புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதையொட்டி அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கள்ளச்சந்தையில் பன்மடங்கு உயர்த்தப்பட்ட விலையுடன் மது விற்பனை கொடிகட்டிப் பறப்பதைப் பற்றி கடந்த 22.04.2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் ’கூகுள் பே’யில் பணம் செலுத்தினால் வீட்டிற்கே வரும் மதுபாட்டில்’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

ஜூனியர் விகடன் இதழ் கட்டுரை

அதில், காவல்துறை மற்றும் கலால்துறையின் ஒத்துழைப்புடன் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுகிறது என்பதை அ.தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் பேட்டியுடன் பதிவு செய்திருந்தோம்.

அதையடுத்து கலால்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளை அழைத்த கவர்னர் கிரண் பேடி, “கள்ளச்சந்தையில் விற்கப்படும் மது விற்பனையைத் தடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அப்போது இருதரப்பும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி புகார் கூறியதால், செம டோஸ் விட்டதுடன், “கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாகக் கலால்துறையும் காவல்துறையும் மாறி மாறி புகார் கூறிக்கொள்கின்றனர். கள்ளச்சந்தையில் மது விற்கப்பட்டால் அதைக் கண்டறிவதுதான் காவல்துறையின் பணி.

கவர்னர் கிரண்பேடி

கள்ளச்சந்தையில் மது விற்பனைக்குக் காரணம் போலீஸாரின் கவனக்குறைவுதான். அதை ஏற்கவே முடியாது. கள்ளச்சந்தையில் மது விற்பனை நடந்தால் அந்தப் பகுதிக்குட்பட்ட காவல்நிலைய அதிகாரி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரிக்கப்படுவார். இந்த விசாரணையில் துணைநிலை ஆளுநர், டி.ஜி.பி, ஜ.ஜி, எஸ்.எஸ்.பி ஆகியோர் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தொடர்ந்து அனைத்து மதுக்கடைகளின் இருப்பு நிலவரத்தைக் கணக்கெடுக்கவும், கள்ளச்சந்தை மது விற்பனையைத் தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். அதையடுத்து காவல்துறை தலைமை மேற்கொண்ட விசாரணையில், மதுக்கடைகளில் கணக்கெடுப்புக்குச் சென்ற கலால்துறை அதிகாரிகளும் காவல்துறையினருமே கள்ளச்சந்தை மது விற்பனைக்குத் துணைபோயிருப்பது தெரியவந்தது.

சீல் வைக்கப்பட்ட மதுக்கடைகள்

அதையடுத்து தாசில்தார் கார்த்திகேயன் மீது அரசு ஊரடங்கு உத்தரவை மீறல், தொற்று நோயைப் பரப்புதல், பேரிடர் காலத்தில் அரசு உத்தரவை மீறுதல், கலால்துறை சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

தாசில்தாருடன் ஆய்வுக்குச் சென்ற வருவாய் ஆய்வாளர் வரதன், எழுத்தர் சேதுராமன், டிரைவர் கருணாமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல கள்ளச்சந்தை மது விற்பனை கும்பலைக் கண்டுகொள்ளாமல் இருந்த பாகூர் இன்ஸ்பெக்டர் அனில்குமார், வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். அதையடுத்து காவல்துறையில் பல்வேறு அதிகாரிகளை இடமாற்றம் செய்யச் சொல்லிக் காவல்துறை தலைமைக்கு உத்தரவிட்டார் கிரண்பேடி.

புதுச்சேரி கலால்துறை

சட்டம் ஒழுங்குப் பிரிவின் சீனியர் எஸ்.பி ராகுல் அல்வாலும் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, அவர் மதுபானக் கடத்தல் தொடர்பாக வழக்குகளை விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவருக்கு பதிலாக காரைக்காலில் எஸ்.எஸ்.பியாக இருந்த மகேஷ்குமார் பர்ன்வால் நியமிக்கப்பட்டார். அவரின் பொறுப்புக்கு புதுச்சேரியில் எஸ்.பி-யாக இருந்த ரட்சனா சிங் காரைக்காலுக்கு மாற்றப்பட்டார்.

அதையடுத்து கலால்துறையின் துணை ஆணையர் தயாளன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்த துறையை அணுகும்படி உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், “ஊரடங்கு நேரத்தில் கள்ளச்சந்தையில் மதுவைப் பன்மடங்கு கூடுதலாக விற்று இதுவரை கோடிக்கணக்கில் லாபம் பார்த்துவிட்டார்கள். மதுக்கடைகளில் தற்போது எடுக்கப்படும் இருப்புகள் கணக்கெடுப்பே தாமதமான ஒன்றுதான். மார்ச் 23-ம் தேதி எடுத்திருக்க வேண்டிய இருப்புக் கணக்கெடுப்பை இப்போது எடுத்தால் எப்படிச் சரியாக இருக்கும். சீல் வைக்கப்பட்ட கடைகளில் பின்வாசலைத் திறந்து விற்று முடித்துவிட்டார்கள்.

புதுச்சேரி

6 மாதத்தில் விற்க வேண்டிய மதுவை ஒரே மாதத்தில் விற்று முடித்திருக்கிறார்கள். சில்லறை விற்பனை மதுக்கடைகளைப் பொறுத்தவரை ஒரு பெட்டி மதுவை வாங்க வேண்டுமென்றாலும் கலால்துறையின் பர்மிட் அவசியம். ஆனால் சில மொத்த விற்பனையாளர்கள் அந்த பர்மிட் இல்லாமலேயே மதுவை விற்பனை செய்திருக்கிறார்கள். தற்போது கள்ளச் சந்தையில் விற்கப்படும் சரக்குகளும், தமிழகப் பகுதிக்குக் கடத்தப்படும் சரக்குகளும் இப்படியானதுதான். அதனால் மதுக்கடைகள் மட்டுமல்லாமல், மதுவகைகளை மொத்தமாகக் கொள்முதல் செய்யும் குடோன்களிலும் இருப்புகளைக் கணக்கெடுக்க வேண்டும்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.