மூட்டை தூக்கும் தொழிலாளி ஒருவர் டிஸ்ப்ளே போன செல்போனை விற்பனை செய்ததால் ஆத்திரமடைந்த, அவரின் நண்பர்கள் மது குடிக்க வைத்து திட்டமிட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. `இம்மாவட்டத்தில் கடந்த ஏழு நாள்களில் மூன்று கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதால், கொலைநகராக மாறிக்கொண்டிருக்கிறதா பெரம்பலூர்’ என்று காவல்துறையை விமர்சனம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் பொதுமக்கள்.

பெரம்பலூர் மாவட்டம் திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் தினசரி காய்கறி சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், இவர் மீது கொலை, கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டிலிருந்த வீரமணியை நண்பர்கள் சிலர் மது அருந்தலாம் என்று அவரை அழைத்துச்சென்றிருக்கிறார்கள். நீண்ட நேரமாக வீரமணி வீடு திரும்பாததால் அவரின் பெற்றோர்கள் தேடிச்சென்றபோது அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் வீரமணி கழுத்து அறுத்தும் உடம்பில் ஏழு இடங்களில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பெரம்பலூர் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்று இறந்து கிடந்த வீரமணியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். டிஸ்ப்ளே போன செல்போனை விற்பனை செய்ததால் கொலை நடந்ததாகச் சொல்கிறார்கள். பெரம்பலூரில், கடந்த 1-ம் தேதி கபிலன், 2-ம் தேதி அ.ம.மு.க பிரமுகர் வல்லத்தரசு, ஏழாம் தேதி வீரமணி என ஏழு நாள்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

என்ன நடந்தது என்று வழக்கை விசாரித்து வரும் காவலர்களிடம் பேசினோம். “வீரமணி என்பவர் சந்தையில் மூட்டை தூக்கும் வேலை பார்த்துவருகிறார். அவ்வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போதே, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அடிதடி, கட்ட பஞ்சாயத்து செய்வது போன்ற குற்றச் செயல்களையும் செய்துவந்துள்ளார். இவர் மீது பல வழக்குகள் இருக்கின்றன. கடந்த பத்து நாள்களுக்கு முன்பு அவரது நண்பர்களிடம் ஒரு செல்போனை விற்றிருக்கிறார் வீரமணி. இரண்டொரு நாளில் அந்த செல்போன் டிஸ்ப்ளே பழுதாகியிருக்கிறது.
இந்த நிலையில், அவரது நண்பர்கள் வீரமணியிடம், `டிஸ்ப்ளே போன செல்போனை வித்திருக்கியே’ என்று போனில் கேட்கவே இருவருக்கும் போனிலேயே சண்டை வெடித்திருக்கிறது. இந்த நிலையில், நேற்று இரவு 3 பேர் கொண்ட கும்பல், `நமக்குள்ள பிரச்னை வேண்டாம். எதுவாக இருந்தாலும், நாம் பேசித்தீர்த்துக் கொள்வோம்’ என்று வீரமணியை மது குடிக்கத் தனியாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அங்கு அவர்களுக்குள் வாய்த் தகராறு அதிகமாகி அவரை வெட்டி கொன்றிருக்கிறார்கள். ஏழு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கிறது. இதுதொடர்பாக ஒருவரைப் பிடித்து விசாரணை செய்துகொண்டிருக்கிறோம். மற்றவர்களைக் கூடிய விரைவில் பிடித்துவிடுவோம்’’ என்றனர்.

“பெரம்பலூர் மாவட்டம் கொலை நகரமாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த ஒருவாரத்தில் மூன்று கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், மக்கள் நிலைகுலைந்து போய் அச்சத்தின் பிடியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாகவே பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிக் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து திருட்டு, கொள்ளை, கொலை, வழிப்பறிச் சம்பவம் அதிகரித்து வருகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் அலட்சியப்போக்குடன் செயல்படுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டும் குற்றச்சம்பவங்கள் தவிர்க்கப்படும். இல்லையேல் கேள்விக்குறிதான்’’ என்று வேதனையோடு பேசுகிறார்கள் அப்பகுதி மக்கள்.