புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதையடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்களுடன், ஐ.ஆர்.பி.என் காவலர்களும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி ஐ.ஆர்.பி.என் பிரிவின் துணை கமாண்டண்டாகப் பணிபுரிந்துவருபவர் சுபாஷ், பி.பி.எஸ் (Puducherry Police Service) அதிகாரி.

இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதுகாப்புப் பணிக்காக திருபுவனை பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. நேற்று முன் தினம் பணிகளுக்கு இடையில் ஓய்வெடுப்பதற்காகத் திருபுவனை காவல் நிலையம் சென்ற சுபாஷ், அங்கிருந்த பெண் காவலரிடம் ஆபாசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
சம்பந்தப்பட்ட பெண் காவலர் உயரதிகாரிகளிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில், துணை கமாண்டண்ட் சுபாஷ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது காவல்துறை தலைமை. அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 354, 354(A), 354(D), 509 (ஆபாசமான செய்கைகளைச் செய்தல், மானபங்கப்படுத்துதல்) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருபுவனை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதையடுத்து துணை கமாண்டண்டை கைது செய்த திருபுவனை போலீஸார், அவரிடம் விசாரணையை மேற்கொண்டனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக சிறையில் அடைக்க முடியாது என்பதால் காவல்நிலைய ஜாமீனிலேயே விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள் சிலர், “புகாரில் கூறியதுபோல அவர் நடந்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்தான். அந்த அதிகாரிக்கு திருவண்ணாமலைதான் சொந்த ஊர். இன்னும் திருமணமாகாத அவர் அம்மாவுடன் வசித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் படிப்பதுதான் அவரது கனவு. அது தள்ளிப் போனதால் பி.பி.எஸ்ஸில் தேர்வாகி புதுச்சேரி காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.

சிறிது நாளிலேயே விடுமுறை எடுத்துக்கொண்டு ஐ.ஏ.எஸ் தேர்வை எழுதினார். அதில் தேர்வாகவில்லை என்றதும் மீன்டும் பணியில் சேர்ந்தார். அதிலிருந்து அவ்வப்போது மனப்பிறழ்வுடன்தான் நடந்துகொள்வார். டீ கொடுத்தால் கீழே கொட்டிவிடுவார். சமயத்தில் ஷூ அணியாமல்கூட வெளியே சென்றுவிடுவார்.
அன்றைய தினமும் கழிவறை சென்றுவிட்டு அப்படியே வெளியே வந்திருக்கிறார். அந்தக் காவல் நிலையத்தில் எழுத்தர் அறைக்கு அருகில்தான் கழிவறை இருக்கிறது. அப்படி வரும்போதுதான் அங்கிருந்த அந்தப் பெண் எழுத்தர் தவறாகப் புரிந்துகொண்டு புகார் அளித்திருக்கிறார். அந்த அதிகாரியின் நிலைமை குறித்து மேலதிகாரிகளுக்கும் தெரியும். ஆனால், அதைக் கூறினால், மனப்பிறழ்வுக்கு உள்ளான அதிகாரியை ஏன் இவ்வளவு நாள் பணியில் வைத்திருந்தீர்கள் என்று கேள்வி எழும் என்பதால் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்” என்றனர்.

சம்பவத்தின் உண்மை தன்மை மற்றும் வழக்கு குறித்து விளக்கம் கேட்க திருபுவனை காவல்நிலைய வட்ட ஆய்வாளர் கணேசனுக்கு பலமுறை முயன்றும் நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதையடுத்து காவல் கண்காணிப்பாளர் (மேற்கு) ரங்கநாதனை தொடர்புகொண்டபோதும் நம் அழைப்பை ஏற்கவில்லை. இது ஒருபுறமிருக்க, திருச்சியில் பள்ளிகொண்டிருக்கும் கடவுள் பெயரைக்கொண்ட அந்த அதிகாரிக்கும், தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் அதிகாரிக்கும் இரு நாள்களுக்கு முன்பு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதை மனதில் வைத்துக்கொண்டுதான் வழக்கு பதிவு செய்திருக்கிறார் பள்ளிகொண்டிருக்கும் அதிகாரி என்றும் காவல்துறை வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.