தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அந்த வளாகத்திலிருந்த பாம்புகள் பிடிக்கப்பட்டதுடன், புதர்களும் அகற்றப்பட்டன. இதற்கு காரணமான விகடனுக்கு நன்றி என கர்ப்பிணிகள் மற்றும் ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

பாம்பு

தஞ்சாவூர் இராசமிராசுதார் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் பாம்புகள் அதிகரித்திருப்பதுடன், அதன் நடமாட்டமும் அதிகளவில் இருக்கிறது. இதனால் ஊழியர்கள் தொடங்கி பிரசவத்துக்கு வரும் கர்ப்பிணிகள் வரை அனைவரும் பெரும் அச்சத்துடனே இருக்கின்றனர். மேலும், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரை விஷப்பாம்பு கடித்துவிட்டது.

அவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது குறித்து.. `தூய்மைப் பணியாளரைக் கடித்த பாம்பு!’ – கர்ப்பிணிப் பெண்களை அலறவிடும் தஞ்சை அரசு மருத்துவமனை’‘ என்ற தலைப்பில் விகடனில் செய்தி வெளியிட்டோம். இதையடுத்து, உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் பாம்புகளைப் பிடிக்கவும், புதர்களை அகற்றவும் நடவடிக்கை எடுத்தது.

பாம்பு பிடிக்கும் பணி

இதில் 5 கண்ணாடி விரியன் பாம்பு உட்பட மொத்தம் 12 பாம்புகள் பிடிபட்டன. இவை கர்ப்பிணிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நிம்மதியைத் தந்துள்ளது. `நிர்வாகத்தின் விளக்கத்துடன் செய்தி வெளியிட்டு இதற்கு வித்திட்ட விகடனுக்கு நன்றி’ என இது தொடர்பாக நமக்கு தகவல் தெரிவித்த ஊழியர்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

இது குறித்து மருத்துவமனை வட்டாரத்தில் பேசினோம், “இந்த மருத்துவமனை வளாகத்தில் விஷப் பாம்புகள் வருவதாக ஊழியர்கள், பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் தங்கும் விடுதி அருகே காடு போல் மண்டிக் கிடந்த புதர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. மேலும், அருகானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் என்ற அறக்கட்டளை அமைப்பின் மூலம் பாம்புகளைப் பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அரசு மருத்துவமனை

இதையடுத்து அறக்கட்டளையைச் சேர்ந்த சதீஷ்குமார் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் பாம்புகளைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 5 கண்ணாடி விரியன் பாம்புகள், 2 சாரைப் பாம்புகள், 3 சிறு வகைப் பாம்புகள் என மொத்தம் 12 பாம்புகளைப் பிடித்தனர்” என்றனர். இதுகுறித்து சதீஷ்குமார் கூறியதாவது, “கண்ணாடி விரியன் பாம்புகள் பெரும்பாலும் நாஞ்சிக்கோட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முந்திரிக்காடுகளிலும், ரெட்டிப்பாளையம், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளிலும்தான் இருக்கும்.

தஞ்சாவூர் நகருக்குள் “இப்போதுதான் முதல் முறையாகக் கண்ணாடி விரியன் பாம்புகளைப் பார்க்கிறோம். அருகிலுள்ள காவிரி ஆறான கல்லணைக் கால்வாய் வழியாக மருத்துவமனைக்குள் வந்திருக்கலாம் எனக் கருதுகிறோம். பிடிபட்ட பாம்புகளில் விஷத்தன்மை இல்லாத சாரை மற்றும் சிறுவகைப் பாம்புகளை வயல்களில் விட்டுவிட்டோம்.

பாம்பு

பிடிபட்ட கண்ணாடி விரியன் பாம்புகள் 5 அடி நீளம் இருக்கும். மேலும், கடும் விஷத்தன்மை கொண்டது என்பதால் காப்புக் காடுகளில் விடுவதற்காக வனத் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். இன்றும் பாம்பு பிடிக்கும் பணிகள் நடைபெறுகிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.