கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. புதுச்சேரியை ஒட்டியிருக்கும் தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அதனருகில் இருக்கும் முத்தியால்பேட்டை பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது காவல்துறை.

அங்கு காவல்துறையினர் தொடர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு 11.45 மணியளவில், முத்தியால்பேட்டை பெருமாள் நாயுடு வீதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் மனைவி மேகலா என்பவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாதபடி அனைத்துச் சாலைகளும் சீல் வைக்கப்பட்டிருந்ததால் தவித்துப்போன தமிழ்ச்செல்வன், அங்கிருந்த காவலர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். அப்போது அங்கு பணியில் இருந்த ஆயுதப்படை பிரிவு காவலர் கருணாகரன் மற்றும் முத்தியால்பேட்டை காவலர் அருள்ஜோதி இருவரும் அப்பகுதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தனர்.
ஊரடங்கு அமலில் இருப்பதாலும், இரவு நேரமென்பதாலும் எந்த வாகனப் போக்குவரத்தும் இல்லை. அப்போது ஒரு வீட்டின் முன்பு வரிசையாக நான்கு ஆட்டோக்கள் நின்றிருப்பதைப் பார்த்த அவர்கள், அந்த வீட்டின் கதவைத் தட்டி “ஒருவர் பிரசவ வலியால் துடிக்கிறார். உடனே ஹாஸ்பிட்டல் போகணும். ஆட்டோ வருமா” என்று கேட்டிருக்கின்றனர்.
அப்போது, `அந்த ஆட்டோக்களுக்கு மட்டுமே நான் ஓனர். வாடகைக்கு விடுகிறேனே தவிர என்னால் ஓட்ட முடியாது’ என்று வீட்டின் உரிமையாளர் கூறியிருக்கிறார். உடனே காவலர் கருணாகரன், `எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும். ஆட்டோவை நான் எடுத்துக்கொள்ளவா?’ என்று கேட்டிருக்கிறார். வந்திருப்பவர்கள் உண்மையான போலீஸா, அவர்கள் கூறும் தகவல் உண்மையா என்று கூட அப்போது ஆய்வு செய்யாத வீட்டின் உரிமையாளரான பூமிநாதன், ஆட்டோ சாவியைக் கொடுத்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதையடுத்து ஆட்டோவை எடுத்துக்கொண்ட காவலர் கருணாகரன் பிரசவ வலியால் துடித்த மேகலாவை ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்.
அதையடுத்த 15 நிமிடங்களில் மேகலாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. மருத்துவமனை நடைமுறைகள் அனைத்தும் முடிந்தவுடன் மேகலாவின் கணவரும், அவரது தாயும் முதலில் காவலர்கள் கருணாகரன், அருள்ஜோதி இருவரையும் சந்தித்து குழந்தை பிறந்ததையும், அதற்கு பவித்ரன் என்று பெயர் வைத்த தகவலையும் தெரிவித்து நன்றி தெரிவித்து நெகிழ்ந்திருக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய காவலர் கருணாகரன், “பல வருடங்களுக்கு முன்பு நண்பர்களின் ஆட்டோவை சில முறை ஓட்டியிருக்கிறேன். அதன்மூலம் ஆட்டோவை ஓட்டிவிடலாம் என்று நம்பிக்கை இருந்தது. அதே சமயம் கர்ப்பிணியாக இருக்கும் அவரைப் பாதுகாப்பாகவும் அழைத்துச்செல்ல வேண்டுமே என்று யோசித்தேன். ஆனால், அந்தச் சகோதரி வலியால் துடித்தபோது அவரில் எனது தாயை உணர்ந்தேன். உடனே ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டேன். எனது பணிக்காலத்தில் மறக்க முடியாத நிகழ்வாக இது இருக்கும்” என்றார். மனிதநேயத்துடன் செயல்பட்ட காவலர்கள் இருவருக்கும் பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து துறை ரீதியான பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி பாராட்டியிருக்கிறார் புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி ராகுல் அல்வால்.