சினிமாவைப்போலவே கொரானோ பிரச்னையால் மிகப்பெரும் இழப்பை சந்தித்துவருகிறது சின்னத்திரை. லாக் டெளன் மே 3-ம் தேதி முடிந்துவிடும். ஷூட்டிங்கை 5-ம் தேதி தொடங்கி மே 11-ம் தேதி முதல் எபிசோடுகளை ஒளிபரப்பக்கொடுங்கள் என டிவி தரப்பு சொன்னதாக குஷ்பு ஆடியோ வெளியிட, பற்றிக்கொண்டது பரபரப்பு. டிவி தரப்பு கட்டாயப்படுத்தவில்லை என இன்னொரு ஆடியோ வெளியிட்டார் ராதிகா. இந்த நிலையில், சின்னத்திரையில் என்னதான் நடக்கிறது என விசாரித்தேன்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

“ஊரடங்கு உத்தரவால் சேனல்கள்ல பழைய நிகழ்ச்சிகளையே மறு ஒளிபரப்பு பண்ணிட்டிருக்காங்க. ஏற்கெனவே ஒளிபரப்பானவைங்கிறதால இந்தப் பழைய நிகழ்ச்சிகளுக்கு விளம்பர வருவாய் பெருசா இல்லை. அதனால `எப்ப ஊரடங்கு முடியும்’னு காத்திட்டிருக்கிற சில சேனல்கள்ல, சீரியல் யூனிட்டுகளைக் கூப்பிட்டு வீடியோ கான்ஃப்ரன்ஸ்ல ஒரு மீட்டிங் நடத்தியிருக்காங்க. அப்ப `மே 5 ஷூட்டிங் ரெடியா இருங்க’னு சொன்னதுடன், நடிகர், நடிகைகளுக்கும் தகவல் சொல்லி தயாரா இருக்கச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்காங்க. இதை வைத்தே குஷ்பு பேசியிருக்கணும்’’ என்றார் முன்பு சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பொறுப்பிலிருந்த முக்கியமான நடிகர் ஒருவர்.

குஷ்புவின் பேச்சுக்குப் பதில் சொல்வதுபோல், ராதிகாவிடமிருந்து வந்த ஆடியோ மெசேஜ் குறித்தும் அவரிடம் கேட்டேன். “ஊரடங்கு முடிஞ்சாலுமே அடுத்த சில நாள்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கணும்னு அரசு சொல்லலாம். கூட்டம் கூடுறதையெல்லாம் நிச்சயமா அனுமதிக்க மாட்டாங்க. இந்தச் சூழல்ல ஷூட்டிங் நடத்தலாமா, கூடாதாங்கிறது குறித்து அரசு உத்தரவு தேவையிருக்கும். இப்படியிருக்க, `ஷூட்டிங்கைத் தொடங்கச் சொல்லி சேனல்கள் நெருக்கடி’ங்கிற அர்த்தத்துல குஷ்புவின் கருத்து இருந்ததாலேயே, தானும் ஒரு சீரியல் தயாரிப்பாளர்ங்கிற முறையில் ராதிகா பேசியிருக்காங்க. தவிர, ஷூட்டிங் தொடங்குவது குறித்த மீட்டிங் எல்லாச் சேனல்கள்லயுமே போட்டிருக்காங்க. ஆனா ஆர்ட்டிஸ்ட்களை வரச் சொல்லிச் சில சேனல்கள்ல மட்டுமே சொல்லியிருக்காங்க’’ என்றார்.

ராதிகா

ஆர்ட்டிஸ்ட்கள் மற்றும் சேனல்கள் தரப்பில் இந்த விவகாரம் குறித்து என்ன சொல்கிறார்கள்?

“எங்ககிட்ட, `மே 5-ம் தேதி ஷூட்டிங் இருக்கு… ரெடியா இருங்க’னு சொல்லியிருக்காங்க’ என்கிறார் `பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகை.

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவரான ரவிவர்மாவிடம் பேசிய போது, “மத்திய, மாநில அரசுகள் சொல்ற வழிகாட்டுதல் படியே நாங்க செயல்பட்டாகணும். `ஃபெப்சி’ அமைப்புல சின்னத்திரை நடிகர் சங்கம் உறுப்பினரா இல்லாட்டிகூட அந்த அமைப்புதான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணியைக் கலந்தாலோசிச்சுதான் இந்த விஷயத்துல முடிவெடுப்போம்” என்றார்.

ரவிவர்மா

ஜீ தமிழ் சேனலின் கருத்தைக் கேட்டபோது, “சீக்கிரமே ஷூட்டிங் தொடங்கணும்கிறதுதான் எல்லாருடைய ஆசையும். அதேநேரம் நிலைமை சரியாகணும்கிறதும் ரொம்பவே முக்கியமில்லையா? மீட்டிங் நடத்தினோம். அதுல ஸ்க்ரிப்ட் வொர்க் போகட்டும்னு முடிவு பண்ணதோட சரி. மறுபடி ஷூட்டிங் தொடங்குகிறது குறித்தெல்லாம் எந்த முடிவும் எடுக்கலை. மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகள் ரொம்ப முக்கியம். அதனால மே 3-ம் தேதி வரை அமலில் இருக்கிற தேசிய அளவிலான ஊரடங்கு முடிவுக்கு வரட்டும், அதன் பிறகு யோசிக்கலாம்னு இருக்கோம்” என்றார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.