கொரோனாவிலிருந்து மீண்டவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து போராட்டம்

பழனியில் கொரோனா நோயிலிருந்து மீண்டவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து மக்கள் போராட்டம் நடத்திய அவலம் நடந்துள்ளது.

கொரோனா தொற்று புதுவித தீண்டாமையை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நோய் பாதித்தவர்களைக் கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம். தற்போது கொரோனா நோயிலிருந்து மீண்டவரை ஊருக்குள் அனுமதிக்க மறுத்து மக்கள் போராட்டம் நடத்திய அவலம் நடந்துள்ளது.

image

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கொரோனாவில் இருந்து குணமான நபரை அவரது வீடுள்ள பகுதிக்குள் நுழைய மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர் திரும்பிய தகவல் அறிந்து பழனி அண்ணாநகர் பகுதி மக்கள் அவரை தங்கள் பகுதிக்குள் நுழைய விடாமல் போராட்டம் செய்தனர். அவர்களுடன் மருத்துவர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை பழனி அரசு மருத்துவமனையில் வைத்துக் கண்காணித்துக் கொள்வதாகக் கூறி மருத்துவமனையில் தங்க வைத்தனர்.

image

எதிர்ப்பு நீடித்த நிலையில், பழனி சார் ஆட்சியர் உமா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ஜெயந்தி, டிஎஸ்பி விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் அண்ணாநகர் பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குணமாகியுள்ள நபரால் கொரோனா தொற்று பரவாது என்றும், வீட்டிற்கு வந்தாலும் இன்னும் சில வாரங்கள் அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார் என்றும், எனவே மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குணமடைந்த நபரை அவரது வீட்டிற்கு வரப் பொதுமக்கள் சம்மதம் தெரிவித்தனர்.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM