பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை குடும்பம் சகிதமாக பார்த்த `மெட்டி ஒலி’ சீரியலும் அதன் `அம்மி அம்மி மிதித்து’ பாடலும் இன்றளவிலும் விரும்பிப் பார்க்கக்கூடியவை. ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற தந்தையும் அவரது குடும்பமும் அதற்குள் நடக்கும் நிகழ்வுகளையும் சுவாரஸ்யம் குறையாமல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பியிருந்தார்கள். யதார்த்தம் மீறாமல், சீரியலுக்கான மிகைப்படுத்தல் இல்லாமல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்த இந்த சீரியலை இந்த க்வாரன்டீன் நாள்களில் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது சன் டிவி.

‘மெட்டி ஒலி’

அந்த`மெட்டி ஒலி’ நாள்கள் குறித்தும், தற்போதுள்ல சீரியல்கள், க்வாரன்டீன் நாள்கள் ஆகியவை குறித்தும் பேச `மெட்டி ஒலி’யின் சரோ கேரக்டரில் அசத்திய காயத்ரியை தொடர்புகொண்டோம்.

“க்வாரன்டீன் ரொம்ப நல்லா போயிட்டிருக்கு. ஆரம்பத்துல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண நேரம் கிடைக்குதேன்னு சந்தோஷமா இருந்தது. ஆனா, கொஞ்ச நாளுக்கு பிறகு காலைல எழுந்து சமைக்கறது, என் பாப்பாவ பார்த்துக்கிறது, வீட்டு வேலைகள்னு ஒரு வட்டத்துக்குள்ள சிக்கிட்ட மாதிரி இருக்கு. சீக்கிரமே இந்த கொரோனா சூழல் சரியாகணும்னு எல்லார் மாதிரியும் நானும் காத்துட்டிருக்கேன். இந்த சமயத்துல நேரத்தோட அருமை எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்” எனத் தனது க்வாரன்டீன் நாள்களின் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டவரிடம் `மெட்டி ஒலி’ சீரியல் மீண்டும் ஒளிபரப்புவது குறித்து கேட்டதும் உற்சாகமாக நினைவுகளை பகிரத் தொடங்கினார்.

‘மெட்டி ஒலி காயத்ரி!

“பல வருஷங்கள் கழிச்சு மக்கள் `மெட்டி ஒலி’ சீரியலுக்கு அப்ப இருந்த மாதிரியே இப்பவும் அன்பைத் காட்டுறது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. நான் மும்பைல இருந்தப்ப இந்த சீரியலுக்கான வாய்ப்பு வந்தது. மும்பையிக்கும் சென்னைக்கும் போயிட்டு போயிட்டு வரணுமே… இந்த சீரியல்ல கமிட் ஆகணுமா யோசிச்சேன். நான் தயங்கினதைப் பார்த்துட்டு இந்த சீரியலோட கதையைச் சொல்லி என்னை கன்வின்ஸ் பண்ணார் திருமுருகன் சார். சரோ என்னோட உண்மையான கதாபாத்திரத்துக்கு அப்படியே நேரெதிரான ஒரு ஆள். அதுல நடிக்கும்போது ஒரு ஆர்ட்டிஸ்ட்டா என்னோட கதாபாத்திரம் மக்கள்கிட்ட இந்த அளவுக்கு போய் சேரும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏன்னா, இந்த சீரியல் டிவியில டெலிகாஸ்ட் ஆகறதுக்கு ஒரு பத்து நாளைக்கு முன்னாடிதான் ஷூட்டிங் ஆரம்பிச்சாங்க. `மெட்டி ஒலி’ டிவியில மறுஒளிபரப்பு செய்றது இது மூணாவது தடவை. ஒவ்வொரு முறையும் மக்கள் அதே ஆதரவு தரும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றவரிடம் `மெட்டி ஒலி’ சீரியலில் மறக்க முடியாத காட்சி குறித்து கேட்டோம்,

“நான் சொன்னமாதிரி சரோ என்னோட கேரக்டருக்கு அப்படியே நேரெதிர்ங்கறதால எனக்குள்ள இருக்க காயத்ரி அப்பப்ப வெளிய வந்து, திருமுருகன் சார்கிட்ட ஒவ்வொரு எபிசோட் அப்பவும் `இந்த எபிசோட்லயாச்சும் சரோ பேசுவாளா? இப்படி எல்லாத்தையும் சகிச்சுட்டு இருக்காளே’ன்னு தாங்க முடியாம கேப்பேன். கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு மேல இந்த சீரியல் ஓடுச்சு. அப்படி இருக்கும்போது 811-வது எபிசோட்ல, அப்பா இறந்துபோகற ஒரு காட்சி வரும். அப்ப வரைக்கும் சரோ கேரக்டர் யாரையுமே எதிர்த்து பேசினதே கிடையாது. அந்த இடத்துல சரோ மட்டும்தான் பேசுவா. கிட்டத்தட்ட 30 பக்கங்களுக்கு மேல நான் மட்டுமே வசனம் பேச வேண்டியதா இருந்தது. இத்தனை எபிசோட் பேசாததுக்கும் சேர்த்து சரோ பேச வேண்டியதா இருந்தது.”

‘மெட்டி ஒலி’

“ரெண்டு நாள்களுக்கு மேல ரிகர்சல் பண்ணி அந்தக் காட்சி நடிச்சேன். எல்லா ஆர்டிஸ்ட்டும் அந்த இடத்துல எனக்கு நல்லா ஒத்துழைப்பு கொடுத்ததால, அந்தக் காட்சியை சிங்கிள் ஷாட்ல நடிச்சுக் கொடுத்தேன். சீன் முடிஞ்சதும் எல்லாரும் கைத்தட்டி அவங்களோட வாழ்த்தை தெரிவிச்சாங்க. டெல்லி குமார் அப்பா, அந்த காட்சியை நான் பண்ணும்போது ஷாட்ல இல்லை. டிவியில பார்த்துட்டு எனக்கு கால் பண்ணி `என் பொண்ணு சரோ பேசமாட்டா, பேசமாட்டான்னு சொல்லி கடைசில எங்களைப் பத்தி பேசவே முடியாத அளவுக்கு நீ பண்ணிட்ட. ரொம்ப பெருமையா இருக்குது’னு சந்தோஷப்பட்டார். அது என்னால மறக்கவே முடியாது” என்று நெகிழ்ந்தவரிடம் ரசிகர்களின் பாராட்டுகள் குறித்தும் கேட்டோம்,

“சீரியல் ஒளிபரப்பான சமயத்துல தினமும் யாராவது ஒருத்தர் கால் பண்ணி என்கிட்ட அவ்வளவு நேரம் பேசுவாங்க. `சரோ கதாப்பாத்திரம் மாதிரிதான் நானும். எனக்கும் நிறைய கஷ்டங்கள் இருக்கு. அதிகம் பேசமாட்டேன்’ அப்படி இப்படினு நிறைய ஃபோன்கால்ஸ் வரும். அப்பதான் சீரியல் பார்க்குற மக்கள் தங்களோட இந்தக் கதாப்பாத்திரங்களை கனெக்ட் பண்ணிக்கறாங்கன்னு எனக்கு புரிஞ்சது.”

‘மெட்டி ஒலி’

“ ‘மெட்டி ஒலி’ல வர்ற அஞ்சு அக்கா தங்கைகள், சேத்தன் பையா, போஸ் மாமான்னு எல்லாருமே இன்னும் ஒரு குடும்பமாதான் இருக்கோம். சீரியல் பழக்கம் தாண்டியும் எங்களுக்குள்ள நல்ல ஒரு உறவு இப்ப வரைக்கும் இருக்கு. சேத்தன், போஸ் வெங்கட் எல்லாருமே இப்போ சினிமால அடுத்தடுத்த உயரத்துக்கு போயிட்டாங்க. கூட இருந்த ஆளா இதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. இப்பவும்கூட வாட்ஸ் அப்ல, `இன்னிக்கு எபிசோட் பார்த்தியா’னு நிறைய மெசேஜ் அனுப்பி பேசிப்போம். அதே அன்போட ரசிகர்களும் இருக்கிறது எங்க டீமுக்கு கிடைச்ச பொக்கிஷம்.”

`அப்போ இப்போ’ சீரியல் டிரெண்ட் எப்படி இருக்கு?

காயத்ரி

“நிறைய மாறியிருக்கு. சமயத்துல எனக்கே `அப்ப நாம நடிக்கும்போதெலாம் இப்படி இல்லையே’னு நினைக்கத் தோணும். இந்தி சீரியல் கலாசாரம் இப்ப அதிகம் தமிழ் சீரியல்ல பார்க்க முடியுது. நம்ம மண்ணுக்கான பாரம்பரியத்தை மக்கள் அதிகம் பார்க்கிற சீரியல்கள்ல கொண்டுவர தவறிட்டு இருக்கமோன்னுகூட தோணும். முன்ன சொன்ன மாதிரி, `மெட்டி ஒலி’ சமயத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் தங்களோட கனெக்ட் பண்ணிக்க முடிஞ்சதுதான் அந்த சீரியலோட ஹிட் ரகசியம். ஆனா, இப்போ வர சீரியல்கள் ரசிகர்களை கனெக்ட் பண்ற விஷயத்தை மிஸ் பண்றாங்கன்னுதான் சொல்வேன்.”

“சீரியல் பக்கம் கொஞ்ச நாளா உங்களைப் பார்க்க முடியாம இருந்ததே?”

குடும்பத்துடன் காயத்ரி

“இடையில கல்யாணம் ஆகி, குழந்தை பிறந்ததால கொஞ்ச காலம் சீரியலை விட்டு விலகியிருந்தேன். இப்ப செகண்ட் இன்னிங்க்ஸ்ல `ரோஜா’ சீரியல் போயிட்டிருக்கு. சீரியல்ல ஹீரோயினா பண்ணிட்டிருந்த சமயத்துல மாமியார் கேரக்டர் பண்ணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அதுக்கான வாய்ப்பு வந்தப்ப, குழந்தை இருக்குறதுனால யோசிச்சேன். ஆனா, அந்த சிரமங்களையெல்லாம் சீரியல் சைட் சரி பண்ணி நல்லா பார்த்துக்கிட்டாங்க. ஒரு ஜாலியான மாமியார் கேரக்டர் இது. செகண்ட் இன்னிங்க்ஸ் நல்லா போயிட்டிருக்கு.”

̀̀`உங்க கரியரோட ஆரம்ப காலத்துல படங்களும் நடிச்சிருந்தீங்களே?”

“நான் ஸ்கூல் முடிச்ச சமயத்துல `பாசமலர்கள்’ படத்துல நடிக்கறதுக்கான வாய்ப்பு வந்தது. அரவிந்த்சுவாமி சார், ரேவதி மேம் இருக்காங்கனு நடிக்க ஒப்புக்கிட்டேன். என்னமோ தெரியலை, எனக்கு சினிமாவை விட சீரியல்தான் நல்லா செட் ஆகிடுச்சு. அதனாலதான் சீரியல் பக்கம் போயிட்டேன். இப்ப சினிமாவுல நல்ல வாய்ப்புகள் வந்தா கண்டிப்பா பண்ணலாம்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.