திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திமுக எம் எல்ஏ ஜெ அன்பழகன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த இரண்டாம் ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் அன்பழகனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அன்பழகன் உடல் நிலை மீண்டும் கவலை கிடமாக மாறியுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அன்பழகன் அவர்களுக்கு கடந்த இராண்டாம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதியானதால் அவர் அடுத்த நாளே எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவருக்கு ஆரம்பத்தில் 90 சதவீத ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. ஆனால் அடுத்ததடுத்த நாட்களில் அவருக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜன் தேவையானது 40 சதவீதமாக குறைந்தது. இதனை தொடர்ந்து அவரின் உடலானது வெண்டிலேட்டர் உதவியில்லாமல் படிப்படியாகத் தேறி வந்தது.
ஆனால் இன்று மாலை அவரின் உடல் நிலையை பரிசோதித்த போது அவருக்கு மேலும் அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படுவது தெரிய வந்தது. அவருக்கு ஏற்கெனவே சிறு நீரக சம்பந்தமான பிரச்னை உள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நிலை மிக மோசமாக உள்ளது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM