”வீரர்கள் அப்படி செய்தால் போட்டியை பார்க்க மாட்டேன்” – டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் தேசிய கீதம் இசைக்கும் போது வீரர்கள் முழங்கால் இடும் போராட்டத்தில் ஈடுபட்டால், கால்பந்து போட்டிகளை பார்க்க மாட்டேன் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் சிக்கி இருந்த அமெரிக்கா அதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதி வேண்டிக் கொதித்தது. அமெரிக்காவின் வெள்ளைக் காவல் அதிகாரி ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தி ஜார்ஜ் பிளாய்டின் உயிரைப் பறித்தார். ”மூச்சு விட முடியவில்லை; கொலை செய்துவிடாதீர்கள்” என்று பிளாய்ட் அபயக்குரல் எழுப்பியும் அவரை அதிகாரி விடுவிக்கவில்லை. இந்தக் கொடூர கொலைக்கு நீதி வேண்டி அமெரிக்கர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் முழங்கால் இட்டு அமர்வதே நிறவெறிக்கு எதிரான செய்கை போல ஆகிவிட்டது.

image

இதற்கிடையே விளையாட்டு வீரர்கள் பயிற்சியின் போது முழங்கால் இட்டு நிறவெறிக்கு எதிராக தங்களது குரலை பதிவு செய்து வருகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க கால்பந்து சங்கம் தேசிய கீதம் இசைக்கும் போது வீரர்கள் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதிமுறையை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. எனவே, கொரோனா தாக்கத்திற்குப் பின் போட்டிகள் மீண்டும் தொடங்கும் போது, தேசிய கீதம் இசைக்கப்படும் நேரத்தில் வீரர்கள் முழங்கால் இட்டு நிறவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்நிலையில், இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வீரர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால் அத்தகைய போட்டிகளை நான் பார்க்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM