கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்ல முடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.

16 வகையான செல்வங்களையும் அருளும் வெள்ளூர் நடுநக்கர். இல்லம் தேடி வரும் இறை தரிசனம்…

தூத்துக்குடி மாவட்டம்,…

Posted by Sakthi Vikatan on Wednesday, April 22, 2020

அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, வெள்ளூர் நடுநக்கர் திருக்கோயில்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதுக்குடி அருகே இரண்டு கி.மீ தொலைவில் உள்ளது வெள்ளூர் கிராமம். இந்தக் கிராமத்தில்தான் நடுநக்கர் எனும் பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார்.

நக்கல் என்றால் ஒளி. ஒளியுருவானவர் நக்கர். நக்கல் என்றால் சிரித்தல் என்ற பொருளும் உண்டு. முப்புரங்களை எரித்தவர் நக்கன். நக்கர் என்றால் ஆடையில்லாதவன் என்ற பொருளும் உண்டு. இங்கு கோயில் கொண்டுள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் நடுநக்கர் மத்தியபதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.

வெள்ளூர் நடுநக்கர்

நடுநக்கர் என்பது தூய தமிழ்ச் சொல். மத்தியபதீஸ்வரர் என்பது அதற்கு இணையான வடமொழிச் சொல். ஒரே பொருளை கொடுக்கின்ற இரண்டு மொழிகளின் சொற்களும் இணைந்து இறைவனின் திருப்பெயராக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தத் தலத்துக்கு தெற்கே உள்ள மழவராயநத்தத்தில் தென் நக்கரும், வடக்கே உள்ள புதுக்குடியில் வடநக்கரும் உள்ளனர். இரண்டு தலத்திற்கும் இடையே இத்தலம் அமைந்துள்ள காரணத்தினால் இங்குள்ள பெருமான் நடுநக்கர் என அழைக்கப்படுகிறார்.

அகத்திய மாமுனிகள் இங்கு வந்து நடுநக்கரைப் பூஜித்து வழிபட்டதாக புராணச் செய்திகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலில் அன்னை சிவகாமி அம்மாள் மீனாட்சி திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றாள்.

சூரசம்ஹாரத்துக்காக உமையவளிடம் முருகன் வேல் வாங்கிய ஊர் இதுதான் என்கிறது ஸ்தல புராணம் (முருகன் சக்திவேல் பெற்றது ‘சிக்கல்’ திருத்தலம் என்றும் சொல்வர்). எனவே, இந்தத் தலம் வேளூர் என்று அழைக்கப்பட்டு, பிறகு வெள்ளூர் என மருவியதாகச் சொல்வர்.

worshipathome

கோயிலுக்குள் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சண்டீகேஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன், சூரியன் எனப் பலர் அருள்புரிகின்றனர். நவகிரகங்களும் அமைந்துள்ளன. அதனால், இது நவகிரக பரிகாரத் தலமாக வழிபடப்படுகிறது. உள்பிரகாரத்தில் நடராஜரும் அருள்புரிகிறார். சிவனுக்கு தென்பக்கத்தில் சிவகாமி அம்மாள் தனிச்சந்நதியில் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி தருகிறாள்.

திருமணம் முடிந்த தம்பதிகள் இந்தத் தலத்தில் இறைவனையும் இறைவியையும் வேண்டிக்கொண்டால் 16 வகையான செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.