கொரோனா, தற்காலிகமாக நம் நாட்டையே முடக்கியிருக்கிறது. மனிதர்களை வீடுகளுக்குள் இருக்கச்செய்துள்ளது. அரசு, மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் தன்னலம் மறந்து நமக்காகச் சுழன்றுகொண்டிருக்கிறார்கள். அதே நேரம், அனுதினமும் ஆலயம் சென்று இறைவனை வழிபட்டு வந்த பக்தர்கள், அருகில் இருக்கும் ஆலயங்களுக்குக்கூட செல்லமுடியாமல் மனவருத்தத்தோடு இருக்கிறார்கள்.
பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவிலுள்ளது ஆனைமலை. மலையில் தோன்றி பாய்ந்து வரும் உப்பாற்றின் வடகரையில்…
Posted by Sakthi Vikatan on Saturday, April 18, 2020
அவர்களின் மனக் குறையைத் தீர்க்க, சக்தி விகடன், `இல்லம் தேடி வரும் இறை தரிசனம்’ என்னும் பகுதியைத் தொடங்கியிருக்கிறது. இதில், புகழ்பெற்ற சில கோயில்களில் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளைப் பதிவுசெய்து உங்களுக்காக வழங்க இருக்கிறோம். இல்லத்தில் இருந்தபடியே இறைதரிசனம் கண்டு மகிழுங்கள். தினம் ஒரு திருத்தலம் என்ற முறையில் இன்று நாம் தரிசனம் செய்ய இருப்பது, மாசாணியம்மன் திருக்கோயில்.
பொள்ளாச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது ஆனைமலை. மலையில் தோன்றி பாய்ந்து வரும் உப்பாற்றின் வடகரையில் அமைந்திருக்கிறது, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில். பக்தர்களின் துயர் துடைத்து, அவர்களைக் காப்பதில் முதன்மைக் கடவுளாகத் திகழ்கிறாள் மாசாணி. அதனால்தான் இங்கு பக்தர்களின் கூட்டம் எப்போதும் அலைமோதுவதைக் காணலாம்.

பொதுவாக, அம்மன் நின்ற கோலத்திலோ அல்லது அமர்ந்த கோலத்திலோதான் காட்சியளிப்பாள். ஆனால், இங்கு 17 அடி பிரமாண்ட உருவத்துடன் சயனக் கோலத்தில் அருள்புரிகிறாள் மாசாணியம்மன். அவளுக்கு முன்னே நடுகல் ஒன்றும் காணப்படுகிறது. அம்மனின் காலடியில் அசுரன் ஒருவன் காணப்படுகிறான். அவனை மகுடாசுரன் என்று அழைக்கிறார்கள்.
தீராத குடும்பப் பிரச்னை, மனக்குறைகள், நம்பிக்கை துரோகம், பொருள்களைக் களவு கொடுத்தல், பகை என்று வருத்தத்தோடு வரும் பக்தர்கள், கோயிலில் மகாமண்டபத்தில் இருக்கும் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்துப் பூசி வேண்டிக்கொள்கிறார்கள். வேறு எங்கும் இல்லாத வழிபாட்டு முறை இது. மிளகாய் அரைத்துப் பூசினால் அம்மன் உரிய நீதி வழங்குவாள் என்பது நம்பிக்கை.

நிறைமாத கர்ப்பிணிப் பெண் நன்னன் வேண்மானின் காவல் மரமான மாமரத்தில் மாம்பழம் பறித்துத் தின்ற குற்றத்துக்கு உரிய தண்டனையாக, அந்தப் பெண்ணைக் கொலை செய்யக் கட்டளையிடுகிறான். ஒரு மாங்கனியைத் தின்றதற்காக அந்தப் பெண் கொலை செய்யப்படுகிறாள். நன்னன் வேண்மான், ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்று தூற்றப்பட்டான்.
அந்தப் பெண் இறந்த பிறகு, அவளின் உறவினர்களும், சொன்ன சொல் மாறாத காரணத்தால், `ஒன்று மொழிக் கோசர்கள்’ என்ற சிறப்பைப் பெற்றவர்களுமான கோசர்கள், வெஞ்சினம் உரைத்து, சூழ்ச்சி செய்து நன்னன் வேண்மானைப் பழிதீர்த்து, அவனது காவல் மரமான மாமரத்தை வெட்டி அழித்தார்கள். மன்னனால் கொலை செய்யப்பட்ட அந்தப் பெண்ணை, மயானத்தில் சமாதிப் படுத்தி, அதன் மீது அவளைப் போலவே ஓர் உருவம் செய்து தெய்வமாக வழிபடத் தொடங்கினர். அவளே மாசாணியம்மன்
மாசாணியம்மன் கோயிலில் முதன்மையான தெய்வம் மாசாணியம்மன்தான். மனக்குறைகளைத் துண்டுச் சீட்டில் எழுதி அம்மனின் கையில் கட்டிவிட்டாலும், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறாள் மாசாணி. கோயில் பிராகாரத்தில் சப்தகன்னிகள், பேச்சி, துர்கை, மகிஷாசுர மர்த்தினி, பிள்ளையார், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் அருள்புரிகிறார்கள்.
நீதி மறுக்கப்படுகிறது என்று எண்ணுகிறவர்கள் மாசாணியம்மன் ஆலயத்துக்குச் சென்று முறையிடுங்கள்… அனைவருக்கும் நீதி வழங்கும் நீதி தேவதையான மாசாணி, உங்களுக்கும் நீதி வழங்கி, குற்றவாளிகளைத் தண்டிப்பாள்..!