ஜப்பானில் பிப்ரவரி மாதம் முதன்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதனை அடுத்து , முதற்கட்டமாக 7 நகரங்களில் மட்டும் அவசரக் காலநிலை பிரகடனம் செய்த ஜப்பான் அரசு,வைரஸ் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசர காலநிலை பிரகடனம் செய்தது. ஆனால் இது மிகவும் தாமதமான நடவடிக்கை என்ற விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.

இதனிடையே ஜப்பானில் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. தொற்று ஏற்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய முடியாமல் போனது தான் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. டோக்கியோ போன்ற நகரங்களில் தொற்று ஏற்பட்ட பலருக்கு, எந்த வழியில் வைரஸ் பரவியது என்பதையே கண்டறியமுடியவில்லை. நகரக் கட்டமைப்பும், சமூக பழக்கங்களும் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஜப்பான் மருத்துவமனைகள் இதுபோன்ற ஒருபெருந்தொற்றை எதிர்கொள்ளத் தயாராக இல்லை.
மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உடைகளுக்கே மிகப்பெரிய பற்றாக்குறை நிலவுகிறது. பொது மக்கள் ரெயின் கோட்டுகளை தந்து உதவுங்கள் என ஒஸாகா மாநில ஆளுநர் கோரிக்கை விடுத்ததே இதற்குச் சான்று. இங்குக் கவலை அளிக்கக் கூடிய மற்றொரு விஷயம், மருத்துவமனைகளே வைரஸ் தொற்று மையங்களாக மாறியுள்ளன. டோக்கியோவின் ஒரு மருத்துவமனையில் , மருத்துவர்கள் செவிலியர்கள் உட்பட 87 பேருக்கு கொரோனா பரவியதே இதற்குச் சான்று.

டோக்கியோ , ஒஸாகா உள்ளிட்ட நகரங்களில் ஹோட்டல்கள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு, குறைந்த பாதிப்புள்ளவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ பணியாளர்களுக்கும் தொற்று ஏற்படுவதால், மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில் 90 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜப்பானில் ஒரு லட்சம் குடிமக்களுக்கு 7 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே இருக்கிறது.
ஜப்பானில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வரும் நிலையில், வெண்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 13 கோடி மக்கள்தொகை கொண்ட ஜப்பானில் 22 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. இதனால் அவசர சிகிச்சைக்காக வருபவர்களை மருத்துவமனைகள் திருப்பி அனுப்பும் போக்கு அதிகரித்து வருகிறது. கொரோனா அறிகுறிகளுடன் கடுமையான மூச்சுத்திணறலோடு ஆம்புலன்ஸில் வந்த ஒருவரை 80 மருத்துவமனைகள் திருப்பி அனுப்பிய கொடூரம் டோக்கியோவில் அரங்கேறியுள்ளது.

பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்த அரசு, புதிதாகச் சோதனை மையங்களை அமைத்து வருகிறது. சோனி , டொயோடோ உள்ளிட்ட நிறுவனங்களை வெண்டிலேட்டர் தயாரித்துக் கொடுக்கும் படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நிலைமை இப்படியே நீடித்தால் ஜப்பானில் கொரோனாவால் 4 லட்சம் பேர் வரை இறக்கக் கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM