சின்னத்திரை படப்பிடிப்பை 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு நடத்துவது என்பது சாத்தியமில்லாதா காரியம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை 20 நபர்களை மட்டும் வைத்து நடத்தாலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்தார்.ஆனால் இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லாத காரியம் எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்தச் சிக்கல் குறித்து புதியதலைமுறையின் ‘நியூஸ்360 ‘ நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டது. இதில் சின்னத்திரை தலைவர் சுஜாதா மற்றும் பொதுச்செயலாளர் குஷ்பு ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துகளைப் பகிர்ந்தனர்.இதில் நடிகை குஷ்பு கூறும் போது “ சின்னத்திரை தொடர்களை 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு நடத்துவது என்பது சாத்தியமில்லாதா காரியம். காரணம் தொடரின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் அவர்களின் உதவியாளர்கள் மட்டுமே 30 நபர்களுக்கு மேல் வந்து விடுவர். இதனைத் தவிர்த்து நடிகர் நடிகையர்கள் வேறு உள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை எபிசோடுகளை முடிக்க வேண்டும். அப்பொழுதுதான் தயாரிப்பாளருக்கு இலாபம் கிடைக்கும். ஆனால் இது அரசு வரையறுத்துள்ள காலகட்டத்தில் எடுக்க இயலாது. இது தொடர்பாக நாங்கள் பெப்ஸி குழுமத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியை சந்தித்துப் பேசினோம். அவர் குறைந்தது சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த 35 நபர்களாவது தேவைப்படும் என்று கூறியதாக குஷ்பு பேசினார்.
மேலும் குஷ்புவிடம் மக்களிடம் OTT மீதான மோகம் அதிகரித்துள்ள நிலையில் சின்னத்திரை தொடர்களுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த குஷ்பு “ கொரோனா காலத்தில் இல்லத்தரசிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணம் மற்ற நேரங்களை விட இந்த நேரத்தில் அவர்களுக்கான வேலைப்பளு அதிகமாக இருந்தது. பொதுவான நாட்களில் அவர்களுக்கு இந்த மெகா தொடர்கள் தான் களைப்பை நீக்குபவையாக இருந்தது. அதனால் சீரியல்களுக்கனா வரவேற்பு என்பது குறையவில்லை. OTT யை பொறுத்தவரை, அதில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க இயலாது. ஆனால் சின்னத்திரை அப்படியல்ல.ஆகவே அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடர்கள் எங்கு நிறுத்தப்பட்டதோ அங்கிருந்தே ஒளிபரப்பப்படும்.
இது குறித்து சுஜாதா கூறும் போது “ சின்னத்திரை தொடர்களை நடத்துவதற்குக் குறைந்தது 50 நபர்கள் தேவைப்படும்.இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் அவர்களுக்கான முழுப் பொறுப்பையும் தயாரிப்பாளர்கள் ஏற்க இயலாது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM