கொரோனாவினால் ஊரடங்கு தடை உத்தரவு ஒருபக்கம் மக்களை மிகவும் வாட்டி அவர்களை நிலைகுலைய செய்ய வைத்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் குடும்ப உறவுகளுக்கு இடையே உள்ள பாசத்தை வெளிஉலகிற்கு கொண்டு வரும் விதமாக இந்த தடை காலம் உள்ளது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் தேனியில் நடந்து உள்ளது.

மதுரை கூடல் நகர் பகுதியில் உள்ள தமிழ்செல்வி என்பவர் தனியார் பள்ளியில் ஒப்பந்தப் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு ஜீவராஜ் என்ற மகனும் பிரவினா என்ற மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் தாய் தமிழ்செல்விக்கு உடல் நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனையடுத்து அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால் தேனி தனியார் கண் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் தனது மகளை எந்த வழியிலாவது அழைத்து வர தனது மகனிடம் கூறியுள்ளார்.

image

அமெரிக்கக் குழுவை வுஹான் நகருக்குள் அனுமதிக்க சீனா மறுப்பு

இதனையடுத்து எப்படி தேனிக்கு சென்று தனது தங்கையை அழைத்து வருவது என ஜீவராஜ் குழம்பிய நிலையில் பழுதடைந்த சைக்கிள் அவரது கண் முன்னே வந்து நின்றது. வேறு வழியில்லாமல் அந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு தேனிக்கு கிளம்பினார். பழைய சைக்கிள் என்பதால் அதன் டயர் பலவீனமாக இருந்துள்ளது. அதனால் அவரால் சைக்கிளை ஓட்ட முடியாத நிலையும் ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக அவர் கையில் கொண்டு வந்த காற்று அடிக்கும் பம்பு அவருக்கு கைக்கொடுத்தது. 2 கிலோ மீட்டருக்கு ஒரு தடவை டயருக்கு காற்றை நிரப்பிக் கொண்டும் பல இடங்களில் சைக்கிளை உருட்டிக்கொண்டும், தனது பயணத்தை தொடர்ந்தார். நேற்று காலை மதுரையிலிருந்து கிளம்பிய ஜீவராஜ் 85 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தேனிக்கு நள்ளிரவு சென்றடைந்தார். நள்ளிரவு முழுவதும் தனது சகோதரி பணிபுரியும் தனியார்
மருத்துவமனை முன்பு படுத்துக்கிடந்து காலை மருத்துவமனை திறந்ததும் தனது தங்கையை அழைக்க வந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார் அந்த சகோதரர்.

அவரின் சூழ்நிலையைப் புரிந்து அவரின் தங்கையை அழைத்துச் செல்ல அனுமதி அளித்தது மருத்துவமனை நிர்வாகம். அப்போது அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு தனது சைக்கிளில் அழைத்துச் செல்லப் போவதாக கூறியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நிர்வாகம் அரசு அனுமதியுடன் காரில்தான் அழைத்துச் செல்ல வேண்டும் எனவும் இல்லை என்றால் அழைத்துச் செல்ல முடியாது எனவும்
கண்டிப்பாக கூறி விட்டது.

image

இதனால் பரிதவித்த அந்த சகோதரருக்கு உதவ புதிய தலைமுறை முன்வந்தது. தேனியில் உள்ள பிரபல துணிக்கடை நடத்திவரும் சக்தி என்பவரை தொடர்பு கொண்டு புதியதலைமுறை நிலைமையை எடுத்துரைத்தது. இதனையடுத்து இருவரும் மதுரைக்கு செல்ல தனது காரை தனது செலவிலேயே டீசலை போட்டு கொடுத்து உதவினார் அந்த நபர். தனது சைக்கிளை தேனி காவல் நிலையம் முன்பு நிறுத்தி வைத்து பின்னர் துணிக்கடை அதிபர் ஏற்பாடு செய்த அந்த காரில் காவல்துறையின் ஒத்துழைப்புடன் மதுரை நோக்கி சென்றனர் அந்த பாசப்பறவைகள்.

இக்கட்டான நேரத்தில் தனக்கு உதவிய புதிய தலைமுறைக்கும் மதுரைக்கு செல்ல தனது காரை வழங்கிய அந்த துணிக்கடை அதிபருக்கும் மேலும் காவல் துறைக்கும் கண்ணீர் தழும்ப நன்றியைத் தெரிவித்தார் ஜீவராஜ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.