தோனி தன்னை வயதானவன் என்று அடிக்கடி கூறியதாக பிராவோ இன்ஸ்டா உரையாடலின் போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பிராவோ. அவருக்கு வயது 37 ஆகிறது. ஆனால் இப்போது அவரது இளமையும் அவரது உடல் வலிமையும் வியக்கும்படி உள்ளது. சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனியோடு 2018ஆம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியை ஆடினார் பிராவோ. அந்த ஆட்டத்தை இவர்களது ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்தத் தருணத்தில் நடந்த சில நினைவுகளை இப்போது பிராவோ வெளிப்படுத்தியுள்ளார். அந்த சீசன் முழுவதும் தோனி தன்னை வயதானவர் என்று கூறிக் கொண்டே இருந்ததாக பிராவோ கூறியுள்ளார்.

“ ‘நீ ஒரு வயசானவன், நீ ஒரு வயசானவன்’ என்று தோனி சொல்லிக்கொண்டிருந்தார். மேலும், ‘நீ மிக மெதுவானவனாக இருக்கிறாய்” எனக் கூறிக் கொண்டே இருந்தார். அப்போது நான் அவரிடம், ‘நான் உங்களை விட பிட்சில் உத்வேகத்துடன் ஓடி ரன் எடுப்பேன்’ என்று சவால் விட்டேன் என்றேன். அதற்கு அவர் ‘வாய்ப்பு இல்லை’ என்றார். மீண்டும் நான் சொன்னேன் ‘போட்டி முடிந்ததும் நாம் அதைச் செய்வோம்’ எனச் சொன்னேன் என்று பிராவோ இன்ஸ்டாகிராம் நேரலை அரட்டையின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பிராவோ பேசுகையில், “போட்டியின் நடுவில் இதைச் செய்ய நான் விரும்பவில்லை, இறுதிப் போட்டிக்குப் பிறகு நாங்கள் அதனை செய்தோம். இது மிகமிக நெருக்கமான போட்டியாக இருந்தது. நூலிழையில் அவர் வெற்றி பெற்று விட்டார். இது ஒரு நல்ல போட்டி. அவர் மிக வேகமாகவே இருந்தார்” எனக் கூறியுள்ளார். தன்னுடைய திறன்களின் மீது நம்பிக்கை வைத்ததற்காக தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ஆகிய இருவருக்கும் பிராவோ நன்றி தெரிவித்துக் கொண்டார். அத்துடன், இருவருக்கும் இடையே போட்டி நடந்த அந்த வீடியோ பதிவையும் பதிவு செய்திருந்தார்.
மேலும் அவர், “கேப்டன் தோனியையும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் இருவரும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்கள் என்னை நானாக இருக்க அனுமதிக்கிறார்கள். “சி.எஸ்.கே டெத் ஓவர்களில் பந்து வீசும் என் திறமையில் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அது பலனளித்தது. நான் எனது திறமையை உறுதியாக நம்புகிறேன்”என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM