நெல்லையை சேர்ந்தவர் குஜராத்தில் இறந்த நிலையில், அவரது மனைவியின் கோரிக்கை ஏற்று நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நன்றிகள் குவிந்துள்ளன.
நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வசிக்கும் தம்பதியினர் ரெங்கநாயகி – சுப்புராஜ். இவர்களுக்கு கடந்த 2001ல் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்து 3 வருடங்கள் வரை நெல்லையில் வேலை பார்த்துவந்த சுப்புராஜ், அதன்பிறகு மும்பை சென்று தனியார் கேட்டரிங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். 14 வருடங்களாக மும்பையிலும், கடந்த 2 வருடங்களாக குஜராத் மாநிலம் சூரத்திலும் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்துள்ளார். அவரை உடன் பணிபுரிபவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவரது உடல்நிலை மோசமான நிலையில் அவரது மனைவிக்கு போன் செய்து உடனிருந்தவர்கள் தகவல் சொல்லியுள்ளனர். மொழி புரியாத காரணத்தினால் இந்தி பேசும் நபர்களின் மூலம் கணவரின் உடல்நிலை குறித்து அறிந்த ரெங்கநாயகி அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவமனையில் உடன் தங்கி இருந்து கவனிப்பதற்கு ஆள் வேண்டும் என்பதால் ரெங்கநாயகியை மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று அழைத்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளுடன் பொருளாதாரம் நலிவடைந்த நிலையில் இருக்கும் ரெங்கநாயகி, ஊரடங்கு நேரத்தில் எவ்வாறு சூரத் செல்வது ? என்று கவலையடைந்துள்ளார். இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். விபரங்களை கேட்டறிந்த ஆட்சியர் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக தகவல்களை தெரிவித்துள்ளார். அத்துடன் ரெங்கநாயகி வீட்டிற்கு அரிசி, மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து சிகிச்சைப் பலனின்றி சுப்புராஜ் உயிரிழந்தார். இந்த தகவல் கிடைத்ததும் மனமுடைந்த ரெங்கநாயகி, கணவரின் உடலை காண முடியாத நிலை ஏற்படுமோ என சோகத்தில் மூழ்கினார். பின்னர் மீண்டும் மாவட்ட ஆட்சியரை நாட, அவரது முயற்சியால் சுப்புராஜ் உடல் 2000 கிலோ மீட்டர் கடந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தனது கணவரின் உடலை கொண்டு வந்து சேர்த்த மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகருக்கு ரெங்கநாயகி மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டார். ஆனாலும் இரண்டு பிள்ளைகளுடன் அவரது வாழ்க்கையின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கொரோனா : வௌவால்களை கடவுளாக வழிபடும் விநோத கிராமம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM