தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர், “கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பான பணிகளை மேற்கொண்டுவருகிறது. தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 6,109 பேருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை மேற்கொண்டதில் இன்றுதான் நாம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனைகளைச் செய்துள்ளோம்.

தமிழகத்தில் இதுவரை 46,985 பேருக்குக் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 41,710 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்த 6,109 நபர்களில் 43 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், சிலருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Also Read: `எச்சரித்த வல்லுநர் குழு; முடிவுகளை மாற்றிய முதல்வர்..!’ – மே 3 வரை தளர்த்தப்படாத ஊரடங்கு உத்தரவு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 46 நபர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 457 பேர் பூரண நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் 14 நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் இன்று 2 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்கள் மரணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 43 நபர்களின் விவரம் மாவட்ட ரீதியிலாக எடுத்துக்கொண்டால். சென்னை 18, அரியலூர் 2, திண்டுக்கல் 2, நாகப்பட்டினம் 1, பெரம்பலூர் 1, ராமநாதபுரம் 1, சிவகங்கை 1, தென்காசி 4, திருவள்ளூர் 2, திருவாரூர் 1, தூத்துக்குடி 1, திருப்பூர் 1, திருச்சி 4, விழுப்புரம் 3, புதுக்கோட்டையில் முதன்முதலாக ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஆய்வகங்கள் 23 தனியார் ஆய்வகங்கள் 10 என மொத்தம் 33 ஆய்வகங்கள் உள்ளன.
Also Read: `இறுதிமூச்சு வரை சேவை!’ – கொரோனாவுக்குப் பலியான 84 வயது `நர்ஸ்’
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் சிறப்பாகப் பின்பற்றப்பட்டுள்ளன. இந்த நோய் கட்டுக்குள் இருக்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டும் வகையில் நாம் செயல்பட்டு வருகிறோம். உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் இது ஒரு பேரிடர் என அறிவித்துள்ளது. இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. அரசியல் செய்வதற்கான காலமும் இல்லை. கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து உலகநாடுகளே போராடிக்கொண்டிருக்கின்றன.

உலக வல்லரசு நாடுகளே இந்தப் போராட்டத்தில் தவித்துக்கொண்டிருக்கிற நிலைதான் இருக்கிறது. தமிழகத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை முதல்வர் எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அரசின் அலட்சியம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதற்கோ சமூகவலைதளங்களில் குதர்க்கமான அரசியல் செய்வதற்கோ நேரம் அல்ல. இதுபோன்ற ஒரு மலிவான அரசியலை எதிர்க்கட்சி தலைவர் தயவுசெய்து தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து. உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியதோ அதை நமது அரசு மருத்துவர்களுக்குத் தெளிவாகக் கூறியுள்ளோம்.
Also Read: `உறுதி செய்யப்பட்டவர்களில் 80% பேர்… அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா?!’ -அதிர்ச்சி தரும் ICMR
மூத்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருப்பது உண்மையில் எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் தன் கடமையைச் சிறப்பாகச் செய்து வந்தார். தனக்குக் கொரோனா பாசிட்டிவ் எனத் தெரிந்ததும் தனியார் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக்கொண்டார். நாங்களும் அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினோம். அவர் மீண்டு வருவார் என நினைத்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்துவிட்டார். இதுபோன்ற சூழலில் அலட்சியம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல” என்று தெரிவித்தார்.