10 ஆம் வகுப்பு தேர்வை தள்ளிவைக்க முடியுமா என அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அதேபோல நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தேர்வை தள்ளிவைப்பது உகந்ததா என பெற்றோரும் யோசிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்த நிலையில், நீதிபதிகள் வழக்கு குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவிவந்தது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இது சம்பந்தமான வழக்கு இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தமிழக அரசு சார்பாக ஆஜாரான வழக்கறிஞர் வரும் நாட்களில் நிபுணர்களின் கருத்துக்களின்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிய வந்துள்ளது என்றும் ஆகவே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் அதனால் தேர்வுக்கு தடை விதிக்க கூடாது என வாதாடினார்.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள் தேர்வு நடத்துவதால் மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுபேற்பது என்றும் மாணவர்கள் இறந்தபிறகு இழப்பீடு வழங்குவீர்களா, அவர்களின் வாழ்வுக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் கொரோனா தொற்றானது அக்டோபர், நவம்பரில் மாதங்களில்தான் அதிகமாகும் என கூறப்படுகிறது என்றும் ஆகவே சரியான நேரத்தில் தான் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்டால் அது பேராபத்தாக அமைந்து விடும் எனக் கூறினார்.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள் ” 9 லட்சம் மாணவர்கள் 4 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆபத்தில் உள்ளது பற்றி கவலை இல்லையா. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை எனக் கூறினார்.
மேலும் தமிழக அரசு இது குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஜீன் 11 ஆம் தேதி மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கும் விசாரிக்கப்படும் எனக் கூறி நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM