கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற காவல்துறையினரும் சுகாதாரத்துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சிலர் அலட்சியமாக நடந்து வருகின்றனர். அவர்களை ட்ரோன் மூலம் போலீஸார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை கண்ணகி நகர்

Also Read: “3 மாதக் குழந்தை; குடும்பத்தைப் பிரித்த ஊரடங்கு!”- சென்னையில் விபரீத முடிவெடுத்த பீகார் தொழிலாளி

இந்தநிலையில், ஊரடங்கில் மொட்டை மாடியில் லுடோ கேம் விளையாடியவர்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் 4-வது மாடியிலிருந்து ஒருவர் விழுந்து பலியாகியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கண்ணகிநகரைச் சேர்ந்த சரோஜா என்பவர் கண்ணகி நகர் காவல் நிலையில் கொடுத்த புகாரில், “என் கணவர் பாலசுந்தரம், இருதய நோயால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

எங்களுக்கு 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர். இதில் ஒரு மகனும் மகளும் சிறுவயதிலேயே இறந்துவிட்டனர். என் மகன் ஆறுமுகத்தை (34) தவிர மற்றவர்களுக்குத் திருமணமாகிவிட்டது. ஆறுமுகத்தோடு நான் குடியிருந்து வருகிறேன். ஆறுமுகம், 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு ஆட்டோ ஓட்டிவந்தான். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோ ஓட்டாமல் வீட்டிலேயே இருந்தான்.

கண்ணகி நகர்

வேலை இல்லாததால் கொரோனா மருந்து அடிக்கும் பணிக்கு தி.நகருக்குச் சென்றுவந்தான். ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பளம் கிடைத்தது. கடந்த 16.4.2020-ம் தேதி தி.நகருக்கு வேலைக்குச் சென்றுவிட்டு மதியம் வீட்டுக்கு வந்தான். பின்னர், தன்னுடைய நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் வெளியில் சென்றான். இரவு 8.30 மணியளவில் வெங்கடேஷ், வீட்டுக்கு வந்து நானும் ஆறுமுகம் உட்பட சிலர் சுனாமி நகர் 42-வது பிளாக் மொட்டை மாடியில் லுடோ கேமை செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது மாடிப்படியில் யாரோ பேசும் சத்தம் கேட்டது. ஊரடங்கு உத்தரவில் சமூக இடைவெளி விடச் சொல்லியிருக்கும் இந்த நேரத்தில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து செல்போனில் கேம் விளையாடிக்கொண்டிருந்ததால் போலீஸ்தான் வருகிறார்களோ என்ற பயத்தில் இரண்டு பேர் தண்ணீர் தொட்டிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டனர். இன்னும் இரண்டு பேர் வேறு இடத்தில் மறைந்துகொண்டனர். அப்போது ஆறுமுகம் ஒளிய இடம் தேடி, கேபிள் வயர் வழியாகக் கீழே இறங்கினார்.

Also Read: ஊரடங்கு முடிந்த பிறகுதான் வாகனங்கள் தரப்படும்… தமிழக டிஜிபி அலுவலகம் புதிய முடிவு!

செல்போன்

அப்போது வயர் அறுந்து 4-வது மாடியிலிருந்து ஆறுமுகம் கீழே விழுந்தான். அதில் அவனுக்குத் தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் இறந்துவிட்டான் என்று கூறினான். இதையடுத்து நான், கண்ணகி நகர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தேன். அதன்பேரில் கண்ணகி நகர் போலீஸார், ஆறுமுகத்தின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனவே, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, என் மகனின் சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சரோஜா கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஊரடங்கு சமயத்தில் ஆறுமுகம் மற்றும் அவரின் நண்பர்கள் செல்போனில் ஒன்றாகச் சேர்ந்து கேம் விளையாடியுள்ளனர். அப்போது யாரோ ஒருவர் போனில், `சார்… இங்கு வாருங்கள்’ என்று பேசியுள்ளார். அதைக்கேட்ட ஆறுமுகம், வெங்கடேசன் மற்றும் அவரின் நண்பர்கள் போலீஸுக்கு பயந்து தப்பி ஓடியபோது ஆறுமுகம் கீழே விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.