சுரேஷ் ரெய்னா சம்பவம் செய்த நாள் இன்று. 10 வருஷத்துக்கு முன்னாடி இதேநாளில் உலகக்கோப்பை டி-20 போட்டியில் சதம் விளாசினார் ரெய்னா. இதன்மூலம் சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். 2010-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மே 2-ம் தேதி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின்போது இந்தச் சாதனையை செய்துகாட்டினார் ரெய்னா. டி20 கிரிக்கெட் போட்டியில் சர்வதேச அரங்கில் கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கல்லமுக்கு அடுத்தபடியாக சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற சிறப்பை ரெய்னா பெற்றார்.

ரெய்னா

அந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே முரளி விஜய் நடையைக்கட்ட ரெய்னா களமிறங்கினார். சிறிது நேரத்தில் 16 ரன்களுடன் தினேஷ் கார்த்திக் நடையைக்கட்டினார். அதன்பின் யுவராஜ்- ரெய்னா கூட்டணி அமைத்து அமர்க்களப்படுத்தினர். ரெய்னா அதிரடியாக ஆட யுவராஜ் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். யுவராஜ் 37, யூசுப் பதான் 11 ரன்களில் அவுட்டானாலும் தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரெய்னா சதம் அடித்து அசத்தினார். இந்தப்போட்டியில் 60 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதில் 9 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் அடக்கம். ரெய்னாவின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

இந்தப்போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரெய்னாவின் ட்விட்டர் பக்கங்கள் முழுவதும் இந்த நினைவுகளில் மூழ்கியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் ரசிகர்கள் ரெய்னாவைக் கொண்டாடுகின்றனர்.

இதுகுறித்து ட்விட்டரில் ரெய்னா, “என்னால் மறக்கமுடியாத தருணங்களில் அதுவும் ஒன்று. டி20 போட்டியில் என் நாட்டுக்காக நான் அடித்த முதல் சதம் எனக்கு சந்தேகமின்றி நிறைய நம்பிக்கைகளையும் புத்துணர்ச்சியையும் அளித்தது. நான் களத்தில் இருக்கும்போது எப்போதும் என்னுடைய 100 சதவிகித ஆற்றலை வெளிப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.