குஜராத் கடற்கரையிலிருந்து அசாமிலுள்ள நாகோன் பகுதி வரை ஒருவர் நடந்தே பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் பலரும் பிழைக்கப் போன இடத்தில் வேலையில்லாமல் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டு வருகின்றனர். மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் அவர்கள் சாலை வழியே பயணிப்பதில் தடை உள்ளது. ஆனாலும் இந்தத் தடை உத்தரவை மீறி, சில அரிதான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. ஒரு தாய் தனது மகனை மீட்பதற்காக இருசக்கர வாகனத்திலேயே பயணித்திருக்கிறார். கேரளாவிலிருந்து ஒரு தாய், நோயின் பிடியில் சிக்கித்தவிக்கும் மகனைப் பார்ப்பதற்காக ஆறு மாநிலங்களைக் கடந்து வட இந்தியாவிற்குப் பயணித்திருக்கிறார்.

இந்நிலையில்தான் குஜராத் மாநிலம், மேற்கு கடற்கரையிலிருந்து கரை மார்க்கமாகவே அசாம் வரை நடந்தே பயணித்திருக்கிறார். ஜாதவ் கோகோய் என்ற அந்த நபர் 25 நாட்கள் நடந்தே சென்றுள்ளார். இவர் ஒரு தொழிலாளி. இவருக்கு 45 வயது ஆகிறது. இவர் தனது பயணத்தைப் பற்றி ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. பாக்கெட்டில் ரூ .4,000 பணத்துடன், இவர் குஜராத்தில் உள்ள தொழில்துறை நகரமான வாபியில் இருந்து கடந்த மார்ச் 27 அன்று இந்தப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார். சுமார் 2,800 கி.மீ. அவர் நடந்தே கடந்து செல்ல முடிவை எடுத்துள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, அவர் ஒருவழியாக ஆயிரம் கி.மீட்டர் தூரத்தை கடந்து பீகாரை எட்டியுள்ளார். நடந்தே வந்த இவரைக் கண்ட நாகோன் மாவட்டத்தில் உள்ள ரஹா பகுதி ‘அசோம் ஜாதியதாபாதி யுவ சத்ரா பரிஷத்’(ஏ.ஜே.வி.சி.பி) உறுப்பினர்கள் இவரை மீட்டுள்ளனர். அதையடுத்து, அவர் நாகானில் உள்ள போகேஸ்வரி புக்கானானி சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஏ.ஜே.வி.சி.பியின் உள்ளூர் தலைவர் திபியாஜித் ஹசாரிகா செய்தித்தாளிடம் பேசினார். அப்போது அவர், நாகோன் மாவட்டத்திலுள்ள அஹத்குரியிலிருந்து தனது குடும்பத்தினருக்கு இரவல் தொலைப்பேசி மூலம் பேசி நிலைமை விளக்கியுள்ளார். அதன் மூலம்தான் இந்த விவரம் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
மேலும் இது குறித்து ஹசாரிகா, “நான் அவரும் கதாரியா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். நேற்று அவரது அவலநிலை பற்றி அறிந்ததும், நடிகர் ஜிதுமோனி மகாந்தா உள்ளிட்ட சிலர் அவரைத் தேடி ஒரு வாகனத்தில் புறப்பட்டோம். கடைசியாக இரவு 8 மணியளவில் அவரைக் கண்டோம். ரஹாவில் உள்ள டோல் கேட் அருகே சாலையோரத்தில் அவர் இருந்தார். அதன் பின் அவரை நாங்கள் ரஹா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். பின்னர், அவர் நாகோனில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தோம்”என்று கூறியுள்ளார்.

மேலும் ஜாதவ்ர் கொண்டு வந்த ரூ .4,000 மற்றும் சில பொருட்களைச் சிலர் கொள்ளையடித்துள்ளனர் என்றும் ஹசாரிகா தெரிவித்தார். மேலும் பிச்சை எடுப்பதன் மூலம் தான் ஜாதவ் உயிர்ப் பிழைத்ததாகவும் கூறினார்.