`ஐபிஎல் வரப்போகுது… பொழுது போறதே தெரியாது’ என்று இரண்டு மாதங்களுக்கு முன்புவரை நினைத்துக்கொண்டிருந்த ஐபிஎல் ரசிகர்கள் இன்று, `பொழுதே போகமாட்டேங்குதே’ என்று கதறிக்கொண்டிருக்கிறார்கள். கொரோனாவால் ஐபிஎல் கொண்டாட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ரசிகர்கள் பலரும் கடந்த ஆண்டுகளில் களைகட்டிய ஐபிஎல் போட்டிகளின் ஹைலைட்ஸைப் பார்த்து மனதைத் தேற்றி வருகிறார்கள். கடந்த 30 நாள்களில் மட்டும் கூகுள் தேடலில் `Ipl Highligths’ என்ற தேடலுக்கான சார்ட் மேலும் கீழும் ஏகிறியடித்துள்ளது.

Ipl Highlights

லாக் டெளன் காரணமாக உலகமே முடங்கியிருப்பதால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ள இந்த நேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை ஒரு சின்ன ப்ளாஷ் பேக் சுழல் போட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வின்டேஜ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைத்துச் செல்லப் போகிறது இந்தக் கட்டுரை. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதன்முதலாகச் செய்தவை, அதாவது முதல் கேட்ச், முதல் சதம், முதல் ஆரஞ்ச் மற்றும் பர்ப்பிள் கேப் என சிஎஸ்கே வீரர்கள் முதன்முதலாகச் செய்தவற்றை இந்தக் கட்டுரையில் அலசலாம் வாங்க.

சிஎஸ்கே-வின் முதல் அடி!

2008-ம் ஆண்டு, முதல் ஐபிஎல் சீசனின் இரண்டாவது போட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் போட்டி. சிஎஸ்கே-வுக்கு ஐபிஎல்லில் கால் எடுத்து வைத்த முதல் அடியே அதிரடிதான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். ஓப்பனிங் இறங்கிய பார்தீவ் படேலும் ஹெய்டனும் அதிரடி காட்டத் தொடங்கிய சற்று நேரத்திலேயே பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ஒன் டவுன் இறங்கிய மைக் ஹஸி, பஞ்சாப் பெளலர்கள் வீசிய பந்துகளைப் பஞ்சாகப் பறக்கவிட்டார். ஐபிஎல்லின் முதல் போட்டியில் 158 ரன்கள் குவித்து மெக்கல்லம் காட்டிய அதிரடியின் இன்ப அதிர்ச்சியிலிருந்து, ரசிகர்கள் வெளி வருவதற்குள்ளாகவே மைக் ஹஸியும் அதிரடி காட்டிச் சதமடித்தார். 116 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமலிருந்தார் ஹஸி. அவருக்கு உறுதுணையாக சுரேஷ் ரெய்னாவும் பத்ரிநாத்தும் பந்துகளைச் சிதறடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். ரெய்னா 13 பந்துகளில் 3 சிக்ஸர் 2 பவுண்டரிகளோடு 32 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். பத்ரிநாத் 14 பந்துகளில் 2 சிக்ஸர் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். சிஎஸ்கே வீரர்களின் அதிரடியால் மொத்த ஸ்கோர் 240-யைத் தொட்டது.

CSK First Match – 2008

241 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. அந்த அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மென் ஜேம்ஸ் ஹோப்ஸ் காட்டிய அதிரடியில் `இன்னிக்கு மேட்ச் காலி’ என்ற முடிவுக்கே வந்துவிட்டனர் சிஎஸ்கே ரசிகர்கள். 33 பந்துகளைச் சந்தித்த ஹோப்ஸ் கிடைக்கும் கேப்களில் எல்லாம் பவுண்டரிகளை ஸ்கோர் செய்து 71 ரன்களைக் குவித்தார். இந்த அதிரடி இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு வழியாக ஹோப்ஸை பெவிலியனுக்கு அனுப்பினார் சிஎஸ்கே பெளலர் பழனி அமர்நாத். அதன் பின்னர் வந்த சங்ககாரா 54 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்களை முழுமையாகச் சந்தித்திருந்தாலும் பஞ்சாப் அணியால் 207 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. 33 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது முதல் போட்டியிலேயே முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சிஎஸ்கே அடித்த இந்த 240 ரன்கள்தான் ஐபிஎல் தொடரில், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு `ஒரு அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர்’ என்ற ரெக்கார்டாக இருந்தது. 2011-ம் ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 246 ரன்கள் குவித்து, சிஎஸ்கே அணி தன் சொந்த ரெக்கார்டை முறியடித்தது.

முதல் சீசன்!

முதல் போட்டியைப் போலவே முதன் சீசனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றாகவே அமைந்தது. லீக் போட்டிகளில் 8 போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 112 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ். 31 பந்துகள் மீதமிருக்கையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே.

CSK first Season

இறுதிப் போட்டியில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்களில் 163 ரன்களைச் சேர்த்திருந்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 43 ரன்கள் அடித்திருந்தார். அடுத்து பேட் செய்த ராஜஸ்தான் அணியில், யூசுப் பதான் அதிகபட்சமாக 56 ரன்கள் குவித்திருந்தார். 18-வது ஓவருக்கு முன்பாகவே யூசுப் பதான் உட்பட அனைத்து பேட்ஸ்மென்களையும் அவுட் செய்திருந்தது சிஎஸ்கே. கடைசி இரண்டு ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி பந்து வரை போட்டியை எடுத்துச் சென்று, 18 ரன்களைச் சேர்த்தது ஷேன் வார்னே, சொஹைல் தன்வீர் ஜோடி. இதனால், முதல் சீசனின் ரன்னர் அப் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

பார்த்தீவ் படேல் & மன்ப்ரீத் கோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆரம்பக்கால ஓப்பனிங் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல். பவர்ப்ளே ஓவர்களில் கேப் பார்த்து பவுண்டரிகள் ஸ்கோர் செய்வதில் வல்லவர் இவர். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக முதல் ரன்னை அடித்தவர் பார்த்தீவ் படேல்தான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஓப்பனிங் இறங்கினார் பார்த்தீவ். பிரட் லீ வீசிய முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளும் டாட் பால்ஸ். மூன்றாவது பந்தை, மிட் ஆப்பிலிருந்த யுவ்ராஜிடம் தட்டிவிட்டு, க்விக் சிங்கிள் எடுத்து, ஐபிஎல்லில் சிஎஸ்கேவுக்கு முதல் ரன்னை பெற்றுத் தந்தார் பார்த்தீவ்.

சிஎஸ்கேவுக்காக முதல் ரன்களை மட்டுமல்ல, முதல் கேட்ச்சை பிடித்தவரும் பார்த்தீவ் படேல்தான். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான அதே போட்டியில் மன்ப்ரீத் கோனி வீசிய பந்தை சிக்ஸருக்கு அனுப்ப முயற்சி செய்தார் பஞ்சாப் அணியின் வீரர் கரன் கோயல். ஆனால், அது டாப் எஜ்ட் ஆகி பார்த்தீவ் படேல் கையில் மாட்டிக்கொண்டது.

ஆஜானபாகு உடற்கட்டு, ஆறாடி உயரம் என சிஎஸ்கே-வின் பீம் பாயாக வலம் வந்தவர் மன்ப்ரீத் கோனி. பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கரன் கோயல் விக்கெட்டை சாய்த்து சிஎஸ்கேவின் விக்கெட் அக்கவுன்டை ஓப்பன் செய்து வைத்தார் கோனி!

மேத்யூ ஹெய்டன்

வின்டேஜ் சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளம் மேத்யூ ஹெய்டன்! அதிரடி ஓப்பனிங், மங்கூஸ் பேட் என சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தவரும் மேத்யூ ஹெய்டன்தான். சிஎஸ்கேவுக்காக முதல் பவுண்டரி, முதல் சிக்ஸர் என இரண்டையும் விளாசியவர் ஹெய்டன். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில், பிரட் லீ வீசிய முதல் ஓவரின் 5-வது பந்தை, ட்ராக்கில் நடந்து வந்து தனது ஸ்டைலில் ஆன் சைடில் அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார் ஹெய்டன். ஹோப்ஸ் வீசிய 5-வது ஓவரின் 2-வது பந்தில் இறங்கி வந்து லாங் ஆன் திசையில் இமாலய சிக்ஸர் ஒன்றைக் காட்டினார் ஹெய்டன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் அரைசதம் அடித்ததும் அதிரடி மன்னன் ஹெய்டன்தான். 2008-ம் ஆண்டு சிஎஸ்கே அணி ஆடிய இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 81 ரன்களைக் குவித்து சிஎஸ்கேவுக்காக முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அன்று அவர் சந்தித்த 46 பந்துகளில் 12 பந்துகளை பவுண்டரிக்கும், 3 பந்துகளை சிக்ஸருக்கும் அனுப்பியிருந்தார் ஹெய்டன்.

Mathew Hayden CSK

இரண்டாவது சீசனில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரருக்கு ஆரஞ்ச் கேப் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2-வது ஐபிஎல் சீசனில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மனிஷ் பாண்டே மட்டுமே சதமடித்திருந்தார். காரணம், இந்தியாவில் ரன் குவிப்பது போல எளிதாக தென்னாப்பிரிக்க பிட்ச்களில் ரன்கள் சேர்க்க முடியவில்லை என்பதுதான். அப்படியான பிட்ச்களில் 12 போட்டிகளில் மட்டுமே ஆடி 52 என்கிற சராசரியோடு 572 ரன்களைக் குவித்து ஆரஞ்ச் கேப்பை தட்டிச் சென்றார் ஹெய்டன்.

மைக்கேல் ஹஸி

க்ளாஸ், அதிரடி இரண்டும் சேர்ந்தால் மைக் ஹஸி. சிஎஸ்கே அணியின் ஃபேவரிட் வீரர்களுள் முக்கியமானவர் ஹஸி. 10 ஆண்டுகளாக ஐபிஎல்லில் கொடி கட்டிப் பறக்கும் சிஎஸ்கேவுக்கு முதல் சதம் அடிப்பது என்பது ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் சென்னை அணி ஆடிய முதல் போட்டியிலேயே சதமடித்தது இன்னும் ஸ்பெஷல்! கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஒன் டவுன் இறங்கிய ஹஸி சரியாக 50 பந்துகளில் சதம் கடந்தார். இன்னிங்ஸின் இறுதியில், 54 பந்துகளில் 116 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமலிருந்தார் ஹஸி. ஹஸியின் அதிரடியில் 8 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடங்கும்.

மைக் ஹஸி

இந்தப் போட்டியில், க்ளாஸ் ப்ளேயர் ஹஸியின் ஸ்ட்ரைக் ரேட் 214.81!

தோனி & பத்ரிநாத்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதற்கட்ட ஓவர்களிலேயே விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த சில போட்டிகளில், அணியைத் தாங்கிப் பிடித்தவர் சுப்ரமணிய பத்ரிநாத். சிஎஸ்கேவின் ஃபீல்டிங்கிலும் பத்ரிநாத்துக்கு முக்கிய பங்குண்டு. 2008-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர் கொண்டது. அந்தப் போட்டியில் வீசப்பட்ட முதல் ஓவரின் கடைசிப் பந்தை பாயின்ட் திசையில் அடித்தார் மும்பை இந்தியன்ஸ் வீரர் சனாத் ஜெயசூர்யா. தனது பார்ட்னர் லூக் ராஞ்சியை சிங்கிளுக்கு அழைத்த ஜெயசூர்யா, பின்னர் வேண்டாம் என்று சொல்லிவிட, மீண்டும் கிரீஸுக்குள் செல்ல முயற்சி செய்தார் ராஞ்சி. அந்த சமயத்தில், பாயின்ட்டில் பந்தைப் பிடித்த பத்ரிநாத், பந்தை ஸ்டம்புக்கு எறிய அது டிரைக்ட் ஹிட் ஆனது. பத்ரிநாத்தின் சூப்பர் த்ரோவில் சிஎஸ்கே-வுக்கு முதல் ரன் அவுட் கிடைத்தது.

ஸ்டம்பிங்கிற்கு பெயர் போன மகேந்திரசிங் தோனிதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக முதல் ஸ்டம்பிங் செய்தவர். ஆனால், முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக யாரும் ஸ்டம்பிங் முறையில் அவுட் செய்யப்படவில்லை. முதல் சீசனில், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைச் சேர்த்து மொத்தம் 16 போட்டிகளில் ஆடியது சிஎஸ்கே. இதில், 11 போட்டிகளுக்கு தோனியும் 5 போட்டிகளுக்கு பார்த்தீவ் படேலும் விக்கெட் கீப்பராக செயல்பட்டனர். ஆனால், இருவருக்கும் ஸ்டம்பிங் செய்ய ஒரு வாய்ப்பு கூட அமையவில்லை.

MS Dhoni

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் தொடரின் 5-வது போட்டி, அந்த ஆண்டில் சிஎஸ்கே அணிக்கு 2-வது போட்டி அது. அந்தப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 7-வது ஓவரின் 5-வது பந்தில் ராபின் உத்தப்பாவை ஸ்டம்ப் செய்தார் தோனி. சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் வீசிய பந்து உத்தப்பாவை ஏமாற்றிவிட்டு தோனி கையில் தஞ்சமடைய, சிறிதளவும் யோசிக்காமல் எப்போதும் போல் மின்னல் வேகத்தில் ஸ்டம்பை தட்டினார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய 18-வது போட்டியில்தான் ஸ்டம்பிங் மூலம் அந்த அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது!

லக்‌ஷ்மிபதி பாலாஜி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீனியர் பெளலர் லக்‌ஷ்மிபதி பாலாஜி. ஒரே போட்டியில் இரண்டு சாதனைகளைத் தன்வசமாக்கினார் பாலாஜி. முதல் ஐபிஎல் சீசனின் 31-வது போட்டி அது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 182 ரன்கள் இலக்காக வைத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன, கையில் 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதமிருந்தன. அந்த ஓவரின் மூன்றாவது பந்தை சிக்ஸருக்கு அனுப்ப நினைத்த இர்ஃபான் பதான், தூக்கி அடித்து, டீப் ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்த இரண்டு பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க நினைத்த பியூஷ் சாவ்லாவும் விஆர்வி சிங்கும் கேட்ச் கொடுத்து வெளியேற ஹாட்ரிக் சாதனை படைத்தார் பாலாஜி.

Lakshmipathy Balaji CSK

இதற்கு முன்னதாகவே தான் வீசிய 13-வது ஓவரில் ஷான் மார்ஷ், ராம்நரேஷ் சர்வான் ஆகிய இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பியிருந்தார் பாலாஜி. எனவே, ஓரே போட்டியில், `ஹாட்ரிக்’, `ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள்’ என இரண்டு சாதனைகளைச் சொந்தமாக்கினார் பாலாஜி. இந்த இரண்டு சாதனைகளையும் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதன்முதலாகச் செய்தவர் பாலாஜிதான்.

சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்ல ஐபிஎல்லுக்கும் பாலாஜி எடுத்த ஹாட்ரிக்தான் முதல் ஹாட்ரிக்!

டுவைன் பிராவோ

பேட்டிங், பெளலிங், ஃபீல்டிங், டான்சிங் எனக் களத்தில் என்டெர்டெயினராக இருக்கும் பிராவோதான் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆல் டைம் ஃபேவரிட். ஐபிஎல் தொடங்கி 5 சீசன்கள் கழித்துத்தான் சிஎஸ்கே வீரருக்கு பர்ப்பிள் கேப் கிடைத்தது. அந்த சீசனில் தோனி, பிராவோ கையில் பந்தை ஒப்படைக்கும் போதெல்லாம் `விக்கெட் நிச்சயம்’ என்று சிஎஸ்கே ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு விக்கெட் வேட்டை நடத்தினார் பிராவோ. மொத்தம் 18 போட்டிகளில் ஆடி 32 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார் பிராவோ.

Dwayne Bravo CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதன்முதலாக செய்யப்பட்டவைகளை இங்கே பார்த்தோம். இதில் பலவற்றைச் செய்தவர்கள் இப்போதுள்ள சிஎஸ்கே அணியில் இல்லை. ஆனால், சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மேற்கண்டவற்றுள் ஏதாவது விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள். அப்படியே உங்களுக்குப் பிடித்த வின்டேஜ் சிஎஸ்கே ப்ளேயர் யார் என்பதையும் மறக்காமல் கமென்ட் பண்ணுங்க மக்களே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.