கு பிறந்ததாள்”- வாழ்த்து மழையில் தோனி..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.