இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது தான் வேண்டுமென்றே சாதிய ரீதியாகப் பேசவில்லை எனக் கூறி முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இருப்பவர் யுவராஜ் சிங். தோனியைப் போன்று இவருக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவரது அதிரடி பேட்டிங்கால் தான் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அத்துடன் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையிலும் யுவராஜ் சிங் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் அசத்தினார். இந்த முறையும் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

image

சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற யுவராஜ் சிங், அவ்வப்போது தனது மனம் திறந்து பேசக்கூடியவர். இப்போது ஊரடங்கு காலம் என்பதால் பல கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் மீது சாதிய வன்மத்துடன் யுவராஜ் சிங் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையானது.

image

யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் ரோகிச் சர்மாவுடன் நேரலையில் உரையாடுகையில் வட இந்தியாவில் குறிப்பிட்ட மக்களைக் குறிப்பிடும் ஒரு வார்த்தையைச் சொல்லி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் பற்றிப் பேசியுள்ளார். அதுதான் இப்போது சர்ச்சையாக மாறியிருக்கிறது. இதனையடுத்து யுவராஜ் சிங் மீது ஹரியானா மாநிலம் ஹிசார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து யுவராஜ் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவும் செய்தனர்.

இந்நிலையில் இந்தச் சர்ச்சை குறித்து யுவராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார் அதில் “நான் ஒருபோதும் இந்த நாட்டு மக்களிடையே சாதி, நிறம், பாலினபாகுபாடுடன் பழகியதில்லை. நான் என்னுடைய வாழ்நாளை மக்கள் நலனுக்காகவே செலவிட விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை இருக்கிறது அதனை நான் மிகவும் மதிக்கிறேன். நான் என்னுடைய நண்பரிடம் பேசியபோது அது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்தியக் குடிமகனாக என்னுடைய பேச்சு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த நாட்டு மக்கள் மீது வைத்திருக்கும் அன்பும் மிகவும் புனிதமானது” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.