உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் இதுவரை 19,984 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் அறிவித்திருக்கிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 640-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாண்டூர் சுங்கச்சாவடி

அதேசமயம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் அனுமதிச் சீட்டுகள் வழங்கி பாதுகாப்பாக பணியில் ஈடுபடும்படி அரசு வலியுறுத்தியிருக்கிறது. அதேபோல அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வருபவர்கள் முகக்கவசங்களுடனும், வாகன அனுமதிச் சீட்டும் பெற்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகலாக தங்கள் குடும்பத்தினரையும் மறந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு வலியுறுத்திய எதையும் கடைப்பிடிக்காமல், மது போதையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வந்ததுடன், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரிடம் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது முகம் சுழிக்க வைத்திருக்கிறது.

கொரோனா

நேற்று மதியம் கள்ளக்குறிச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் மாண்டூர் சுங்கச்சாவடியில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் எஸ்.ஐ மணிமேகலை கொரோனா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாகனங்களை நிறுத்தி அனுமதிச் சீட்டு, எங்கே செல்கிறார்கள் என்ற விவரங்களைக் கேட்டதுடன், முகக்கவசம் அணிந்து செல்லும்படி அறிவுறுத்திக்கொண்டிருந்தார்.

அதன்படி அங்கு காரில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் அ.தி.மு.க விவசாய அணிச் செயலாளர் கதிர் தண்டபாணியின் காரை நிறுத்திய எஸ்.ஐ மணிமேகலை மேற்கண்ட விவரங்களைக் கேட்டிருக்கிறார். அப்போது எஸ்.ஐ மணிமேகலையுடன் கதிர் தண்டபாணி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க விவசாய அணிச் செயலாளர் கதிர் தண்டபாணி

அந்த வீடியோ காட்சியில்..

பெண் காவல் அதிகாரி: “நீங்க பேசுனது சரியா? முதல்ல வண்டியை ஓரம் கட்டுங்க”

கதிர் தண்டபாணி : “நான் இப்படித்தான் நிற்பேன்”

பெண் காவல் அதிகாரி: “பின்னால் வண்டிங்க வருது இல்லைங்க”

கதிர் தண்டபாணி: “வரட்டும்.. நான் இப்படித்தான் நிப்பேன்”

பெண் காவல் அதிகாரி: ”முதல்ல உங்களுக்கு வண்டி அனுமதி இல்லை”

அப்போது அங்கு பணியில் இருந்த ஆண் காவலர் ஒருவர் வருகிறார்…

கதிர் தண்டபாணி: “சார் நான் வீட்டிலிருந்து கரையாம்பாளையம் போறேன் சார். இவங்க காரை நிறுத்தச் சொன்னாங்க நிறுத்தினேன். பர்மிஷன் இருக்குதான்னு கேட்டாங்க. இல்லைன்னும் சொன்னேன். மாஸ்க் இல்லையான்னு கேட்டாங்க. இல்லைன்னு சொன்னேன். திருப்பி ஏன் மாஸ்க் இல்லைன்னு கேட்டாங்க”

ஆண் காவலர்: “குடிச்சிருக்கீங்களா.. ?”

கதிர் தண்டபாணி: “ஆமாம்”

பெண் காவல் அதிகாரி: “அதைக் கேட்டதால்தான் சார் பிரச்னை”

ஆண் காவலர்: “ஏன் ரூல்ஸை நீங்கள் ஃபாலோ பண்ண மாட்டீங்களா?”

கதிர் தண்டபாணி: “நீங்க யாருக்கு வேண்டுமானாலும் போன் போடுங்க,”

பெண் காவல் அதிகாரி: “வண்டியை முதல்ல ஓரம் கட்டுங்க”

சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை

கதிர் தண்டபாணி: “நான் வண்டியை இங்கதான் நிறுத்துவேன். வர்றவங்ககிட்ட சொல்றேன்”

ஆண் காவலர்: “டோலில் இப்படித்தான் வண்டியை நிப்பாட்டுவீங்களா ? நீங்க பர்மிஷன் வாங்கிட்டு வரணும். அது உங்ககிட்ட இல்லை”

கதிர் தண்டபாணி: “யப்பா என் வீடு கள்ளக்குறிச்சி”

ஆண் காவலர்: “பக்கத்து தெருவுல கூட நீங்க இருந்துக்கங்க”

பெண் காவலர் அதிகாரி: “கள்ளக்குறிச்சியா இருந்தா குடிச்சிட்டு வண்டி ஓட்டிட்டு வருவீங்களா? 144 அப்போ உங்களுக்கு எப்படி சரக்கு கிடைச்சது?”

கதிர் தண்டபாணி: “இந்தக் கேள்வியெல்லாம் என்னை கேட்கக் கூடாது. நான் பதில் சொல்லிக்கறேன்”

பெண் காவல் அதிகாரி: “யாருகிட்ட பதில் சொல்வீங்க”

கதிர் தண்டபாணி: “யாரு வர்றாங்களோ அவங்ககிட்ட பதில் சொல்லிக்கறேன்”

பெண் காவல் அதிகாரி: “நீங்க என்கிட்டதான் பதில் சொல்லணும். அதுக்குத்தான் நான் இங்க டூட்டி பாக்கறேன். வேற யாருகிட்ட பதில் சொல்வீங்க”

கதிர் தண்டபாணி: “நான் சொல்லிக்கறேன்”

பெண் காவல் அதிகாரி: “வண்டியை ஓரம் கட்டு. வண்டி நம்பரை நோட் பண்ணும்மா” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவர் வண்டியை எடுத்துக்கொண்டு செல்கிறார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க விவசாய அணிச் செயலாளர் கதிர் தண்டபாணியை அவரது செல்பேசியில் தொடர்புகொண்டபோது, “நான் நேராக பேசுகிறேன் சார்” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரனை தொடர்புகொண்டபோது “அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கும்படி கூறியிருக்கிறேன்” என்று முடித்துக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன்

யார் இந்த கதிர் தண்டபாணி?

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியின் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளராக இருந்தவர் தற்போதைய உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு. 2006-ம் ஆண்டு விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்தபோது, அப்போதைய தி.மு.க அரசு நடத்திய செம்மொழி மாநாட்டுக்கு தனது கல்லூரி வாகனத்தை அனுப்பியதுடன், தனது ஆதரவாளர்களின் பெயரில் அந்த மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து அதிரடியாக அவரது மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த ஜெயலலிதா, அதை அமைச்சர் மோகனுக்கு வழங்கினார்.

அதையடுத்து சில நாள்களிலேயே அவரிடமிருந்து அந்தப் பதவியை பறித்து ரிஷிவந்தியம் ஒன்றியச் செயலாளராக இருந்த கதிர் தண்டபாணிக்கு வழங்கினார். அத்துடன் அவருக்கு கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ரிஷியவந்தியம் தொகுதிக்கு சீட் வழங்கப்பட்டது. அதில் தி.மு.க வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயனிடம் தோல்வியடைந்த நிலையில், உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த்தை டெபாசிட் இழக்கச் செய்து குமரகுரு வெற்றிபெற்றார். அதனால் கதிர் தண்டபாணியிடம் மா.செ பதவி பறிக்கப்பட்டு குமரகுருவிடம் கொடுக்கப்பட்டது. அப்போது கள்ளக்குறிச்சி விவசாய அணிச் செயலாளர் பதவியைப் பெற்றவர்தான் கதிர் தண்டபாணி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.