கொரோனா நிவாரணத்துக்காக, ‘பிரதமர் – அவசரகால நிலைமைகளுக்கான குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி’ (Prime Minister Citizens Assistance and Relief Emergency Situations Fund -PM CARES) என்ற அறக்கட்டளை ஒன்றை மார்ச் 28-ம் தேதி மத்திய அரசு ஏற்படுத்தியது. இதன் கௌரவத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி, அறங்காவலர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உள்ளனர்.

PM CARES

பி.எம் கேர்ஸ்-க்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். அதையடுத்து தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் போட்டி போட்டுக்கொண்டு நிதி வழங்கிவருகின்றனர். பி.எம் கேர்ஸ் தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் மட்டுமே, ரூ.6,500 கோடி நிதி திரண்டதாக செய்திகள் வெளியாகின.

இயற்கைப் பேரிடர் நிவாரணத்துக்காக ‘பிரதமர் தேசிய நிவாரண நிதி’ இருக்கும்போது, பி.எம்.கேர்ஸ் என்று புதிதாக ஓர் அமைப்பு ஏன் என்று எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கேள்வி எழுப்பினர். மேலும், பி.எம் கேர்ஸ்-க்கு லட்சம் கோடிகளில் நிதி குவிந்துள்ளது என்றும், அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் கிளம்பின. இந்த நிலையில், பி.எம் கேர்ஸ் தொடர்பான விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வழங்குமாறு பலரும் விண்ணப்பித்தனர். ஆனால், அது தொடர்பான விவரங்களை அளிப்பதற்கு பிரதமர் அலுவலகம் தயாராக இல்லை.

நிர்மலா சீதாராமன்

பெங்களூருவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவரான ஹர்ஷா கண்டுகுரி என்பவர், பி.எம் கேர்ஸ் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார். பி.எம் கேர்ஸ் உருவாக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள், அதன் செயல்பாடுகள் பற்றிய விவரங்கள், அரசாணைகள், உத்தரவுகள், சுற்றறிக்கைககள், அறிவிப்பாணைகள் போன்ற விவரங்களை அவர் கேட்டுள்ளார். அதற்கு, தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 2(h)-ன் கீழ் பி.எம் கேர்ஸ் வராது என்று பிரதமர் அலுவலகம் பதில் அளித்தது.

“பி.எம் கேர்ஸ் என்பது ஒரு பொது அமைப்பு அல்ல. மத்திய அரசின் தணிக்கை அமைப்பான சி.ஏ.ஜி-யின் வரம்புக்குள் இது வராது. இந்த நிதி செலவழிக்கப்படும் விதம்குறித்து அரசின் தணிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப முடியாது” என்று பிரதமர் அலுவலகம் பதில் தந்துள்ளது. மேலும், “இது தொடர்பான விவரங்கள் தேவையென்றால், pmcares.gov.in என்ற இணையதளத்தில் இருக்கும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று பிரதமர் அலுவலகம் தந்துள்ள பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி

ஏற்கெனவே, பி.எம் கேர்ஸ் என்பது ஒரு தொண்டு அமைப்பு என்றும், தனிநபர்களிடமிருந்து வரும் நன்கொடைகளை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறியுள்ள சி.ஏ.ஜி, பி.எம் கேர்ஸ் நிதியைத் தாம் தணிக்கை செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டது. இது ஓர் அரசு அமைப்பு அல்ல என்று சொல்லிக்கொண்டே, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் நிதி கோரி சுற்றறிக்கை அனுப்புவதை எப்படிப் புரிந்துகொள்வது என்பதை பிரதமர்தான் விளக்க வேண்டும்.

Also Read: `PM CARES’ நிதி: குவியும் கோடிகளும்… சுற்றும் சர்ச்சைகளும்..!

கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களும் மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்தும் பி.எம் கேர்ஸுக்கு பெரும் தொகை வந்துள்ளது. மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள துறைகள் ரூ.925 கோடி அளித்துள்ளன. ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி அளித்துள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி உயர் நீதிமன்றம்

Also Read: `PMCARES v PMNRF’ என்ன நடக்கிறது பிரதமர் நிதியில்… ஒரு விரிவான அலசல்!

ஏற்கெனவே உள்ள பிரதமர் தேசிய நிவாரண நிதி என்பது மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்டது. அதன் கணக்கு வழக்குகளை சி.ஏ.ஜி-யால் தணிக்கை செய்ய முடியும். அப்படியிருக்கும்போது, நிதி தொடர்பான ஓர் அமைப்பை வெளிப்படைத் தன்மையற்றதாக ஏன் அரசே தொடங்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை. பி.எம்.கேர்ஸை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் சுரேந்திர சிங் ஹூடா என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். டெல்லி உயர் நீதிமன்றம் என்ன சொல்லப்போகிறதோ?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.