மத்திய அரசின் புதிய மின்சார சட்டத்திருத்தத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
கடந்த ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி மத்திய அரசு, மின்சார சட்டத்தில் திருத்தங்களைச் செய்து புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டு மாநிலங்களின் கருத்தைக் கேட்டிருந்தது. ஆனால் இந்தச் சட்டத்தில் மாநிலங்களின் மின் வாரியங்களைப் பிரித்து அதனை வெறும் விநியோக நிறுவனங்களாக மாற்றும் வகையிலான விதிகள் இருப்பதாகவும், தனியார் நிறுவனங்களிடம் உற்பத்தியைக் கொடுப்பதன் மூலம் அவர்களே மின்சாரத்தை விற்கும் உரிமையைப் பெற்று விடுவார்கள் எனவும் விமர்சனங்கள் எழுந்தன.
விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும்.
மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். pic.twitter.com/aDOMAIOTI5
— M.K.Stalin (@mkstalin) May 8, 2020
இந்நிலையில் இந்தப் புதிய சட்டத்திருத்தத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “ உதய் திட்டத்தில் அதிமுக அரசு கையெழுத்திட்டதால் மின்கட்டண உயர்வு, மின் வாரியத்திற்கு மீண்டும் இழப்பு, இலவச மின்சார திட்டத்திற்கு ஆபத்து எனத் தமிழகம் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வருகிறது.
மத்திய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்தம் விவசாயிகளின் இலவச மின்சாரத் திட்டத்திற்கும், ஏழை மக்களுக்கு நூறு யூனிட் வரை வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என அவர் அதில் கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM