நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது உண்ண உணவில்லாமல் தவித்த ஜீவராசிகளுக்கு உணவளித்து உதவிய அந்த அன்பான மனிதர்கள் பற்றிய ஒரு புகைப்படத் தொகுப்பு காண்பவர்களை மனம் குளிரச் செய்துள்ளது. 
 
கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மொத்தம் 21 நாட்கள் என்ற நிலையை எட்ட இருந்தபோது பிரதமர் மோடி வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிப்பு செய்து அறிவித்தார். இவ்வளவு நாட்களை மக்கள் வீட்டிற்குள்ளாகவே இருக்க வேண்டிய கட்டாயத்தை இந்தக் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்தியுள்ளது. 
 
வசதியானவர்கள் இந்தக் கால இடைவெளியை வீட்டிலிருந்தே சமாளித்து விடுவார்கள். ஆனால் அன்றாடங்காய்சிகளான தினக்கூலிகள் என்ன செய்வார்கள். அவர்களிடம் மூட்டைக் கணக்கில் அரிசி வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு வசதிக் கிடையாது. ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களை அவர்கள் வாங்கி சேமித்து வைத்திருப்பதில்லை. அன்றைய வருமானத்தை வைத்து ஆகாரம் காய்ச்சிக் குடிப்பதுதான் பல ஏழைகளின் நிலையாக இருந்து வருகிறது. அவர்களை வீட்டுக்குள்ளாகவே முடங்கி இருங்கள் என்றால்? வேலையும் இல்லை? வயிற்றுக்குக் கஞ்சியும் இல்லை என்ற நிலைதான் இன்றைக்கு வரை தொடர்கிறது. அரசின் உதவிகள் கிடைத்தாலும் அது போதுமான அளவில் இருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசின் உதவிகள் கடைக்கோடி நாட்டின் மனிதனுக்கும் சென்று சேர்கிறதா என்பதும் சந்தேகமே.
 
image
 
இந்நிலையில், மனித நடமாட்டமே இல்லாத போது தெருக்களில் சுற்றித் திரிந்த ஜீவராசிகளுக்கு யார் உணவுக் கொடுப்பார்கள்? அவை எங்கே போய் தன் பசியை ஆற்றிக் கொள்ளும்? நேற்றுவரை மனிதர்களை நம்பியே வாழ்ந்து வந்த இந்தப் பிராணிகள் பசியில் கிடந்து வாடி வருகின்றன. அதனை அறிந்த சில தன்னார்வலர்கள் அவற்றிற்கு உணவளித்து உதவி வருகிறார்கள். அப்படி இதயம் படைத்த அந்த நல்ல உள்ளங்கள் பற்றிய ஒரு படத்தொகுப்புதான் இது. 
 
image
 
பெங்களூருவில் உள்ள ராம்நகரில், பசியால் தவித்த குரங்குகளுக்கு அந்தப் பகுதி வாசி உணவளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு மனிதரை அன்புமிக்க அந்தக் குரங்குகள் கூட்டம் எப்படி ஈபோல் மொய்க்கின்றன என்பது அக்காட்சியில் பதிவாகியுள்ளது. அவற்றின் தேவை அறிந்து பிஸ்கெட் பாக்கெட்டுகளை எடுத்து வீசி எறிகிறார் அந்த மனிதர். கூட்டம் கூட்டமாக வந்து பசியாறும் அந்தப் படம் பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
 
image
அடுத்தப்படத்தில் போலீசார் ஒருவர் தனது பணிகளுக்கு இடையே குரங்குகளுக்கு உணவளிக்கும் சேவையைச் செய்திருக்கிறார். மதுராவில் ஊரடங்கின் போது அவர் செய்த சேவையைப் படமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஏஎன்ஐ செய்தி நிறுவனம்.
 
image
இந்த இருவரைப் போலவே மைசூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குற்றவியல் விரிவுரையாளர் ஒருவர், நகரத்தில் ஆதரவற்று கிடந்த தெரு நாய்களை மீட்கும் பணியை ஏற்றிருக்கிறார். கொரோனா ஊரடங்கின் போது இந்தப் பெண், தனது சொந்தப் பணத்தை செலவு செய்து விலங்குகளுக்கு உணவு வழங்கியிருக்கிறார்.  இதற்கானப் புகைப்படம்: பி.சி.சி.எல் வெளியிட்டுள்ளது. 
 
image
இதே ஊரடங்கு காலத்தில் அயோத்தியில், துளசி ஸ்மாரக் பவன் அருகே ஒரு மனிதன் குரங்குகளுக்கு உணவளிக்கிறான். குரங்குகள் பசியால் வாடுவதை அறிந்த அவர், இந்தப் பஞ்ச காலத்தில் ஒரு பாதுகாவலனாக மாறியிருக்கிறார். அவர் விலங்கினங்களுக்குச் செய்த சேவையை ஏஎன்ஐ புகைப்படமாகப் பதிவிட்டு வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடநாட்டில் நடந்தது என்றால் தென்னிந்தியாவின்  ஒரு பகுதியான எர்ணாகுளத்தில் உள்ள படகு செட்டில் உணவு கிடைக்காமல் தவித்த விலங்குகளுக்குப் பிரியர்கள் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்தக் காட்சியை ஆர்.கே.ஸ்ரீஜித் புகைப்படமாகப் பதிவிட்டுள்ளார். அதேபோல் உணவு கிடைக்காமல் திண்டாடிய புறாக்களுக்குப் பெண் ஒருவர் தானியங்களைத் தாராளமாகத் தந்து உதவியதை கெளஷிக் என்பர் தன் காமிரா கண்கள் மூலம் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.