தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் கொரோனா வார்டில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஸ்டாப் நர்ஸ் உட்பட நான்கு நபர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வரவில்லை. இதனால் அவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் குடும்பத்தை மறந்து பணி செய்து கொண்டிருக்கும் இவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், “தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் சுகாதார ஆய்வாளராகப் பணிபுரியும் ஒருவர் புரமோஷனில் உரிய டிரெயினிங்கை முடித்து பிறகு அந்தப் பணிக்கு சேர்ந்தார். கிட்டதட்ட அவர் சுகாதார ஆய்வாளராக பணி செய்யத் தொடங்கி பத்து மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இதுவரை அவருக்கு சம்பளம் வரவில்லை.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தொடர்புகொண்டு கேட்டால் இதற்கான கோப்புகள் சுகாதாரத்துறையிலிருந்து நிதுத்துறை செயலாளருக்குச் சென்றுவிட்டது என்று மட்டும் கூறி முடித்துக்கொள்கின்றனர். பத்து மாசம் சம்பளம் வரவில்லை என்றால் அவரின் குடும்பம் என்னவாகும் என நினைத்துப் பார்த்து விரைந்து செயல்படாமல் மெத்தனமாக இருப்பது வேதனையளிக்கிறது.

இதேபோல் நிரந்தரப் பணியாளரான செவிலியர் ஒருவர் கொரோனா வார்டில் பணிபுரிந்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் பணி அனுமதி தொடர்பான நீட்டிப்பு ஆணை அனுப்படுவது வழக்கம். ஆனால், குறிபிட்ட செவிலியருக்கு அந்த ஆணை வராததால் கடந்த மூன்று மாதத்துக்கு மேலாக சம்பளம் வரவில்லை.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி

தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் உன்னதமான இந்தப் பணியில் ஈடுபடுவர்களை எந்தச் சிரமமும் இல்லாமல் காப்பது அரசுடைய கடமை. தன் குழந்தைகளைப் பிரிந்து பணி செய்து வரும் செவிலியருக்கு கிட்டதட்ட நான்கு மாதங்களாக சம்பளம் வரவில்லை. இதனால் அவரது குடும்பம் பொருளாதாரச் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது.

இதேபோல் மருந்துக் கிடங்கு அலுவலர் மற்றும் ஜெனரேட்டர் மெக்கானிக் போன்றவர்களுக்கும் பல மாதங்களாக சம்பளம் வரவில்லை. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் மட்டும் இதனால் நான்கு பேர் பாதிக்கபட்டு வருகின்றனர்.

மருத்துவத்துறை, காவல்துறை உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழக்க நேர்ந்தால் ரூ.50 லட்சம் நிதி உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை அளிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது வரவேற்கக் கூடிய ஒன்று.

மெடிக்கல் காலேஜ்

ஆனால், சம்பளம் வராததால் இவர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதற்காக அரசும், சம்பந்தப்பட்ட துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் குமுதாவிடம் பேசினோம், “சம்பந்தப்பட்டவர்கள் என்னை வந்து அணுகாததால் என் கவனத்துக்கு இது வரவில்லை. இது தொடர்பாக விசாரித்து உடனே அவர்களுக்கு சம்பளம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.