புதுக்கோட்டையில், பொதுமக்களை அச்சுறுத்தி டிக்டாக் செய்து, கைதுசெய்யப்பட்ட இளைஞர், இன்று போலீஸாருடன் சேர்ந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பணியில் பம்பரமாகச் சுற்றி, சுழன்றுவருகிறார்.
பொதுமக்கள் முன்பு அதிரடியாகத் தோன்றி நடனமாடி அச்சுறுத்தி, டிக்டாக்கில் வீடியோ பதிவுசெய்ததால் கைது செய்யப்பட்டவர் கண்ணன். அப்படிப்பட்டவரிடம், `திடீரென இந்த மாற்றம் வந்தது எப்படி?’ என்றோம். “ என்னுடைய மாற்றத்திற்கு வடகாடு காவல் ஆய்வாளர்தான் காரணம்” என்றதோடு முடித்துக் கொண்டார்.

வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸிடம் பேசினோம். “இப்போதுள்ள இளைஞர்கள் பலரும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் டிக்டாக், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், கேம்ஸ் என செல்போனிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர். படித்து முடித்துவிட்டு சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய வயதில், இளைஞர்கள் இப்படி இருப்பதுதான் வேதனை. கண்ணனுக்கும் என்னுடைய பிள்ளை வயதுதான் என்பதால், பொறுமையாக அவரிடம் இதுபற்றி விசாரித்தேன். அதோடு, சில அறிவுரைகளையும் வழங்கினேன். அதன்பிறகு மனநல மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போய் கவுன்சலிங் கொடுக்க வைத்தேன். அதன்பிறகு கண்ணன்கிட்ட பெரிய முன்னேற்றம் இருந்தது. தான் செய்த தவற்றை உணர்ந்து கொண்டார்.
`என்னால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இந்த நேரத்தில் உதவுகிறேன்’ என்றார். கடந்த ஒரு வார காலமாக ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸாக செக்போஸ்ட், காய்கறிக் கடைகள், ரேஷன் கடைகளில் கொரொனோ விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டு வருகிறார். போலீஸார் வருவதற்கு முன்பே ஆர்வமாக பணிக்கு வந்துவிடுகிறார். தவறான வழியில் இளைஞர்கள் செல்கிறார்கள் என்று தெரிந்துவுடன், அவர்களின் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக்கொண்டு, அவர்களிடம் மனம் விட்டுப் பேசி நல்வழிப்படுத்த வேண்டும்” என்றார்.

மீண்டும் கண்ணனிடம் பேசினோம். “டிக்டாக்கில் என்னுடைய ஆட்டத்துக்கு அதிக லைக் வருகிறது என்ற ஆர்வக்கோளாறில்தான் அடுத்தடுத்து பொதுமக்களை அச்சுறுத்திப் பதிவுகள் போட்டுவிட்டேன். இன்ஸ்பெக்டர் சார் பேசிய பிறகுதான், இது எல்லாமே தவறு என்று எனக்கு தெரிவந்தது. அவரும், ` நீ டிக்-டாக் போடுறத நிறுத்த வேண்டாம். அதே நேரத்துல, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிற, பயன்படுகிற டிக்டாக் பதிவுகளைப் போடலாம்’ எனச் சொன்னார். இப்போ, டிக்டாக்கில் கொரோனா விழிப்புணர்வு பதிவுகளைப் போட்டுக்கிட்டு இருக்கேன். பலரும் ரொம்பவே பாராட்டுறாங்க. எனக்கு சப்போர்ட் பண்றாங்க. பொதுமக்களுக்கு சேவை செய்வதை கௌரவமாக நினைக்கிறேன்” என்கிறார் உற்சாகத்துடன்.