தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 411 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர்.
இன்றிலிருந்து கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அந்தந்த மாநிலங்களின் அரசே தீர்மானித்துக்கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது முதலமைச்சர் நியமித்த மருத்துவ வல்லுநர் குழு தங்களது அறிக்கையை இன்று சமர்பித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனை பெற்று நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகள், சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப், டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என அறிவித்துள்ள நிலையில் தற்போது தமிழகமும் தளர்வுகள் இல்லை என அறிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM