கிராம வாசிகளையும் ஸ்டார் ஆக்கிய டிக் டாக் : தடையால் வாடும் பயன்பாட்டாளர்கள்..!

இந்திய – சீன லடாக் எல்லையில் ஏற்பட்ட பிரச்னையைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு கருதி டிக் டாக், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்தது. இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்புகள் வந்தாலும், டிக் டாக் மூலம் பிரபலமடைந்த, வருமானம் ஈட்டிய சாமானியர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஒரு நபர் பிரபலமடைய வேண்டும் என்பது சாதாரணம் அல்ல. ஆனால், இந்த எண்ணத்தை எளிதில் புரட்டிப் போட்டது சமூக வலைத்தளங்கள். குறிப்பாக டிக் டாக் போன்ற செயலிகள் சாமானியர்களையும் பிரபலமடையச் செய்தது. அவர்களுக்குள் இருக்கும் கலைஞனை வெளிக்கொண்டு வந்தது. இந்த செயலிகள் மூலம் நூற்றுக்கணக்கான பிரச்னைகள் இருப்பது உண்மை தான். ஆனால், எதில் தான் பிரச்னை இல்லை. அனைத்திலும் பிரச்னைகள் இருக்கின்றன. எனவே எதையும் நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் அனைத்தும் அடங்கியிருக்கின்றன என்கின்றனர் வல்லுநர்கள்.

image

தமிழகத்திலேயே சாமானியர்களாக இருந்த பலர் டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவிட்டு, அதன்மூலம் பிரபலங்களாகி, தற்போது சின்னத்திரையில் ஜொலிக்கின்றனர். இதுதவிர சிலர் யூடியூப் சேனல்களை தொடங்கி பணம் சம்பாதித்து வருகின்றனர். சிலர் டிக் டாக் மூலம் எந்த சம்பாத்தியமும் இல்லை, ஆனாலும் வாய்ப்புகளை தேடி அலையும் எங்களுக்கு இது சிறு ஆறுதலாகவும், எங்களுக்குள் இருக்கும் கலைஞனை நாங்களே பார்த்து ரசிக்கும் கண்ணாடியாகவும் இருக்கிறது என்கின்றனர்.

image

இதேபோன்று டிக் டாக் செயலி என்பது நவீன நகரத்தில் வசிப்பவர்கள் மட்டுமின்றி கிராமப்புறத்தில் இருப்பவர்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டது. நகர்ப்புற இளைஞர்கள் செய்யும் வீடியோக்களை விட கிராமப் புறத்தில் இயற்கை மனத்தோடு வீடியோ பதிவிடும் நபர்களுக்கு லைக்குகள் பறக்கும். இதனால் கிராமப்புற வாசிகள் டிக்டாக் செயலியால் ஈர்க்கப்பட்டு, அவர்களும் ஸ்டார்களாக மாறினர். இப்படி இருக்க திடீரென டிக் டாக் செயலிக்கு தடை என்பது அவர்களை சோகத்தில் தள்ளியுள்ளது.

டிக் டாக் செயலிக்கு மாற்றாக பல செயலிகள் இருக்கின்றன, அதையும் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், டிக் டாக் செயலியில் தங்களுக்கு லட்சக்கணக்கில் ஃபாலோவெர்ஸ் இருப்பதால் புதிய செயலி ஒன்றில் கணக்கை தொடங்கி மீண்டும் லட்சக்கணக்கில் லைக்குகள் வாங்குவது எளிதல்ல என டிக் டாக் பிரியர்கள் வருந்துகின்றனர்.

22 ஆண்டுகால முயற்சி.. வைரஸ் எதிர்ப்பு சக்தி மருந்தை உருவாக்கிய சித்த மருத்துவர்..!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM