பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது அராரியா மாவட்டம். இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேளாண்மை உள்ளிட்ட சில பணிகளுக்கு விலக்கு அளித்துள்ளது மத்திய அரசு. முறையான அனுமதி பெற்று அவர்கள் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இயங்காமல் மூடப்பட்டிருந்த சுங்கவரி சாலைகள் திரும்ப இயங்கத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து சுமார் 320 கி.மீ தொலைவில் உள்ளது அராரியா மாவட்டத்தில் ஒரு விபரீதமான செயல் நடந்தேறியுள்ளது. இந்தப் பகுதியில் வேலையிலிருந்த வீட்டுக் காவலர் ஒருவர், அந்தப் பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி வாகன பாஸ் இருக்கிறதா? என விசாரித்துள்ளார். ஆனால் வாகனத்தில் வந்தவர்கள் அனுமதிச் சீட்டை காட்டுவதற்குப் பதிலாக, ‘என்கிட்டயே பாஸ் கேட்கிறாயா?’ எனக் கூறி அந்த வீட்டுக் காவலரைத் தோப்புக்கரணம் போடச் சொல்லியுள்ளனர்.
மேலும் அதனை வீடியோவாகவும் காட்சிப் படுத்தியுள்ளனர். அந்த வீட்டுக் காவலர் அவரது கடமையைத்தான் செய்துள்ளார். அவர் வாகன பாஸ் கேட்டது, ஒரு வேளாண்மை அதிகாரியிடம். அவர் தன்னிடமே பாஸ் கேட்டு அதிகாரம் செய்கிறாயா எனக் கூறி அந்த வீட்டுக் காவலரைத் தண்டித்துள்ளார்.

நாடு முழுவதும் வெளியே வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வேளாண் அதிகாரி உட்பட அவருடன் இருந்த யாருமே மாஸ்க் அணியவில்லை. ஆனால் அந்த வீட்டுக்காவலர் கருப்புத் துணியால் முகத்தை மூடிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதனைக் கண்ட, நெட்டிசன்கள் அராரியா வேளாண் அதிகாரி மனோஜ் குமாரின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். மேலும் நீதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகப் பலரும் கருத்திட்டு உள்ளனர்.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து இப்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Visuals are from my home dist Araria Bihar,a constable has been treated very badly bcz he stopped senior officer for corona regarding checking pic.twitter.com/JEsWhLzWaU
— Ammar Bin Masoom (@bin_masoom) April 20, 2020