பாலிவுட்டின் பிரபல நடன இயக்குநராகத் திகழ்ந்த சரோஜ் கான் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இதனையடுத்து பாலிவுட்டில் பிரபல நட்சத்திரங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சரோஜ் கானின் இயற்பெயர் நிர்மலா. இந்துவாகப் பிறந்து பின்னர் இஸ்லாம் மதத்தைத் தழுவினார். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது இந்தியாவுக்கு சரோஜ் கானின் பெற்றோர் குடிவந்தனர். தனது சிறுவயதில் திரைப்படங்களில் நடித்த சரோஜ் கான் பின்னர் நடனக்குழுவில் பணியாற்றினார்.கடந்த 1974-ம் ஆண்டு ‘கீதா மேரா நாம்’ எனும் திரைப்படத்துக்கு நடன இயக்குநராக சரோஜ் கான் அறிமுகமானார்.

image

ஆனால் 1987 இல் அனில் கபூர், ஸ்ரீதேவி நடித்து வெளியான “மிஸ்டர் இந்தியா” திரைப்படம்தான் சரோஜ் கானுக்கு பெரும் புகழைச் சம்பாதித்துக் கொடுத்தது. அதில் இடம்பெற்று ‘ஹவா ஹவா’, “தக் தக் லகா” ஆகிய பாடல்களுக்கு சரோஜ் கான் இயக்கியிருந்த நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தது. இதனையடுத்து மாதூரி தீக்ஷித் நடித்த பிரபல பாடலான “ஏக் தோ தீன்” பாடலின் நடன அசைவுகள் இப்போதும் பெரும் புகழ்பெற்றவை. தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘தாய் வீடு’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னை அழைத்தது கண்’ பாடலுக்கு நடனம் அமைத்தவரும் இவர்தான்.

image

இதுவரை 2 ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாலிவுட் நடிகர்கள் மத்தியில் “மாஸ்டர்ஜி” என்ற அடைமொழியுடன் சரோஜ் கான் அழைக்கப்பட்டார். மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சுவாசக் குறைபாடு பிரச்னையால் கடந்த சனிக்கிழமை சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

image

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார் என்று மருத்துவனைத் தெரிவித்தது. சரோஜ் கானின் இந்த திடீர் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.