எனக்கு அது அரைடவுசர் காலம். பெரிய `பிளாஸ்டிக் பால்’ பிளேயராக என் தெருவில் ஃபார்மாகியிருந்தேன். நான் உடைக்காத வீடுகளின் ஓடுகள் எங்கள் தெருவில் குறைவு. எங்கே, `டமால்…’ சத்தம் கேட்டாலும், எல்லோரும் வந்துபிடிப்பது என் காதாகத்தான் இருக்கும். நாள்தோறும் நாலு சண்டைகளேனும் என்னால் உண்டாகும். தெருவை தாண்டி சிக்ஸர்கள் அடித்து, அடிக்கடி பந்துகளை வேறு தொலைப்பேன். அப்படி சிக்ஸர் அடித்து ஒயர்மேன் வீட்டின் அலங்கார விளக்கை உடைத்த நாள்தான், அந்த சம்பவம் நடந்தது. ஒயர்மேன் அந்தக்காலத்திலேயே காதல் கல்யாணம் செய்தவர். ஏழு பெண்பிள்ளைகள். கடைசியாக, ஓர் ஆண்பிள்ளை. அவன், என் பெஸ்ட் தோஸ்து! நான் பந்தடித்த போது வீட்டில் இருந்தது, நாலாவது அக்கா. அவர் பெயர், கவிதா! நல்ல அக்கா! உறவுமுறைச்சொல்லித்தான் எப்போதுமே அழைப்பார். இப்போதும் அப்படித்தான்.

சிரித்தபடியே, `என்ன மருமவனே… மனசிலே பெரிய சச்சின்னு நெனைப்பாக்கும்…’ என்று சொல்லிவிட்டு, பந்தை வீசினார். அந்த சொல், அடுத்த பதினைந்து வருடங்களுக்கு என்னை படாதபாடு படுத்தும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. `மருமவன்’ என்ற சொல்லல்ல, அந்த சொல்லுக்கு அர்த்தம் கூட எனக்கு அப்போது தெரியாது. ஆகவே, அந்த சொல் `சச்சின்’. பின்னாளில், வகுப்பில் வாத்தியார் எழுப்பி, `என்னாவாகப்போறே…’ என்று கேட்கும்போது, `சச்சின் மாதிரி கிரிக்கெட் பிளேயராவப்போறேன்…’ என்று சொல்லும் அளவுக்கு நிலைமை போனது. இப்போதெல்லாம் ஐபிஎல் காலம். தெருவுக்கு நாலு கிரிக்கெட் பிளேயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அப்போதெல்லாம் `கிரிக்கெட்டர் ஆவேன்’ என்று சொல்வது, ரொம்பவே அபூர்வம். எங்கள் பள்ளியில் அதிகம் கவனிக்கப்பட்ட இரண்டாவது லட்சியம் என்னுடைய `கிரிக்கெட்டர் ஆவேன்’ என்பதுதான். முதலாவது, லோகு சொன்ன, ‘எங்க ஊர் மினி பஸ்ஸூக்கு கண்டக்டர் ஆவேன், சார்’ என்ற லட்சியம்!

ஆக, கவிதா அக்கா சொன்னதில் இருந்து, சச்சின் என்ற பெயர் மனதில் ஒட்டிக்கொண்டது. அதற்குப்பிறகு, இந்தியா ஆடும் எந்த கிரிக்கெட் போட்டியைப்பார்த்தாலும், சச்சினுக்கு மட்டும் தனியாக என் கண்கள் ஜூம் வைத்தன. எப்போது என்று தெரியவில்லை. நான் அதிகாரப்பூர்வமாக சச்சின் ரசிகனாக ஆனேன்! பள்ளி இடைவேளையில் எல்லோரும் சக்தி மான் ஸ்டிக்கரை வாங்கும்போது, நான் மட்டும் சச்சின் ஸ்டிக்கரை தேடிக்கொண்டிருப்பேன். பள்ளி நாட்களில் இந்தியா ஆடும் போட்டியேது வந்துவிட்டால், எனக்கு நிம்மதியே இருக்காது. ஒவ்வொரு இடைவேளைக்கும் டிவி இருக்கும் கடைகளாகப்பார்த்து அமர்ந்துவிடுவேன். சச்சின் கிரீஸில் இருந்தால் இன்னும் டென்ஷன் எகிறும். நான் ஸ்ட்ரைக்கர் எண்டிலேயே சச்சின் நின்றுவிடக்கூடாதா என்று மனசு படபடக்கும். ஸ்ட்ரைக்கர் எண்டுக்கு வந்தால், எங்கே அவுட் பண்ணிவிடுவார்களோ என்று பயம்!

Sachin Tendulkar

அந்தத் தருணங்களில்தான், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை சரிவர கையாள முடியாமல் திணறிக்கொண்டிருந்தார், அவர். ரன்குவிக்கவும் பயங்கர தடுமாற்றம். கேப்டன் பொறுப்பு, சச்சினின் மனதிடத்தை மண்திட்டை கரையானென அரித்துக்கொண்டிருந்த காலம், அது. எதிர்ப்புறத்தில், கங்குலி சாம்பியன் பிளேயராக வளர்ந்து வந்து கொண்டிருந்தார். இப்போது வேண்டுமானால் `எல்லோரும் ஒரே அணிக்காகவே விளையாடுகிறார்கள்’ என்ற புரிதல் நமக்கிருக்கலாம். ஆனால், அந்த வயதில் அதெல்லாம் சாத்தியமே இல்லை. நம் ஆள் எவ்வளவு அடிக்கிறான் என்பதே நமக்கு முக்கியமாக இருக்கும். ஆகவே, கங்குலி மீது எனக்கு பயங்கர காண்டாக இருந்தது. ஏனென்றால், அதுவரை சச்சினுக்கு நிகர்சேவல் இந்திய அணியில் இல்லை. கங்குலிதான் முதல் ஆள்.

ஒருகட்டத்தில், அழுத்தத்தை தாங்க முடியாமல் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார், சச்சின். அஞ்சலியை திருமணம் செய்த முடிவுக்கு அடுத்தபடியாக, சச்சின் எடுத்த முக்கிய முடிவு, அது. கங்குலியின் தலையில் கிரீடம் ஏறியது. அணிக்குள் பல மாற்றங்களை செய்து, ஸ்கோர் செய்ய ஆரம்பித்தார் கங்குலி. அணியின் வெற்றிகளுக்கும் எந்தக் குறைவுமில்லாமல் இருந்தது. அதுவும், நாட்வெஸ்ட் தொடரில் சட்டையைக்கழட்டி சுழற்றி, ஒரு சூப்பர்ஹீரோ ரேஞ்சுக்கு கங்குலி உயர்ந்திருந்தார். விளைவாக, எங்கள் தெருவின் பல பிள்ளைகள் கங்குலி ரசிகனாக மாறினார்கள். என் பங்காளி மணி, கடைக்குப்போனால் கூட, `ரெண்டு கங்குலி குடுங்க…’ என்று கேட்கும் அளவுக்கு, திரிந்தான். நான் மட்டுமே, எதற்கும் அசராமல் சச்சின் ரசிகனாக நின்றேன்!

அடுத்து தாக்கியது, சேவாக் புயல்! இப்போது நான், `ரப்பர் பால்’ கிரிக்கெட்டர்! எனக்கென ஒரு அணியை உருவாக்கியிருந்தேன். பிளேயிங் பிளேஸூம் பிள்ளையார் கோவில் சந்தில் இருந்து, பிளாட் கிரவுண்டுக்கு மாறியிருந்தது. சேவாக்கைப்பற்றி சொல்லவே வேண்டாம். இடியமீன் வகை அதிரடி ஆட்டத்தால், சச்சினுக்கு கங்குலியை விட அதிக டஃப் கொடுத்தவர், சேவாக். பார்ப்பதற்கும் ஆள் சச்சின் மாதிரியே இருந்ததால், சச்சின் ரசிகர்களில் பலர் எளிதாகவே, அவரிடம் வீழ்ந்தார்கள். அதுவும், டெஸ்ட்டில் 300க்கு மேல் அவரடித்த போட்டியின்போது, கொத்து கொத்தாக `சேவாக் ஃபேன்ஸ்’ உருவானார்கள். `சேவாக் பிரதர்ஸ்’ என்ற பெயரில் எங்களூரில் ஒரு அணிகூட உருவானது. அந்தப்புயலிலும், நிறுத்திவைத்த புல்டோஸர் கணக்காக, நான் மட்டும் சச்சின் ரசிகனாகவே நீடித்தேன்!

சச்சின்

இப்போது, நான் `கார்க் பால்’ பிளேயர். ஹெல்மெட், கிளவுஸெல்லாம் போட்டு விளையாடும் அளவுக்கு வந்திருந்தேன். அது, தோனி பாகிஸ்தானை பிரித்து மேய்ந்து 148 ரன்கள் எடுத்த அடுத்த நாள்! அதேதான்… எங்கள் அணியின் பெரும்பாலான நபர்கள், திடீர் தோனி ரசிகர்களாக மாறி விட்டிருந்தனர். தோனியின் பேட்டிங் ஸ்டைலில் இருந்த கிராமத்துத்தனம் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போயிருந்தது. ஒவ்வொரு பந்துக்கும், பேட்டை `களைக்கொத்தை’ தூக்கி கொத்துவதைப்போல கொத்த ஆரம்பித்தார்கள். அடுத்துவந்த, பல மாதங்களுக்கு அவர்களிடம் தோனிப்பித்து தொடர்ந்தது. அது லைட்டாக குறையும் நேரத்தில், இலங்கையை இடிமின்னலென தாக்கி ரன்களை குவித்தார், தோனி. 183 ரன்கள்! ஹெலிகாப்டர், ஏரோபிளைன் என்றெல்லாம் செம சீன் காட்டினார். போதாதா?! எங்கு திரும்பினாலும் தோனி நாமம்தான். ஏழாம் நெம்பர் ஜெர்ஸிக்கு ஏக அடிதடி!

பொல்லாதவனில் வேலைக்குக்கிளம்பும் தனுஷைப் பார்த்து பொருமும் சந்தானம் லெவலுக்கு நான் வந்துவிட்டிருந்தேன். ஆனாலும், என் ஜெர்ஸிக்கு பத்தாம் நெம்பரையே தேர்ந்தெடுத்தேன்!

அடுத்து வந்தார், கோலி! சச்சின் இப்போது ஓய்வுக்கு அருகில் இருந்தார். நான் கிளப்களில் `ஸ்டிச் பால்’ கிரிக்கெட் ஆடும் அளவுக்கு வந்திருந்தேன். கோலி அப்படியே கண்ணாடி போடாத கங்குலி. அவ்வப்போது, கவர்டிரைவ்களில் மட்டுமே கோலியிடம் சச்சின் தெரிவார். மற்றபடி, கோலி ஒரு பர்ஃபெக்ட் மாடர்ன் கிரிக்கெட்டர்! ஒரு பர்சனாலிட்டியாக கோலியை எனக்கு அதிகம் பிடிக்கும். அவசரப்பட்டு அதிரடி முடிவெடுத்து அல்லல்படும் அப்பாவி கோலியையும் பிடிக்கும். ஒரு ஷாட் நன்றாக வரவேண்டுமென்பதற்காக, இரவுபகல் பாராமல் பயிற்சியில் ஈடுபடும் வெறித்தனக் கோலியையும் பிடிக்கும். ஆனால், கிரவுண்டில் கால்வைக்கும் அந்தநொடி, எனக்குள் இருந்து, `சச்சின் ரசிகன்’ வந்துவிடுவான். எந்த சச்சின் ரசிகனுக்குமே அப்படித்தான்!

கிரிக்கெட் பார்க்கும் எந்தக்கூட்டத்திலும், சச்சின் ரசிகனை தனியாக கண்டுபிடித்துவிட முடியும். அதற்கு ஒரு வழியிருக்கிறது. எவனாவது ஒரு இந்தியன் பிளேயரைப் பார்த்து, `என்னமா ஆடுறான்… இவன்தான்டா அடுத்த சச்சின்…’ என்று சொல்லிவிட்டால் போதும். ‘அடேய்… ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே ஒரு சச்சின் தான்டா…’ என்று களமிறங்கிவிடுவார்கள். உண்மையில், சச்சின் அளவுக்கு இந்தியப்பிள்ளைகளின் அன்னையர்களிடம் வறுபட்ட இன்னொரு ஆள் இல்லை. இப்போது இருக்கும் அன்னையர்கள், ரொம்பவே லிபரலாக இருக்கிறார்கள். ஆனால், அப்போதைய அன்னையர்கள் பெரும்பாலும் டிக்டேட்டர்கள். இப்போதைய அன்னையர்கள், பேசிப்பார்த்துவிட்டுதான் அடிக்க கை ஓங்குகிறார்கள். ஆனால், அப்போதைய அன்னையர்கள் அடித்துவிட்டுத்தான் பேசவே செய்வார்கள். அந்த அடியும் சாதாரணமானதாக இருக்காது. சமையலறைக் கரண்டி முதல் சம்மட்டியின் கைப்பிடி வரை தாக்கும் ஆயுதங்களாக இருக்கும். அப்படி அடிவாங்கித்தருவதில் பெரும்பங்கு சச்சினுக்கு இருக்கும். அவர்பாட்டுக்கு அடிக்கடி செஞ்சுரி அடித்து உசுப்பேற்றிவிட, நாங்கள் கிரவுண்டே பலியென கிடந்து வீட்டில் வேட்டு வாங்குவோம். அதுவும் பரீட்சை நேரங்களில், இப்போதைய ஊரடங்கு நிலைமைதான். டிவியில் கூட மேட்ச் பார்க்க முடியாது. போதாக்குறைக்கு, வீட்டுக்கு வரும் எதிர்த்த வீட்டு அக்கா வேறு, `அவனுக்கு காசு வருது, விளையாடுறான்… அதை எதுக்கு கண்ணு நாம பாத்துக்கிட்டு…’ என்று ஏத்திவிட்டுப் போகும். இன்னொரு அக்கா வந்து, ‘எல்லாத்துக்கும் இந்த சச்சின்பயதான் காரணம்…’ என்று, இன்னும் பரபரப்பாக்கும். நம்ம நேரம், பரீட்சையில் வேறு ஃபெயிலாகி தொலைவோம். மீண்டும் சச்சினை அடித்துப்புடைத்து அடுப்பில்போட்டு வறுப்பார்கள், அன்னையர்கள்.

சச்சின் – கோலி

இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், எங்களுக்கு சச்சின் எப்போதுமே ஸ்பெஷல்! ஏனென்றால், `சச்சின் ரசிகன்’ என்பது ஒரு அடையாளம் என்பதையும் தா ண்டி, அதுவொரு வாழ்வியல்! சச்சினின் ரசிகர்கள் எல்லோருக்குள்ளும் சச்சினின் ஒரு குணமாவது இருக்கும். எனக்குள் இருப்பதாக நான் கருதுவது, செய்ததை சொல்லாமை! சும்மா இல்லை. சச்சினுக்கு இருந்த அளவுக்கு புகழ் வேறு எந்த வீரருக்காவது இருந்திருந்தால், அவர்களின் ஆட்டம் பயங்கரமாக இருந்திருக்கும். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து விலகிய நாளை, காந்தி இறந்த நாளோடு ஒப்பிட்டு எழுதியது, ஓர் அமெரிக்கப் பத்திரிக்கை. ஆனால், சச்சின் எங்குமே எப்போதுமே ததும்பி வழிந்ததில்லை. கிரவுண்டில் கூட யார் மீதும் அவர் அவ்வளவாக கோபப்பட்டதில்லை. சிறிதாக ஒரு முறைப்புக்கூட அவரிடம் இருக்காது. முக்கியமாக, எதிரணியை சீண்டும் எந்தச்செய்கையும் சச்சினிடம் இருந்து வெளிப்படாது. `சச்சின் எரா’ இருந்தவரை மட்டுமே, கிரிக்கெட் ஜென்டில்மேன் கேமாக இருந்ததாக நான் கருதுகிறேன்!

இந்தியாவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியது கபில்தேவ் வாங்கிய கப் என்பார்கள். அதே போல, இந்தியாவை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் தேசமாக மாற்றியது, சச்சினின் பேட்! சச்சின் என்ற அந்த ஒற்றைமனிதன்தான், ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டின் வியாபாரத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்சென்றவன். சந்தேகம் இருந்தால், அப்போது சச்சின் ஆடாத அல்லது சச்சின் சீக்கிரமே அவுட்டான போட்டிகளின் டிஆர்பியை எடுத்துப் பார்க்கவும். ஒருதேசத்தின் மொத்த ஆன்மாவையும் நெஞ்சில் சுமந்தபடி களத்தில் நின்ற ஒருவன், சச்சினுக்கு முன்னும் பின்னும் சத்தியமாக எவருமில்லை. அதனால்தான், `ஒவ்வொரு சகாப்தத்திலும் இப்படியொருவர் இருந்தாரா என்பதைப்போல ஒருவர் வருவார். இந்த சகாப்தத்தில் அது சச்சின்!’ என்று, பத்திரிகைகள் தலையங்கம் எழுதின.

`Sachin’ is not a word, He is always an emotion for Indians!

#HBDSachin

ஆமாம்… இது சச்சினுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துதான். ஆனால், வாழ்த்தா முக்கியம்? சச்சின் பற்றி நினைப்பதும் பேசுவதுமே சுகம்தானே..!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.