களத்தில் மூன்று அடி வில்லோவைக் கொண்டு சச்சின் நிகழ்த்திய சாதனைகள் கணக்கில் அடங்காதது. புயலாகப் பாய்ந்தும் சூறாவளியாக சுழன்றும் வந்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியதில், பவுலர்களோடு சேர்த்து ஸ்கோர்போர்டு ஆபரேட்டர்களுக்கு வியர்த்து கொட்டியது. ரன்களை வாரிக்குவித்த சச்சின் எனும் பேட்ஸ்மேனின் பெருமையை `மாஸ்டர் ப்ளாஸ்டர்’, `லிட்டில் மாஸ்டர்’ போன்ற பெயர்கள் பறைசாற்றினாலும், `கிரிக்கெட்டின் கடவுள்’ எனும் நிலையை அடைய அவருள் இருக்கும் மாயாஜால பந்துவீச்சாளனின் பங்கும் உண்டு. அப்படி, சச்சினின் இன்னொரு பரிமாணமான பந்துவீச்சாளர் நிகழ்த்திய சில அற்புதங்களைக் காண்போம்…

Sachin Tendulkar

2001-ம் ஆண்டு நடந்த பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டி. உலக கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த போட்டிகளில் ஒன்று. `அவ்ளோதான், இந்தியா காலி’ என நினைத்த வேளையில், ஃபாலோ ஆனில் லட்சுமணின் இரட்டை சதமும், டிராவிட்டின் சதமும் போட்டியை தலைகீழாக மாற்றியிருக்கும். தோல்வி என்பதிலிருந்து டிராவை நோக்கிய திரும்பும் மேட்ச், இந்திய பௌலர்களின் அதிரடியால் வெற்றியின் பக்கம் முன்னேறத் தொடங்கியிருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவின் ஹெய்டனோ நங்கூரம் பாய்ச்சியதுபோல் அசராமல் நின்றுகொண்டிருப்பார். களத்துக்குள் புதிதாக நுழைந்த கில்கிறிஸ்ட் மட்டும் ஹெய்டனுக்கு பக்கபலமாக ஒரு இன்னிங்ஸ் ஆடினால் போதும். மேட்ச் டிராவில்தான் முடியும் என்கிற பரபரப்பான நிலை!

அப்போது, `One over for you, mate’ என்று சச்சினை அழைப்பார் கேப்டன் கங்குலி. முதல் பந்திலேயே lbw செய்து, கில்கிறிஸ்ட்டை கோல்டன் டக்கில் வெளியேற்றுவார் சச்சின். கிடைத்த ஒரு ஓவரிலேயே, கில்கிறிஸ்டை காலி செய்ததும், அடுத்தடுத்த ஓவர்கள் வீச வாய்ப்பு கிட்டும். அதையும் சரியாகப் பயன்படுத்தி அச்சுறுத்துலாக இருந்த ஹெய்டனையும் lbw செய்து, பெவிலியனுக்கு அனுப்பி வைத்திருப்பார். சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு, ஒரு மேஜிக்கல் கூக்ளியை வீசி அவரையும் பெவிலியனுக்கு துணைக்கு அணுப்பி, `பௌலிங்லேயும் நான் கில்லிடா’ என கிரிக்கெட் உலகுக்கு உணர்த்தியிருப்பார்.

Sachin Tendulkar

தென்னாப்பிரிக்கா போன்ற வலுவான ஒரு அணி பேட்டிங். வெற்றி பெற 6 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே தேவை, இப்படியொரு சூழலில், எந்தவொரு கேப்டனும் அணியின் சிறந்த பௌலரையே பந்து வீச அழைப்பார். அதுதான் வழக்கம். ஆனால், 1991-ம் ஆண்டு, ஈடன் கார்டனில் நடந்த ஹீரோ கப்பின் அரையிறுதி ஆட்டத்தில், 20 வயதே நிரம்பிய சச்சினை பந்துவீச அழைப்பார் கேப்டன் அசாருதீன். ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்பார், 40 ரன்களைக் கடந்து ஆட்டத்தின் நிலையை நன்கு உணர்ந்த மெக்மில்லன். இப்படியொரு சூழலில், எந்தவொரு பதற்றமும் இல்லாமல் பந்துவீசியிருப்பார் 20 வயது சச்சின்.

முதல் 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே கொடுத்திருப்பார். இதில் ஒரு ரன் அவுட்டும் அடங்கும். ஐந்தாவது பந்தை சந்திக்கும் டொனால்ட் சிங்கிள் தட்டி மறுபடியும் மெக்மில்லனுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க, கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலை. மொத்த அணியும் பவுண்டரியைத் தடுக்க தயாராக நிற்க, வெறும் ஒரு ரன்னை விலையாகக் கொடுத்துவிட்டு இந்தியாவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் செல்வார் சச்சின். “அன்றைய நாள்களில் ஈடன் கார்டன் குறித்து கூறப்படும் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால், அங்கு எதிரணியின் முதல் இரண்டு விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும். அதன்பிறகு மைதானத்தில் கூடியிருக்கும் ரசிகர்களே எதிரணியை பார்த்துக்கொள்வார்கள்” எனச் சமீபத்தில் கூறிய சச்சின், அந்த வெற்றியை என்றும் நினைவில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

Sachin Tendulkar

2005-ம் ஆண்டு அகமதாபாத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய தொடரின் நான்காவது ஒருநாள் போட்டி. முதலில் ஆடிய இந்தியா, சச்சினின் அற்புதமான சதத்தால் 316 என்கிற இலக்கை நிர்ணயிக்கிறது. கடினமான இலக்குதான் என்றாலும், பாகிஸ்தான் வீரர்களின் அபாரமான ஆட்டத்தால், வெற்றி கைநழுவிப் போகத் தொடங்குகிறது. கடைசி ஓவர், 3 ரன்கள் மட்டுமே தேவை. களத்தில் இருப்பதோ கேப்டன் இன்சமாம். சவலான அந்த ஓவரை வீச, நடுவரிடம் தனது தொப்பியைக் கொடுத்துவிட்டு தயாராவர் லஷ்மிபதி பாலாஜி. திடீரென, ஜாகீர் மற்றும் டிராவிட்டும் நீண்ட ஆலோசனை செய்துவிட்டு, பவுண்டரிக்கு அருகில் நிற்கும் சச்சினை அழைப்பார் கேப்டன் கங்குலி.

ஓவரின் முதல் இரண்டு பந்துகள் டாட். ஆனால், மூன்றாவது பந்தில் இரண்டு ரன் ஓடி ஸ்கோர் சமமாக, அடுத்த இரண்டு பந்துகளையும் மீண்டும் டாட் செய்வார். கடைசி 1 பந்தில் 1 ரன் தேவை. ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் பெரும் பீதி எட்டிப்பார்க்கும். எப்படியோ, கடைசி பந்தில் 4 ரன்கள் அடித்து மேட்சை முடிப்பார் இன்ஸமாம். முடிவு சச்சினுக்கும் இந்திய அணிக்கும் சாதகமாக இல்லைதான். ஆனால், கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவை என்ற நிலையிலும், சச்சினை பந்துவீசி கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கையை சச்சின் உருவாக்கி வைத்திருந்தார். ஒரு சிறந்த பந்துவீச்சாளனுக்கு இதைவிட வேறேன்ன பெருமை இருக்கப்போகிறது. சச்சின் டெண்டுல்கர் பேட்டிங்கில் மாபெரும் வீரன் மட்டுமன்று, பௌலிங்கிலும் அசகாய சூரன்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.