பேரிடர் காலத்தில் நடிகர் வரதராஜன் தவறான தகவல்களை அளித்துள்ளதால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மேற்கொண்ட ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விஜய பாஸ்கர் ” தமிழகம் முழுக்க மொத்தம் 75 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் உள்ள அரசு மருத்துவமனையில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. ஆனால் டிவி நடிகரும், பத்திரிக்கையாளருமான வரதராஜன் தவறான தகவலை அளித்துள்ளார். பேரிடர் காலத்தில் வரதராஜன் தவறான கருத்தை வெளியிடுவது கண்டனத்துக்குரியது” என்றார்.
மேலும் ” வரதராஜன் மீது தோற்றுநோய் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6 பேர் மட்டும் வெண்டிலேட்டர் வசதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளில் நிலையை பொறுத்துதான் வெண்டிலெட்டர்களை பயன்படுத்தமுடியும். கொரோனா வதந்திகளை பரப்பினால் அரசு வேடிக்கை பார்க்காது. மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும். நாளையில் இருந்து எந்தந்த மருத்துவமனையில் எத்தனை படுக்கைகள் உள்ளன என்பதை பற்றி ஆன்லைனில் பார்த்து தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தப்படும்” என கூறினார்.
முன்னதாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என டிவி நடிகர் வரதராஜன் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM